உயர் திறன் வாய்ந்த சூரிய சக்தி ஒளிமின்னழுத்த (பிவி) மாட்யூல்களில் ஜிகாவாட் திறன் உற்பத்தியை அடைவதற்காக உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்களுக்கான தேசிய திட்டத்திற்கு ரூ. 4,500 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் முன்மொழிவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களின் செயல்திறன் குறைவாகவே இருப்பதால் இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி பிவி செல்கள் மற்றும் மாட்யூல்களை சூரிய மின்சக்தி திறன் சார்ந்துள்ளது.
மின்சாரம் போன்ற மத்திய துறையில் இறக்குமதியின் சார்பை உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்கள் மீதான தேசிய திட்டம் வெகுவாகக் குறைக்கும். தற்சார்பு இந்தியா முன்முயற்சியையும் இது ஊக்குவிக்கும்.
வெளிப்படை தன்மையிலான ஏல முறையின் மூலம் சூரிய சக்தி பிவி தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சூரிய சக்தி பிவி உற்பத்தி ஆலைகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உயர் திறன் கொண்ட சூரிய சக்தி பிவி மாட்யூல்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். சூரிய சக்தி பிவி மாட்யூல்களின் உயர் திறன் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் அவர்களது தயாரிப்பை பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் மாட்யூல்களின் தரம் உயர்த்தப்படுவதோடு, உள்நாட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
இந்த திட்டத்தால் கிடைக்கப்பெறும் பயன்கள்:
• கூடுதலாக 10,000 மெகாவாட் திறன் கொண்ட ஒருங்கிணைந்த சூரிய சக்தி பிவி உற்பத்தி ஆலைகள்
• சூரிய சக்தி பிவி உற்பத்தி திட்டங்களில் சுமார் ரூ. 17,200 கோடி மதிப்பில் நேரடி முதலீடுகள்
• பொருட்களின் சம நிலைக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.17, 500 கோடி மதிப்பிலான தேவை
• 30,000 பேருக்கு நேரடியாகவும், 1,20,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு
• இறக்குமதிக்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 17,500 கோடி
• சூரிய சக்தி பிவி மாட்யூல்களில் உயர்ந்த தரத்தை அடைவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
*****************