Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகிப்து அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த அறிக்கை

எகிப்து அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த அறிக்கை


மாண்புமிகு அதிபர் அப்தெல் ஃபாட்டா அல் சிசி அவர்களே, மாண்புமிகு அமைச்சர்களே, எகிப்திய மற்றும் இந்தியக் குழு உறுப்பினர்களே, ஊடகங்களில் இருந்து வந்துள்ள நண்பர்களே,

மாண்புமிகு திரு. அப்தெல் ஃபாட்டா அல் சிசி அவர்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள முதல் அரசுமுறை பயணத்தின்போது வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு அதிபர் அவர்களே நீங்கள் உங்கள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய ஒருவர். உங்களை இங்கே பார்ப்பதில் 125 கோடி இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். எகிப்து, ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் இணைக்கும் இயற்கை பாலமாகும். உங்கள் நாட்டு மக்கள் மிதவாத இஸ்லாமிய சமயத்தின் குரலாக விளங்குகின்றனர். ஆப்பிரிக்காவிலும் அரபு உலகத்திலும் மண்டல அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் முக்கிய காரணியாக உங்கள் நாடு திகழ்கிறது. எகிப்து வளரும் நாடுகளின் நலனைப் பாதுகாப்பதில் தலைச் சிறந்து விளங்குகிறது.

நண்பர்களே,

நமது கூட்டுறவின் அமைப்பு மற்றும் பொருளடக்கம் குறித்து அதிபரும் நானும் விரிவான பேச்சுக்களை நடத்தினோம். நமது தொடர்புகளை விரைவுப்படுத்தும் வகையில் செயல் அடிப்படையிலான அலுவல் பட்டியலுக்கு நாங்கள் ஒப்புதல் அளித்தோம்.

இந்த அலுவல் பட்டியல் கீழ்க்கண்ட பண்புகளை கொண்டதாக இருக்கும்.

• நமது சமூக பொருளாதார முன்னுரிமைகளுக்கு ஏற்றதாக அமையும்

• வர்த்தக மற்றும் முதலிட்டு உறவுகளை மேம்படுத்துவதாக இருக்கும்

• நமது சமுதாயங்களை இணைத்து பாதுகாப்பதாக இருக்கும்

• நமது மண்டலத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க உதவுவதாக இருக்கும்

• மண்டல மற்றும் சர்வதேச பிரச்சனைகளில் நமது ஈடுபாட்டை மேம்படுத்துவதாக இருக்கும்

நண்பர்களே,

நமது பேச்சுக்களின் போது நானும் அதிபர் சிசியும் நமது ஒத்துழைப்பின் பல்வேறு தூண்கள் அடிப்படையில் நிர்மாணிக்க ஒப்புக்கொண்டோம். உயர்நிலை அரசியல் பரிவர்த்தனைகளின் வேகத்தை வலுப்படுத்தவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். நமது சமுதாயங்களின் பொருளாதார வளத்துக்கு வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகள் மிகவும் அவசியமானவை என்பதை ஏற்றுக்கொண்டோம். எனவே நமது இரண்டு பொருளாதாரங்களிடையே பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவை அதிக அளவில் பெருகுவது நமது முக்கிய முன்னுரிமை என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த விளைவை நோக்கிய முக்கியமான விஷயத்தில் ஒன்றாக இன்று கையெழுத்திடப்பட்ட கடல்சார் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமையும். இருநாடுகளுக்குமிடையே புதிய வர்த்தகம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டுமென தனியார் துறையினரை நான் வலியுறுத்துகிறேன். பொருளாதார ஈடுபாட்டை பலவகைகளில் விரிவு படுத்தும் வகையில் நம்மிடையேயான வேளாண்மை, திறன் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சுகாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்.

நண்பர்களே,

வளர்ந்து வரும் அடிப்படை வாதம், பெருகி வரும் வன்முறை, பரவி வரும் பயங்கரவாதம் ஆகியன நமது இருநாடுகளுக்கு மட்டுமின்றி மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகள் சமுதாயங்களுக்கு உண்மையான அச்சுறுத்தல் என்பதில் அதிபரும் நானும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம்.

இந்த வகையில் நமது பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தி கீழ்க்கண்டவைகளை நோக்கியிருக்குமாறு அமைப்போம்:
• பாதுகாப்பு வர்த்தகம், பயிற்சி, திறன் மேம்பாட்டை விரிவாக்குதல்

• பயங்கரவாதத்தை எதிர்க்க தகவல் மற்றும் நடைமுறை பரிமாற்றத்தை விரிவாக்குதல்

• கணிணி இணையதள பாதுகாப்பில் உருவாகும் சவால்கள் தொடர்பான ஒத்துழைப்பு

• போதை மருந்து கடத்துதல், பலநாடுகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் ஆகியவற்றை எதிர்ப்பதில் இணைந்து பாடுபடுதல்

தொன்மையான பெருமைமிகு இரண்டு நாகரீகங்கள், வளமான பண்பாட்டு பாரம்பரியம் மிக்கவர்கள் என்ற முறையில் நமது மக்களுக்கு இடையே நேரடித் தொடர்புகளையும் பண்பாட்டு பரிவர்த்தனைகளையும் மேம்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாண்புமிகு அதிபர் அவர்களே,

ஐ.நா. பாதுகாப்பு சபையில் எகிப்து தனது தற்போதைய பதவிகாலத்தில் மேற்கொண்ட நல்ல பணிகளை இந்தியா பாராட்டுகிறது. மண்டல, உலக பிரச்சனைகள் தொடர்பாக ஐ.நா வுக்கும் உள்ளேயும் வெளியேயும் மேலும் நெருங்கி ஆலோசிப்பது என்ற எங்களது முடிவு பொது நன்மையை மேம்படுத்தும். அடுத்தவாரம் நடைபெற ஜி-20 உச்சி மாநாட்டில் எகிப்து பங்கேற்பதை நாம் வரவேற்கிறோம். ஜி-20 விவாதங்களில் உங்கள் பங்கேற்பு அதன் மதிப்பையும் பொருளடக்கத்தையும் வளப்படுத்தும் என்று நம்புகிறோம்.

மாண்புமிகு அதிபர் அப்தெல் ஃபாட்டா அல் சிசி அவர்களே,

உங்களுக்கும் உங்களது குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கும் எகிப்திய மக்களுக்கும் வெற்றி உண்டாக வாழ்த்துகிறேன். உங்களது மேம்பாட்டு பொருளாதார, பாதுகாப்பு இலக்குகள் நிறைவேற இந்தியா நம்பத்தகுந்த கூட்டாளியாக செயல்படத் தயாராக இருக்கிறது.

உங்களுக்கு நன்றி,

உங்களுக்கு மிகுந்த நன்றி.

*****