Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் பற்றிய இணைய கருத்தரங்கில் பிரதமரின் உரை

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் பற்றிய இணைய கருத்தரங்கில் பிரதமரின் உரை


வணக்கம்!

நிதிநிலை அறிக்கை குறித்து தொடர்ந்து பல்வேறு இணையதள கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி உற்பத்தி துறையை அதாவது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதற்காக இன்று அனைத்து முக்கிய சகாக்களுடனான ஆலோசனை நடைபெறுகிறது.

நண்பர்களே,

கடந்த 6-7 ஆண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தை பல்வேறு கட்டங்களில் ஊக்குவிப்பதற்காக ஏராளமான நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று  வேகத்தையும் அளவையும் அதிகரிப்பதற்காக ஏராளமான மிகப்பெரும் நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

கடந்த ஒரு ஆண்டில் கொரோனா அளித்த அனுபவத்தைத் தொடர்ந்து, இது இந்தியாவிற்கு மட்டுமான வாய்ப்பல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

 

இது, இந்தியா மற்றும் உலக நாடுகளை நோக்கிய கடமையாகும். எனவே இந்த பாதையை நோக்கி நாம் விரைவாக முன்னேற வேண்டும். பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவையும் உற்பத்தி எவ்வாறு மாற்றியமைக்கிறது, எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஒரு சூழலியல் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தங்களது உற்பத்தித் திறனை அதிகரித்ததன் வாயிலாக வளர்ச்சியடைந்துள்ளதை நாம் கண்டுள்ளோம். உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதால்  நாட்டில் கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.

இதே அணுகுமுறையுடன் இந்தியாவும் விரைவாக பயணித்து முன்னேற விரும்புகிறது. உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக இந்தத் துறையில் நமது அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. நமது கொள்கைகளும் வியூகங்களும் அனைத்து வகைகளிலும் தெளிவாகவே உள்ளன. குறைந்தபட்ச அரசு  தலையீடு, அதிகபட்ச ஆளுகை என்ற எங்களது சிந்தனையுடன்  எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்திய உற்பத்திப் பொருட்கள் சர்வதேச அளவில் போட்டியிடும் ஆற்றல் பெறுவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நமது பொருட்களுக்கான அடையாளம், உற்பத்தி விலை, பொருட்களின் தரம், சர்வதேச சந்தையில் அதன் ஆற்றல் முதலியவற்றை உருவாக்குவதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நமது பொருட்கள் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், நவீன தொழில்நுட்பங்களுடனும், நீண்டகாலம் பயன்படும் வகையிலும், குறைந்த விலையிலும் வழங்கப்பட வேண்டும்.

அதிக போட்டி வாய்ந்த துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீடுகளை நாம் ஈர்க்க வேண்டும். இந்தப் பணியில் உங்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு முன்னேற அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், இணக்க சுமையை குறைத்தல், போக்குவரத்து செலவை குறைக்க  ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல் அல்லது மாவட்ட அளவிலான ஏற்றுமதி மையங்களை அமைத்தல் என ஒவ்வொரு கட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு விஷயத்திலும் அரசின் தலையீடு என்பது தீர்வுகளை வழங்காமல் கூடுதல் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதில் எங்களது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆகவே சுய கட்டுப்பாடு, சுய அங்கீகாரம், சுய சான்றிதழ் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம், அதாவது நாட்டின் குடிமக்கள் மீது நம்பிக்கை கொண்டு முன்னேறுவது.

இந்த ஆண்டு 6000-க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில அளவிலான இணக்க சுமைகளை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதேபோல ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏதுவாக சர்வதேச தளத்தை உருவாக்கும் பணியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், சிறிய கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தத் தளம் உதவிகரமாக இருக்கும்.

நண்பர்களே,

உற்பத்தியையும் ஏற்றுமதி களையும் விரிவுபடுத்துவதுதான் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பிட்ட இடங்களிலிருந்து, குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போக்கை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலுமிருந்தும் ஏன் ஏற்றுமதி செய்யக் கூடாது? அனைத்து விதமான பொருட்களும் ஏன் ஏற்றுமதி செய்யப் படக்கூடாது? முந்தைய திட்டங்களுக்கும், தற்போதைய அரசின் திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

முன்பு தொழில்துறை ஊக்கத்தொகை உள்ளீட்டு அடிப்படையிலான மானியங்களாக இருந்தன. தற்போது அவை, போட்டி நடைமுறை மூலம் இலக்கு மற்றும் செயல்திறன் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக 13 துறைகள் உற்பத்தியுடன் கூடிய  ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.   எங்களது உறுதித்தன்மையை எடுத்துரைக்கிறது.

நண்பர்களே,

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் வழங்கப்படும் துறைகள் மட்டுமே இதனால் பயனடைவதில்லை, அந்த துறையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து சூழலியலும் வெகுவாக பயனடையும். வாகன மற்றும் மருந்து துறைகளுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுவதால் வாகன உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுக்கான கச்சா பொருட்கள் போன்றவற்றிற்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதன் போக்கு குறைக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட பேட்டரிகள், சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் சிறப்பு எஃகு ஆகியவற்றின் உதவியுடன் நாட்டின் எரிசக்தித் துறை நவீனமயமாக்கப்படும். அதேபோல், ஜவுளித்துறை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் வழங்கப்படுவதால், நமது ஒட்டு  மொத்த வேளாண் துறையும் பயனடையும்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் கோரிக்கைக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு வழங்கின. அதன்பிறகு ஐநா பொதுச்சபையில் ஒருமனதாக இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீர்ப்பாசன வசதி குறைவாக உள்ள பகுதிகளில் தினை வகைகளைப் பயிரிடும் சிறு விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஊட்டச்சத்து தன்மைக்காக பலவகை சிறுதானியங்களை பயிரிடவும், உலகளவில் அவற்றை எடுத்துச் செல்லவும் இந்திய விவசாயிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு. உலகளவில் நாம் எவ்வாறு யோகாவை பிரபலப்படுத்தினோமோ அதே போல் நாம் அனைவரும், குறிப்பாக வேளாண் பதப்படுத்துதல் துறையில் ஈடுபடுவோர், சிறுதானியங்களை பெரும் உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம்.

2023-ஆம் ஆண்டிற்கு போதிய கால அவகாசம் இருப்பதால் இது தொடர்பான உலகளாவிய பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளோடும் இதனை நாம் மேற்கொள்ளலாம்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதைப் போல, இந்தியாவில் விளையும் சிறு தானியங்கள் போன்ற தினை வகைகள் நோயுற்றிருக்கும் மக்களுக்குப் போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கி அவர்களைப் பாதுகாப்பதில் பேருதவியாக இருக்கும்.

இந்தியாவின் முன்முயற்சியை ஏற்று 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து இந்தியாவிலும் உலகளவிலும் சிறுதானியங்களின் தேவை மிக வேகமாக அதிகரிக்கும். நமது விவசாயிகள், குறிப்பாக சிறு விவசாயிகள் இதன் மூலம் மிகவும் பயனடைவார்கள். இந்த வாய்ப்பை வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் ஈடுபடும் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக உற்பத்தியில் 5% ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதாவது உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் மூலம் மட்டுமே இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 520 பில்லியன் டாலர்கள் அளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஊக்கத்தொகைத் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள துறைகளில் பணி புரிவோரின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இந்தத் திட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

நண்பர்களே,

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் தொடர்பான அறிவிப்புகள் வேகமாக அமல்படுத்தப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம் ஹார்டுவேர் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் உற்பத்தியில் 2 ஊக்கத்தொகை திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப ஹார்டுவேர் துறையில் ரூ. 3.25 ட்ரில்லியன் அளவிற்கு உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொழிநுட்ப ஹார்ட்வேரில் உள்நாட்டு மதிப்புக் கூட்டும், 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 5-10 சதவீதத்திலிருந்து  20-25 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தொலைத் தொடர்பு சாதனங்கள் உற்பத்தியும் 5 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும். தொலைத்தொடர்பு சாதனங்களை சுமார் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யும் நிலைக்கும் நாம் உயர்வோம்.

மருந்து துறையிலும் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் முதலீடுகள் செய்யப்படும். மருந்து பொருட்களின் விற்பனை சுமார் ரூ. 3 லட்சம் கோடி என்ற அளவிலும் ஏற்றுமதி ரூ. 2 லட்சம் கோடி என்ற அளவிலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நண்பர்களே,

லட்சக்கணக்கான தடுப்பூசிகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கும் இந்திய விமானங்கள், வெறுமையாக திரும்புவதில்லை.  இந்தியா மீதான நம்பிக்கை, இந்தியாவுடனான நெருக்கம், அந்நாட்டு மக்களின் அன்பு, வயது முதிர்ந்த நோயாளிகளின்  ஆசீர்வாதங்கள் மற்றும் உணர்ச்சி பூர்வமான ஈடுபாட்டை அவை தம்முடன் சுமந்து வருகின்றன.

இந்தியாவின் நம்பகத்தன்மையும் அடையாளமும் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகின்றன. இந்த நம்பிக்கை தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ பொருட்களுடன் மட்டும் நிற்பதில்லை. ஒரு நாடு அடையாள சின்னமாக மாறும் போதும், ஒவ்வொரு நாட்டு மக்களின் மரியாதையையும் ஈர்ப்பையும் பெறும்போதும் அனைத்து அம்சங்களிலும் அவர்களின் முதல் விருப்பமாக அந்நாடு உயர்கிறது.

நமது மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை இன்று உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதற்காக, நீண்ட கால வியூகத்துடன் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தி மருந்துத் துறை பணியாற்ற வேண்டும்.

இதுபோன்ற நேர்மறை சூழல்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு துறையும் வியூகங்களை உருவாக்கத் தொடங்க வேண்டும். செல்பேசிகள் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டத்தை கடந்த ஆண்டு நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

இதன் காரணமாக பெருந்தொற்று காலத்திலும் இந்தத் துறை கடந்த ஆண்டு ரூ. 35000 கோடி அளவிற்கு உற்பத்தியை மேற்கொண்டது. மேலும் கொரோனா காலகட்டத்தில் இந்தத் துறையில் ரூ. 1300 கோடி அளவில் புதிய முதலீடுகளும் செய்யப்பட்டன.

இந்த திட்டத்தின் மூலம் இந்தத் துறையில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டம் நாட்டின் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் சூழலியலில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

நண்பர்களே,

நெருக்கடியான தருணங்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மிகப்பெரும் இலக்குகளை அடைய முடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். இந்த ஒன்றிணைந்த அணுகுமுறை,  தற்சார்பு இந்தியாவை உருவாக்கும். நாட்டுக்கும், உலகத்திற்கும், சிறந்த தரமான பொருட்களை உருவாக்குவதில் தொழில்துறை கவனம் செலுத்த வேண்டும்.

வேமாக மாறிவரும் உலகிற்கேற்ப, புதுமையான கண்டுபிடிப்புகளில் தொழில்துறை ஈடுபடுவதோடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இந்திய தொழில்துறை, தொழிலாளர்களின் திறமைகளை  மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.  இந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் கூடுதல் பலன்களை மட்டும் பெறாமல் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் பயனளிக்கும்.

பெருமளவில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

குறிப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

——