நாட்டில் கொவிட் -19, பெருந்தொற்று நிலைமை, சுகாதாரக் கட்டமைப்பு, போக்குவரத்து நடைபெறும் ஏற்பாடுகள், நாட்டின் தடுப்பூசி இயக்க நிலைமை, புதிதாக கொவிட்-19-ன் உருமாறிய ஒமிக்ரான் பரவல் நிலை நாட்டின் பொது சுகாதாரத்தில் அதன் தாக்கம் ஆகியவை பற்றி மதிப்பீடு செய்யும் உயர்நிலைக் கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று தலைமை தாங்கினார்.
உலகளவில் தற்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றுக் குறித்த விரிவான விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள், அவற்றில் உள்ள மாவட்டங்களில் கொவிட்ட-19 நிலைமை அதிகபட்ச தொற்றுப் பாதிப்பு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. மேலும், எதிர்நோக்கும் சவாலை நிர்வகிப்பதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும், விவரிக்கப்பட்டது. அதிகபட்சம் நோய் பாதித்த இடங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை பற்றிய தகவல்களும் அளிக்கப்பட்டன.
சுகாதாரக் கட்டமைப்பு, பரிசோதனைத்திறன், ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகள் நிலவரம், அவசரகால கொவிட் தடுப்பு திட்டத்தின் கீழ், கொவிட் நோய்க்கான அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு நிலவரம், ஆகியவற்றை மேம்படுத்த மாநிலங்களுக்கு செய்யப்படும் உதவி பற்றி இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட அளவில், போதிய சுகாதாரக் கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டியதன் தேவையைப் பிரதமர் அறிவுறுத்தினார். இது தொடர்பாக மாநிலங்களுடன் ஒத்துழைப்பைப் பராமரிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
தடுப்பூசிய இயக்கத்தில் இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சிகளால் ஏழு நாட்களில் இதுவரை 15-18 வயதுப் பிரிவினரில் 31 சதவீதம் பேருக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதும் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்த சாதனையை கவனத்தில் கொண்ட பிரதமர், பதின்பருவ வயதினருக்கு தடுப்பூசி இயக்கத்தை மேலும் துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
விரிவான விவாதங்களுக்குப் பின், அதிக எண்ணிக்கையில், நோய்த்தொற்று அறியப்படும் பகுதிகளில் தீவிர கட்டுப்பாடும், கண்காணிப்பும் தொடர வேண்டும் என்றும் தற்போது அதிக எண்ணிக்கையில், நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள மாநிலங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்கவேண்டும் என்றும், மாண்புமிகு பிரதமர் உத்தரவிட்டார். தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முகக் கவசங்களைக் கட்டாயம் பயன்படுத்துவது தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். லேசான பாதிப்பு உள்ளவர்கள் / அறிகுறி இல்லாத தொற்றாளர்களை வீட்டுத்தனிமையில், வைப்பதைத் தீவிரமாக அமலாக்குவதும், நோய் பாதிப்பு தொடர்பான சரியான தகவல்களை சமூகத்திற்கு விரிவாக எடுத்துரைப்பதும் அவசியம் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.
மாநிலம் சார்ந்த தனி நிலைமைகள், சிறந்த நடைமுறைகள்,பொது சுகாதார செயல்பாடு பற்றி விவாதிக்க முதலமைச்சர்களுடனான சந்திப்பு நடத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.
கொவிட் நோய்த்தொற்றை நிர்வகிக்கும் அதே வேளையில், கொவிட் அல்லாத சுகாதார சேவைகள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். தொலைதூர மற்றும் ஊரகப்பகுதி மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கிடைப்பதை உறுதி செய்ய தொலைதூர மருத்துவத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பது பற்றியும் அவர் பேசினார்.
கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதில் இதுவரை சுகாதாரப் பணியாளர்களால் வழங்கப்பட்ட ஒப்பற்ற சேவைகளுக்கு தமது நன்றியைத் தெரிவித்த அவர், சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.
வைரஸ் தொடர்ந்து பரிணமித்து வருவதால் மரபணு தொடர்ச்சி உட்பட பரிசோதனை, தடுப்பூசிகள், மருந்துகள் சார்ந்த தலையீடுகள் ஆகியவற்றில் தொடர்ச்சியான அறிவியல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்பது பற்றியும் பிரதமர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் திருமதி பாரதி பிரவீன் பவார், நித்தி ஆயோகின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், அமைச்சரவை செயலாளர் திரு ராஜீவ் கவ்பா, உள்துறை செயலாளர் திரு ஏ கே பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், செயலாளர் (உயிரித் தொழில்நுட்பம்), டாக்டர் ராஜேஷ் கோகலே, ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆர் எஸ் சர்மா மற்றும் மருந்து தயாரிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, வெளியுறவு செயலாளர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை உறுப்பினர், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
——-
Had extensive discussions on the prevailing COVID-19 situation. Reviewed the preparedness of healthcare infrastructure, the vaccination drive, including for youngsters between 15 and 18, and ensuring continuation on non-COVID healthcare services. https://t.co/2dh8VFMStK
— Narendra Modi (@narendramodi) January 9, 2022