Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக இளைஞர் திறன் தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

உலக இளைஞர் திறன் தின கொண்டாட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்


புதிய தலைமுறையின் திறன் மேம்பாடு தேசிய அவசியமாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த தலைமுறை நமது குடியரசை 75 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகளை நோக்கி கொண்டு செல்லப் போகிறது என்பதால், இது தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு அடித்தளமாக விளங்கும் என்று அவர் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் பெற்ற பயன்களின் அடிப்படையில், திறன் இந்தியா இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி பிரதமர் உரையாற்றினார்.

இந்திய கலாச்சாரத்தில் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், திறன் மேம்பாடு, அதிதிறன் மற்றும் சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். விஜயதசமி, அட்சய திரிதியை, விஸ்வகர்மா பூஜை போன்ற திறமைகளைக் கொண்டாடும் பாரம்பரியத்தை திரு மோடி சுட்டிக்காட்டி, இவற்றில் திறன்கள், கைத்தொழில்கள் ஆகியவை வழிபடப்படுவதாக தெரிவித்தார். இந்தப் பாரம்பரியத்தைக் குறிப்பிட்ட பிரதமர், தச்சர்கள், மட்பாண்டங்கள் செய்யும் குயவர்கள், உலோக வேலை செய்பவர்கள், தூய்மைப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற கைத்திறன் பணியாளர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீண்டகாலமாக அடிமைப்பட்டு கிடந்ததன் காரணமாக, நமது சமூக, கல்வி முறையின் முக்கியத்துவம் நீர்த்துவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கல்வி நாம் எதைச் செய்ய வேண்டும் என உணர்த்துகையில், திறன் நமக்கு உண்மையான செயல்பாட்டுக்கு வழிகாட்டுகிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இதுதான் திறன் இந்தியா இயக்கத்தின் வழிகாட்டு கொள்கையாக இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். ‘பிரதமர் கவுசல் விகாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ், 1.25 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

அன்றாட வாழ்க்கையில் திறன்களின் அவசியம் பற்றி வலியுறுத்திய பிரதமர், சம்பாதிப்பதுடன் கற்றல் என்பது நின்றுவிடக்கூடாது என்றார். திறன் மிக்க மனிதர்தான் இன்றைய உலகில் வளர முடியும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், நாடுகளுக்கும் பொருந்தும். உலகத்துக்கு சிறந்த திறன் கொண்ட மனித வளத்தீர்வுகளை இந்தியா வழங்குவதில், நமது இளைஞர்களின் திறமை சார்ந்த உத்தியின் முக்கியத்துவம் அவசியமாகும் என அவர் தெரிவித்தார். உலகத்திறன் வெளி நடவடிக்கையைப் பாராட்டிய அவர், இதில் தொடர்புடையவர்கள் திறன், திறன் மேம்பாடு, அதி திறன் ஆகியவற்றைத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிவேகமாக மாறி வரும் தொழில்நுட்பம் காரணமாக, இந்த திறன்களுக்கு மிகப்பெரிய தேவை இருக்கும் என்பதால், இவற்றை விரைவுபடுத்துமாறு அவர் வலியுறுத்தினார். பெருந்தொற்றுக்கு எதிரான செயல்திறன் மிக்க போராட்டத்திற்கு இந்தப் பணியாளர் சக்தி பெரிதும் உதவியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

நலிந்த பிரிவினரின் திறன் குறித்து பெரிதும் வலியுறுத்தி வந்த பாபாசாஹிப் அம்பேத்கரின் தொலைநோக்கு பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.  திறன் இந்தியா இயக்கத்தின் வாயிலாக, பாபாசாஹிப்பின் தொலைநோக்கு கனவை நாடு பூர்த்தி செய்து வருவதாக திரு மோடி தெரிவித்தார். உதாரணமாக, ஜிஓஏஎல் என்னும் ‘கோயிங் ஆன்லைன் அஸ் லீடர்ஸ்’ போன்ற திட்டங்கள், கலை, கலாச்சாரம், கைவினை, ஜவுளித் தொழில் ஆகியவற்றில் பழங்குடியினருக்கு உதவி வருகிறது. பழங்குடியினருக்கான டிஜிடல் எழுத்தறிவு அவர்களது தொழில் மேம்பாட்டுக்கும் உதவுகிறது. இதேபோல, வன் தன் யோஜனா, பழங்குடியினருக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி சிறப்பாக இணைத்துள்ளது. ‘’வருங்காலத்தில், இதுபோன்ற பிரச்சாரங்களை மிகப் பரவலாக நாம் மேற்கொண்டு, திறன்கள் மூலமாக நம்மையும், நாட்டையும், தற்சார்பு மிக்கதாக உருவாக்க வேண்டியது அவசியம்’’ என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.