Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

உத்தராகண்ட் மாநிலம் ஹர்சிலில் குளிர்கால சுற்றுலா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


கங்கை அன்னை வாழ்க.
கங்கை அன்னை வாழ்க.
கங்கை அன்னை வாழ்க.
பாரத அன்னை வாழ்க.
பாரத அன்னை வாழ்க.
பாரத அன்னை வாழ்க.
பாரத அன்னை வாழ்க!
உத்தராகண்ட்டின் எனதருமை சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும்  வணக்கம்!
இங்குள்ள ஆற்றல் மிக்க முதலமைச்சர், எனது இளைய சகோதரர் புஷ்கர் சிங் தாமி அவர்களே, மத்திய அமைச்சர் திரு. அஜய் தம்தா அவர்களே, மாநில அமைச்சர் சத்பால் மகராஜ் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான மகேந்திர பட் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகா மாலா ராஜ்ய லட்சுமி அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் சவுகான் அவர்களே, அனைத்து பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே.

சில நாட்களுக்கு முன்பு மனா கிராமத்தில் நடந்த விபத்து குறித்து முதலில் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டு மக்கள் காட்டிய ஒற்றுமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் தைரியத்தை அளித்துள்ளது.
நண்பர்களே,
நமது தேவபூமி, உத்தராகண்ட்டின் இந்த பூமி, ஆன்மீக சக்தி நிறைந்தது.  நான்கு தாம்கள் மற்றும் எல்லையற்ற புனித யாத்திரைத் தலங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட உயிர் கொடுக்கும் தாய் கங்கையின் இந்தக் குளிர்கால இருக்கை கோவிலுக்கு இன்று மீண்டும்  வந்து உங்கள் அனைவரையும் உங்கள் குடும்பத்தினரையும் சந்திக்கும் பேறு பெற்றுள்ளேன். அன்னை கங்கையின் கருணை காரணமாகவே பல தசாப்தங்களாக உத்தராகண்ட்டிற்கு சேவை செய்யும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன். அவரது ஆசீர்வாதத்தால்தான் நான் காசிக்கு வந்தேன் என்று நம்புகிறேன், இப்போது நான் ஒரு எம்.பி.யாக காசிக்கு சேவை செய்கிறேன். அதனால்தான் நான் காசியில் கூறியிருந்தேன் – கங்கை அன்னை என்னை அழைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, கங்கை அன்னை இப்போது என்னை தத்தெடுத்தது போல் உணர்ந்தேன். இதுதான் அன்னை கங்கையின் பாசம். அவளது இந்தக் குழந்தை மீது அவள் வைத்திருக்கும் பாசம்தான் இன்று நான் அவளது தாய் இல்லமான முக்வா கிராமத்திற்கு வந்துள்ளேன். இங்குதான் முகிமத்-முக்வா தரிசனம் செய்து வழிபடும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
நண்பர்களே,
சில ஆண்டுகள் முன்பாக நான் பாபா கேதார்நாத் சென்று பாபாவின் பாதங்களில் விழுந்து தரிசனம் செய்த பிறகு, பிரார்த்தனை செய்த பிறகு, திடீரென்று என் வாயிலிருந்து சில உணர்வுச் சொற்கள் வெளிவந்தன, நான் கூறினேன் – இந்த தசாப்தம் உத்தராகண்ட்டின் தசாப்தமாக இருக்கும். அந்த வார்த்தைகள் என்னுடையவை, அந்த உணர்வுகள் என்னுடையவை, ஆனால் அவற்றுக்குப் பின்னால் வலிமை அளிக்கும் சக்தியை பாபா கேதார்நாத் அவர்களே வழங்கி இருந்தார். பாபா கேதாரின் ஆசீர்வாதத்தால், அந்த வார்த்தைகள், அந்த உணர்வுகள் மெதுவாக உண்மையாக, யதார்த்தமாக மாறி வருவதை நான் காண்கிறேன். இந்த தசாப்தம் உத்தராகண்டின் தசாப்தமாக மாறி வருகிறது. உத்தராகண்ட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதைகள் திறக்கப்படுகின்றன. உத்தராகண்ட் உருவாவதற்கு பின்னிருந்த விருப்பங்கள், உத்தராகண்டின் வளர்ச்சிக்காக நாங்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், ஒவ்வொரு நாளும் புதிய வெற்றிகள் மற்றும் புதிய இலக்குகளை நோக்கி நகர்ந்து செல்கின்றன. இந்தத் தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படுகின்றன. இந்தத் திசையில், குளிர்கால சுற்றுலா மற்றொரு மிக முக்கியமான படியாகும். இதன் மூலம், உத்தராகண்ட்டின் பொருளாதார ஆற்றல் உணரப்படும்.  இந்த புதுமையான முயற்சிக்காக தாமி அவர்களையும், உத்தராகண்ட் அரசையும் நான் பாராட்டுகிறேன், உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
உத்தராகண்ட் தனது சுற்றுலாத் துறையை பன்முகப்படுத்தி, ஆண்டு முழுவதும், 365 நாட்களும் செயல்படுவதாக ஆக்க வேண்டும்.   உத்தரகண்டில் சுற்றுலா  ஏதோ ஒரு பருவத்துக்கு என்று இல்லாமல் எப்போதும் சுற்றுலா என இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆஃப்-சீசன் இருக்கக்கூடாது.  தற்போது, மலைகளில் சுற்றுலா பருவகாலம் சார்ந்ததாக உள்ளது. மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும், ஆனால் அதன் பிறகு அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. குளிர்காலத்தில், பெரும்பாலான ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோம்ஸ்டே காலியாக இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வு நிலையானது உத்தரகண்ட்டில் ஆண்டின் பெரும் பகுதியும் பொருளாதார மந்தநிலை நீடிக்க வழிவகுக்கிறது.  இது சுற்றுச்சூழலுக்கும் ஒரு சவாலாக உள்ளது.
நண்பர்களே,
உண்மை என்னவென்றால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் குளிர்காலத்தில் இங்கு வந்தால், அவர்களுக்கு தேவபூமியின் ஒளிவட்டம் பற்றிய உண்மையான அறிமுகம் கிடைக்கும். குளிர்கால சுற்றுலாவில் மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற நடவடிக்கைகளின் சிலிர்ப்பு இங்குள்ள மக்களை உண்மையில் சிலிர்ப்பூட்டும். உத்தராகண்ட் மாநிலத்தில் மத யாத்திரைக்கு குளிர்காலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நேரத்தில் பல யாத்திரைத் தலங்களில் சிறப்பு சடங்குகளும் செய்யப்படுகின்றன. முக்வா கிராமத்தைப் பாருங்கள், இங்கு நிகழ்த்தப்படும் மதச் சடங்குகள் நமது பண்டைய மற்றும் அற்புதமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். எனவே, ஆண்டு முழுவதும் சுற்றுலா குறித்த உத்தராகண்ட் அரசின் பார்வை, 365 நாள் சுற்றுலாவின் பார்வை மக்கள் தெய்வீக அனுபவங்களுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்கும். இது ஆண்டு முழுவதும் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும், இது உத்தராகண்டின் உள்ளூர் மக்களுக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் பெரும் பயனளிக்கும்.
நண்பர்களே,
உத்தராகண்ட்டை வளர்ந்த மாநிலமாக மாற்ற எங்களது இரட்டை என்ஜின் அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. சார்தாம்-அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை, நவீன விரைவுச் சாலை, ரயில்வே, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகளின் விரிவாக்கம் ஆகியன உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளன. நேற்றுதான் உத்தராகண்ட் மாநிலத்திற்காக மத்திய அரசு மிகப் பெரிய முடிவுகளை எடுத்துள்ளது. கேதார்நாத் ரோப்வே திட்டம் மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே(கேபிள் கார்)திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கேதார்நாத் ரோப்வே கட்டப்பட்ட பிறகு, 8 முதல் 9 மணி நேரம் ஆகும் பயணம் இப்போது சுமார் 30 நிமிடங்களில் நிறைவடையும். இது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கேதார்நாத் பயணத்தை எளிதாக்கும். இந்த ரோப்வே திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படும். இந்தத் திட்டங்களுக்காக உத்தராகண்ட் உட்பட ஒட்டுமொத்த நாட்டையும் நான் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
இன்று, மலைகளில் சுற்றுச்சூழல் பதிவு குடில்கள், மாநாட்டு மையங்கள், ஹெலிபேட் உள்கட்டமைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது. உத்தராகண்டின் ஜடுங் கிராமம், மனா கிராமம், டிம்மர்-சைன் மகாதேவ் ஆகிய இடங்களில் சுற்றுலாக் கட்டமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது, 1962 ஆம் ஆண்டில் சீனா இந்தியாவைத் தாக்கியபோது, நமது ஜடுங் கிராமம் காலி செய்யப்பட்டது, நமது இந்த இரண்டு கிராமங்களும் காலி செய்யப்பட்டன என்பதை நாட்டு மக்கள் அறிந்திருக்கலாம் அல்லது அறியாமலும் இருக்கலாம். 60-70 ஆண்டுகள் கடந்துவிட்டன. மக்கள் மறந்துவிட்டார்கள். எங்களால் மறக்க முடியாது, அந்த இரண்டு கிராமங்களிலும் மீள்குடியேற்றுவதற்கான ஒரு இயக்கத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம், அவற்றை மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களாக மாற்றும் திசையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். இதன் விளைவாக, இந்தத் தசாப்தத்தில் உத்தராகண்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு சார்தாம் யாத்திரைக்கு ஆண்டுக்கு சராசரியாக 18 லட்சம் பக்தர்கள் வந்தனர். இப்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு பட்ஜெட்டில் 50 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில்  ஹோட்டல்களுக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இது சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை அதிகரிக்கும் மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
உத்தராகண்டின் எல்லைப் பகுதிகளுக்கு சுற்றுலாவின் சிறப்பு நன்மைகளை வழங்குவது எங்கள் முயற்சியாகும். முன்பு, எல்லையோர கிராமங்கள் கடைசி கிராமங்கள் என்று அழைக்கப்பட்டன. நாங்கள் இந்தக் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளோம், இவை எங்கள் கடைசி கிராமங்கள் அல்ல, இவை எங்கள் முதல் கிராமங்கள் என்று நாங்கள் கூறினோம். அவற்றின் வளர்ச்சிக்காக துடிப்பான கிராமத் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். இந்தப் பகுதியைச் சேர்ந்த 10 கிராமங்களும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நண்பர்களும் இன்று நம் முன்னால் கூடியிருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நெலாங் மற்றும் ஜாடுங் கிராமங்களில் மீள்குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது, அதைப் பற்றி 1962 இல் என்ன நடந்தது என்பதை நான் விவரித்தேன். இன்று, இங்கிருந்து ஜாடுங்கிற்கு ஒரு பைக் பேரணியை நான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தேன். இல்லத்தில் விருந்தினர் என்ற தங்கும் விடுதி கட்டுபவர்களுக்கு முத்ரா திட்டத்தின் பலன் வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். உத்தராகண்ட் அரசும் மாநிலத்தில் ஹோம்ஸ்டேக்களை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளது. பல தசாப்தங்களாக உள்கட்டமைப்பு வசதிகளை இழந்த கிராமங்களில், புதிய தங்குமிடங்கள் திறக்கப்படுவதால் சுற்றுலா அதிகரித்து வருகிறது, மேலும் மக்களின் வருமானமூம் அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
இன்று நான் குறிப்பாக தேவபூமியிலிருந்து, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், கிழக்கு-மேற்கிலிருந்து-வடக்கு-தெற்கிலிருந்தும், மத்தியிலிருந்தும், குறிப்பாக இளைய தலைமுறையினரிடமும், அன்னை கங்கையின் இல்லமான இந்தப் புண்ணிய பூமியிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர்களே,
குளிர்காலத்தில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி இருக்கும்போது, சூரியனைக் காண முடியாது, மலைகளில் சூரிய ஒளியை அனுபவிக்க முடியும். இது ஒரு சிறப்பு நிகழ்வாக மாறலாம். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் உத்தராகண்ட் செல்ல வேண்டும். குறிப்பாக பெருநிறுவன உலகைச் சேர்ந்த நமது நண்பர்களே, நீங்கள் குளிர்கால சுற்றுலாவின் ஒரு பகுதியாக மாற வேண்டும். கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றால், குளிர்காலம் மற்றும் தேவபூமியை விட நம்பிக்கைக்குரிய காலம் ,இடம் இருக்க முடியாது. கார்ப்பரேட் உலகின் பெரிய பிரமுகர்கள் உத்தராகண்ட் மாநிலத்திற்கு வந்து தங்களது பெரிய கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டும், எம்ஐசிஇ துறையை ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம் மக்கள் இங்கு வந்து தங்களைப்  புத்துயிர்ப்பு செய்துகொண்டு மீண்டும் உற்சாகத்துடன் திரும்ப முடியும். நாட்டின் பல்கலைக்கழகங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த அனைத்து இளம் நண்பர்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மாணவர்களின் குளிர்காலச் சுற்றுலாவிற்கு உத்தராகண்டைத் தேர்வு செய்யுங்கள்.
நண்பர்களே,
பல்லாயிரம் கோடி பொருளாதாரம், திருமணப் பொருளாதாரம், திருமணங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது, இது மிகப் பெரிய பொருளாதாரம். உங்களுக்கு நினைவிருக்கும், நான் நாட்டு மக்களை வலியுறுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம் – இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இப்போதெல்லாம் மக்கள் உலகின் பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள், நாட்டுமக்களும் குளிர்காலத்தில் திருமணங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதேபோல், இந்திய திரையுலகினர் மீது எனக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. திரைப்பட நட்பு மாநிலம் என்ற விருதை உத்தராகண்ட் பெற்றுள்ளது. நவீன வசதிகள் இங்கு வேகமாக வளர்ந்து வருகின்றன. எனவே, குளிர்காலத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு உத்தராகண்ட் முழு இந்தியாவிற்கும் விருப்பமான இடமாக மாறும்.
நண்பர்களே,
குளிர்கால சுற்றுலா உலகின் பல நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. உத்தராகண்டில் குளிர்காலச் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக, இதுபோன்ற நாடுகளிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். உத்தராகண்ட் மாநிலத்தின் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்கள், ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் அந்த நாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் இப்போது இங்கே இருக்கிறேன், நான் ஒரு சிறிய கண்காட்சியைப் பார்த்தேன், அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, செய்யப்பட்ட கற்பனை, முடிவு செய்யப்பட்ட இடங்கள், தயாரிக்கப்படும் நவீன படைப்புகள், ஒவ்வொரு இடத்தின் ஒவ்வொரு படமும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, மீண்டும் இங்கு வந்து எனது 50 வருட வாழ்க்கையின் அந்த நாட்களை உங்களுடன் கழிக்க வேண்டும் என்று உணர்ந்தேன், ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல ஒரு வாய்ப்பைத் தேடுங்கள், அவர்கள் அதை மிகவும் நன்றாக செய்கிறார்கள். வெளிநாட்டு ஆய்வுகளிலிருந்து வெளிப்படும் செயல் புள்ளிகளில் தீவிரமாக பணியாற்றுமாறு உத்தராகண்ட் அரசை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உள்ளூர் பாரம்பரியங்கள், இசை, நடனம் மற்றும் உணவு வகைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, இது பத்ரிநாத்தில் மட்டுமல்ல, இன்னும் பல தலங்களில் உள்ளன, அந்த பகுதிகளை ஆரோக்கிய ஸ்பாக்களாக உருவாக்கலாம். குளிர்கால யோகா புத்துணர்ச்சி மையங்கள் அமைதியான மற்றும் பனி பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படலாம். நான் அனைத்து மகத்தான துறவிகளிடமும், மடாலயங்களின் தலைவர்களிடமும், அனைத்து யோகா ஆசிரியர்களிடமும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், வருடத்திற்கு ஒருமுறை குளிர்காலத்தில் உத்தராகண்டில் உள்ள தங்கள் சீடர்களுக்கு ஒரு யோகப் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்யுங்கள். குளிர்காலத்திற்கான சிறப்பு வனவிலங்கு சஃபாரி பயணம் ஈர்ப்பு உத்தராகண்ட் மாநிலத்தின் சிறப்பு அடையாளமாக மாறும். அதாவது நாம் 360 டிகிரி அணுகுமுறையுடன் முன்னேற வேண்டும் மற்றும் ஒவ்வொரு மட்டத்திலும் வேலை செய்ய வேண்டும்.
நண்பர்களே,
வசதிகளை மேம்படுத்துவதுடன், மக்களுக்கு தகவல்களை வழங்குவதும் சம அளவில் முக்கியமானதாகும். இதற்காக, நாட்டின் இளம் உள்ளடக்க படைப்பாளிகளுக்கு நான் கூற விரும்புவது, இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில்  செல்வாக்கு செலுத்துபவர்கள், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர், அவர்கள் எனது உத்தராகண்டிற்கும், எனது தேவபூமிக்கும் சேவை செய்யலாம். வீட்டில் உட்கார்ந்திருக்கும்போது கூட அவர்கள் நல்லொழுக்கத்தைச் சம்பாதிக்க முடியும். நாட்டின் சுற்றுலாத் துறையை விரைவுபடுத்துவதில் நீங்கள் மிகப் பெரிய பங்கை ஆற்ற முடியும், மக்களுக்கு தகவல்களை வழங்குவதில், ஆற்றிய பங்கை மேலும் விரிவுபடுத்த வேண்டும். உத்தராகண்டில் குளிர்காலச் சுற்றுலாவின் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நீங்களும் இருக்க வேண்டும். உத்தராகண்ட் அரசு ஒரு பெரிய போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இந்த உள்ளடக்க படைப்பாளர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், குளிர்கால சுற்றுலாவை மேம்படுத்த 5 நிமிட திரைப்படத்தை உருவாக்க வேண்டும். இதற்கான போட்டி நடத்தப்பட வேண்டும்
.சிறந்த படத்தை உருவாக்குபவருக்கு சிறந்த பரிசு வழங்கப்பட வேண்டும், நாடு முழுவதிலுமிருந்து மக்களை முன்வரச் சொல்ல வேண்டும். நிறைய விளம்பரம் கிடைக்கும். இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படும்போது, புதிய இடங்கள் ஆராயப்படும், புதிய திரைப்படங்கள் உருவாக்கப்படும், மக்களிடம் இதைப் பற்றி எடுத்துரைக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் விரைவான வளர்ச்சியை நாம் காண முடியும் என்று நான் நம்புகிறேன். 365 நாட்கள் கொண்ட, ஆண்டு முழுவதும் நடைபெறும் சுற்றுலா இயக்கத்திற்காக மீண்டும் ஒருமுறை நான் உத்தராகண்டின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், பாராட்டுகிறேன், மாநில அரசைப் பாராட்டுகிறேன்.
கங்கை அன்னை வாழ்க.
கங்கை அன்னை வாழ்க.
கங்கை அன்னை வாழ்க.
மிகவும் நன்றி.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.