Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்


எனது அமைச்சரவை தோழர்கள் திரு நிதின் கட்கரி அவர்களே, நரேந்திர சிங் தோமர் அவர்களே, பிரகாஷ் ஜவடேகர் அவர்களே, தர்மேந்திர பிரதான் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மேயர்களே, சகோதர, சகோதரிகளே வணக்கம்!

நமது விவசாய நண்பர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, உயிரி எரிபொருள் விஷயத்தில் எவ்வாறு எளிதாக அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டார்கள் என்பதை விளக்கினர். இது அவர்களது நம்பிக்கையைப் பிரதிபலித்தது. தற்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும், மிகப்பெரிய தூய்மை எரிசக்தி பிரச்சாரத்தின் மூலம் நாட்டின் வேளாண் துறை பெரும் பயன் அடைந்துள்ளது இயல்பே. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்தியா மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எத்தனால் தொழில் பிரிவின் வளர்ச்சிக்கான விரிவான திட்ட வரைவை நான் இன்று வெளியிடும் வாய்ப்பைப் பெற்றேன். எத்தனால் உற்பத்திக்கும் அதை நாடு முழுவதும் விநியோகிப்பதற்கும் இ-100 என்ற முன்னோடித் திட்டம் புனேயில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, நான் புனே மேயரையும், மக்களையும் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே, 7-8 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனால் பற்றி அரிதாக விவாதிக்கப்பட்டு வந்தது. யாரும் அதைப்பற்றி பெரிதாகப் பேசவில்லை. ஆனால் இப்போது, 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்றாக எத்தனால் உருவாகி உள்ளது. எத்தனால் மீது கவனம் செலுத்துவது என்பது சுற்றுச்சூழல் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், விவசாயிகளின் வாழ்க்கையிலும் சாதகமான அம்சங்களையும் உருவாக்கும். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்க வேண்டும் என்ற இலக்கை 2025ல் அடைய வேண்டும் என அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கு முன் இந்த இலக்கை அடைவதற்கான காலவரம்பாக 2030ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது இலக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நண்பர்களே, இத்தகைய பெரிய முடிவை எடுக்கும் துணிச்சல் கடந்த ஏழு ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு வரை, சராசரியாக 1.5 சதவிகிதம் எத்தனால் மட்டுமே பெட்ரோலில் கலக்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால் இப்போது இது 8.5 சதவிகிதமாக இருக்கிறது. 2013-14-ல் நாட்டில் 38 கோடி லிட்டர் எத்தனால் வாங்கப்பட்டு இருந்தது. இதன் அளவு தற்போது 320 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது. எட்டு மடங்கு அதிக அளவில் எத்தனால் வாங்குவதில் பெரும் பங்கு நாட்டின் கரும்பு விவசாயிகளுக்கு பலன் அளித்தது.

21ஆம் நூற்றாண்டு இந்தியா, எரிசக்தியை நவீன சிந்தனையில் இருந்தும் 21ஆம் நூற்றாண்டின் நவீன கொள்கைகளில் இருந்தும்தான் பெற முடியும். இந்த விதமான சிந்தனையுடன் அரசு ஒவ்வொரு துறையிலும் கொள்கை முடிவுகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இன்று, நாட்டில் எத்தனால் உற்பத்திக்கும் கொள்முதலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சர்க்கரை உற்பத்தி அதிகம் உள்ள 4-5 மாநிலங்களிலேயே குவிந்துள்ளன. எத்தனால் உற்பத்தியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக இப்போது உணவு தானிய அடிப்படையிலான வடிசாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. வேளாண் கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கு நவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான தொழிற்சாலைகள் நாட்டில் நிறுவப்பட்டு வருகின்றன.

நண்பர்களே, பருவநிலை நீதியை நிலைநாட்டுவதில் இந்தியா வலுவான ஆதரவை வழங்கும் நாடாக இருக்கிறது. ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொகுப்பு என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்கும் சர்வதேச சூரிய ஆற்றல் உடன்பாட்டை உருவாக்குதல் மற்றும் பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முன்முயற்சிக்கான கூட்டணி போன்ற நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. பருவநிலை மாறுதல் செயல்திறன் குறியீட்டு எண் வரிசையில் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. பருவநிலை மாறுதல் காரணமாக பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் குறித்து இந்தியா விழிப்புடன் இருப்பதுடன், அதற்காக ஆக்கரீதியாக செயல்பட்டும் வருகிறது.

நண்பர்களே, பருவநிலை மாறுதலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரியமான அணுகுமுறையில் கடந்த 6-7 ஆண்டுகளில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கான நமது திறன் 250 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நிறுவப்பட்ட புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திறன் அடிப்படையில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இன்று இந்தியா விளங்குகிறது. சூரிய எரிசக்தி ஆற்றலைப் பொறுத்தவரையில் கடந்த ஆறு ஆண்டுகளில் 15 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

முற்போக்கான அணுகுமுறையின் மூலம் நாடு குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தி உள்ளது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், கடற்கரையை சுத்தப்படுத்துதல் அல்லது தூய்மை இந்தியா என்பன போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரச்சாரத்தில் இன்று நாட்டின் சாதாரண குடிமகனும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுக்க முடிகிறது. 37 கோடிக்கும் அதிகமான எல்இடி விளக்குகள் மற்றும் 23 லட்சத்திற்கும் அதிகமான மின்சிக்கன காற்றாடிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதனுடைய சாதகமான பலன் அடிக்கடி எடுத்துரைக்கப்படுவது இல்லை. இதேபோன்று கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது, சௌபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்புகள் வழங்குவது போன்றவை அந்த மக்கள் விறகைச் சார்ந்து இருப்பதை வெகுவாகக் குறைத்துள்ளன. மாசுபடுதலை இவை குறைத்துள்ளதோடு மக்களின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்தவும் உதவி உள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலுப்படுத்தி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வளர்ச்சிப் பணிகளை நிறுத்த வேண்டிய தேவை இல்லை என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டுகின்ற ஒரு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது.

நண்பர்களே, பொருளாதாரமும், சூழலியலும் ஒன்றாக இணைந்து முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். இந்தப் பாதையைத்தான் இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது .நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு கடந்த சில ஆண்டுகளில் நமது காடுகளின் பரப்பளவு 15,000 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு அதிகரித்து உள்ளது.

நம் நாட்டில் புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. அதே போன்று கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கையும் 60 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்து உள்ளது.

சுய-சார்பு இந்தியா இயக்கத்தின் முக்கிய அம்சங்களாக தூய்மை மற்றும் திறன் மிகுந்த எரிசக்தி அமைப்புகள், பேரிடர்களைத் தாங்கி நிற்கும் நகர உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் திட்டமிடப்பட்ட சூழலியல் மீட்பு ஆகியன விளங்குகின்றன. சுற்றுச்சூழல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளின் காரணமாக நாட்டில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். காற்று மாசு அடைவதைத் தடுப்பதற்காக தேசிய தூய்மை காற்றுத் திட்டம் மூலமாக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் இந்தியா செயலாற்றி வருகிறது. நீர்வழிப் பாதைகள் தொடர்பான பணிகள் மற்றும் பல்முனைய இணைப்பு ஆகியன பசுமை போக்குவரத்து இயக்கத்தை வலுப்படுத்துவதோடு நாட்டின் போக்குவரத்து திறனையும் மேம்படுத்துகின்றன. இன்று நாட்டில் மெட்ரோ ரெயில் சேவை ஐந்து நகரங்களில் இருந்து 18 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதனால் தனிநபர் வாகனப் பயன்பாடு குறைக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் ரெயில்வே கட்டமைப்பின் பெரும்பகுதி மின்சார மயமாக்கப்பட்டு உள்ளது . நாட்டில் உள்ள விமான நிலையங்கள் சூரிய ஆற்றலில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் விரைவாக மாற்றம் பெற்று வருகின்றன. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு ஏழு விமான நிலையங்கள் மட்டுமே சூரிய எரிசக்தி வசதியைப் பெற்றிருந்தன. ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 50க்கும் மேலாக அதிகரித்து உள்ளது. 80 விமான நிலையங்களுக்கும் மேலாக எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது எரிசக்தி திறனை அதிகரிக்கிறது.

எதிர்காலத்தில் கேவடியா நகரில் பேட்டரி அடிப்படையிலான பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே இயக்கக் கூடிய வகையிலான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நீர் சுழற்சி என்பது நேரடியாக பருவநிலை மாறுதலோடு தொடர்புடையதாக இருக்கிறது. நீர் சுழற்சியில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு நேரடியாக நீர் பாதுகாப்பை பாதிக்கிறது. ஜல்ஜீவன் இயக்கம் மூலமாக நாட்டில் நீர்வள ஆதாரங்களை உருவாக்கவும், பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு பக்கம் அனைத்து வீடுகளும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன, மறுபக்கம் அடல் பூஜல் திட்டம் மற்றும் மழைநீரைச் சேமித்தல் போன்ற பிரச்சாரங்களின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக மறுசுழற்சி மூலம் மூல வளங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடிய 11 தொழில்பிரிவுகளை அரசு அடையாளம் கண்டுள்ளது. கச்ரா முதல் கஞ்சன் வரையிலான இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளில் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த இயக்கம் தற்போது போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. அனைத்துவிதமான நெறிமுறைப்படுத்தும் அம்சங்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்த கூறுகள் அடங்கிய இது தொடர்பான செயல்திட்டம் வரும் மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நண்பர்களே, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். நீர், காற்று, நிலத்தின் சமன்பாட்டைப் பராமரிக்க ஒன்றுபட்ட முயற்சியில் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் ஈடுபட்டால்தான் நமது வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை நம்மால் அளிக்க முடியும். நமது பூமியும், சுற்றுச்சூழலும், நமது கனவுகளுக்கு வாய்ப்புகளை வழிங்கியுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலனில் சிரத்தை கொண்டு, ஆரோக்கியத்தைப் பேணுவதுடன், உங்கள் குடும்பத்தினரையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளில் மெத்தனமாக இருக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு, உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்பு துறப்பு; இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழி பெயர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 

——