இந்தியாவின் உள்நாட்டு அணுமின் சக்தி திட்டங்களை விரைவுபடுத்தவும், நாட்டின் அணுசக்தி தொழில் துறையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் அழுத்த கனநீர் அணுஉலைகளின் (Pressurized Heavy Water Reactors – PHWR) 10 பிரிவுகளை அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அணுஉலைகளின் ஒட்டுமொத்த மின்உற்பத்தி திறன் 7,000 மெகாவாட்டாக இருக்கும். 10 அழுத்த கனநீர் அணுஉலை திட்டத்தின் மூலம், அணு மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்க வழி ஏற்படும்.
இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள 22 அணுஉலைகள் மூலம், அணு மின்சார உற்பத்தித் திறன் 6,870 மெகாவாட்டாக உள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அணுமின் திட்டங்கள் மூலம், 2021-2022-ம் ஆண்டில் மேலும், 6,700 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக தேசத்தையும், மக்களையும் மையமாகக் கொண்டே திட்டங்களை அரசு செயல்படுத்திவரும் நிலையில், இந்தியாவின் அணுசக்தித் துறையில், முதன்முறையாக ஒரே நேரத்தில், முழுவதுமாக உள்நாட்டு முயற்சியில் 10 பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. இது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ், அணுசக்தித் துறையில் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
உள்நாட்டு தொழில் துறைக்கு சுமார் ரூ.70,000 கோடி அளவுக்கு உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், உயர் தொழில்நுட்பத்தில் நமது உள்நாட்டு தொழில்திறன் அடிப்படையில், வலுவான அணுசக்தித் துறையை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்கை இணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவின் அணுசக்தி தொழில் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
இந்தத் திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதால், அதிகபட்ச செலவையும், நேரத்தையும் மிச்சப்படுத்தி, பொருளாதாரத்துக்கு வலுசேர்க்க முடியும். இது நேரடியாகவும், மறைமுகமாவும் 33,400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்திக்கான ஆர்டர்கள், உள்நாட்டு தொழில் துறைக்கே வழங்கப்பட உள்ளது. இது, மிகப்பெரும் அணு உற்பத்தி திறன் மையம் என்ற இந்தியாவின் பெயருக்கு வலுசேர்க்கும்.
உயர் தர பாதுகாப்பு திறனுடன், அதிநவீன தொழில்நுட்பத்தில் இந்தியா அண்மையில் வடிவமைத்துள்ள 700 மெகாவாட் அழுத்த கனநீர் அணுஉலைகளின் பகுதியாக 10 அணுஉலைகளும் இருக்கும். நமது தொழில்நுட்பத் திறனை வடிவமைக்கும் இந்திய விஞ்ஞானிகளின் திறன் மீதான வலிமையான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த ஒப்புதல் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவை, இந்தியாவின் அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் அணுசக்தி தொழில் துறையினரின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்தத் திட்டமானது, உள்நாட்டு அழுத்த கனநீர் அணுஉலை தொழில்நுட்பத்தில் நமது அணுசக்தி விஞ்ஞானிகளின் திறனை வெளிப்படுத்துகிறது. சுமார் 40 ஆண்டுகளாக அழுத்த கனநீர் அணுஉலைகளை அமைப்பதிலும், செயல்படுத்துவதிலும், இந்தியாவின் சாதனைகள், உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் எரிசக்தி தொகுப்பில், தூய்மையான மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அரசின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சரவையின் முடிவு வெளிப்படுத்துகிறது. மேலும், நாட்டில் உள்ள தொழில் துறையினரின் நீண்டகால மின் தேவையை நிறைவேற்ற வேண்டும் மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் வளர்ச்சி உத்திகளை வகுக்க வேண்டும் என்ற கொள்கைகளின் அங்கமாக உள்ளது.
நீடித்த வளர்ச்சி, எரிசக்தியில் சுயசார்புடன் இருத்தல், வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சர்வதேச முயற்சிகளை ஊக்குவித்தல் என்ற இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு இந்த அணுஉலைத் திட்டங்கள் ஆதரவாக உள்ளன.
***
A vital decision of the Cabinet that pertains to transformation of the domestic nuclear industry. https://t.co/YupSIpL0Rv
— Narendra Modi (@narendramodi) May 17, 2017