Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகிப்து அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

எகிப்து அதிபருடன் பிரதமரின் சந்திப்பு


பிரதமர் திரு நரேந்திர மோடியை, எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் மேன்மைதங்கிய திரு. அப்தெல் ஃபத்தா அல்-சிசி, அல்-இத்திஹாடியா அரண்மனையில்  2023 ஜூன் 25 அன்று வரவேற்றார்.

 

2023 ஜனவரியில் அதிபர் சிசி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றதையும் அன்புடன் நினைவு கூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகளுக்கு அது அளித்துள்ள உத்வேகத்தை வரவேற்றனர். எகிப்து அமைச்சரவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள  ‘இந்தியா பிரிவு ’ இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஒரு பயனுள்ள கருவி என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

இரு நாடுகளுக்கும் இடையேயான  ஒத்துழைப்பை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, புதுப்பிக்கவல்ல எரிசக்தி, விவசாயம், சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் போன்றவற்றை மேலும் ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

 

உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம் மற்றும் உலகலாவிய தென்பகுதி நாடுகளின் ஒருங்கிணைந்த குரலின் தேவை ஆகிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி, ஜி -20-ல் மேலும் ஒத்துழைப்பது குறித்து பிரதமரும், அதிபர்  சிசியும்  விவாதித்தனர். 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கு அதிபர் சிசியை வரவேற்பதைப் பிரதமர் எதிர்நோக்கியுள்ளார்.

 

இருதரப்பு உறவை “உத்திகள் வகுத்தலில் ஒத்துழைப்பு ” என்ற நிலைக்கு உயர்த்துவதற்கான ஒப்பந்தம் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டது. வேளாண்மை, தொல்லியல் மற்றும் தொல்பொருட்கள், போட்டிச் சட்டம் ஆகிய துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

 

எகிப்து பிரதமர் மேன்மைதங்கிய திரு. முஸ்தபா மட்பௌலி மற்றும் பல மூத்த கேபினட் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

***

AD/SMB/DL