Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐப் பிரதமர் தொடங்கி வைத்தார்

‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐப் பிரதமர் தொடங்கி வைத்தார்


உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வரும் உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023′-ஐப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அங்கு கண்காட்சியையும் அவர் திறந்துவைத்தார். வலிமையான உத்தராகண்ட் என்ற புத்தகத்தையும், ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ் என்ற வணிகக்குறியீட்டையும் பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த மாநாட்டின் கருப்பொருள் அமைதி முதல் செழிப்பு வரைஎன்பதாகும்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதானி குழுமத்தின் இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான (வேளாண், எண்ணெய் மற்றும்  எரிவாயு) திரு பிரணவ் அதானி, உத்தராகண்ட் அண்மைக் காலங்களில் அதன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அணுகுமுறையின் காரணமாக தனியார் துறை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மிகவும் திறமையான மனிதவளம் மற்றும் தேசிய தலைநகருக்கு அருகில் இருப்பது, மிகவும் நிலையான சட்டம் ஒழுங்கு சூழல், மாநிலத்தின் விரிவாக்கம், அதிக முதலீடுகள், வேலைவாய்ப்புகளைக் கொண்டு வருவதற்கான தனது திட்டங்களை திரு அதானி விவரித்தார்.  உத்தராகண்ட் மாநிலத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்ததற்காக பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.  

ஜே.எஸ்.டபிள்யூ.வின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. சஜ்ஜன் ஜிண்டால், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் வளர்ச்சித் திட்டங்களின் போது உத்தராகண்ட் மாநிலத்துடனான பிரதமரின் தொடர்புகளை எடுத்துரைத்தார். நாட்டின் முகத்தை மாற்றியமைப்பதற்கான பிரதமரின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று குறிப்பிட்டார். உலகளாவிய வல்லரசாக இந்தியா உருவெடுப்பதற்கான பயணத்தில் தலைமை வகித்ததற்காகப் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் தனது நிறுவனத்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பிரதமருக்கு அவர் உறுதியளித்தார்.

ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றியை நினைவு கூர்ந்த ஐடிசியின் நிர்வாக இயக்குநர் திரு சஞ்சீவ் பூரி, பிரதமரின் உலகளாவிய நடைமுறை உத்தியையும் உலகளாவிய தெற்கின் நலனுக்காக அவர் வாதிடுவதையும் பாராட்டினார். கடந்த சில ஆண்டுகளில் பல அர்த்தமுள்ள கொள்கை முன்முயற்சிகள், பல பரிமாண சவால்களை எதிர்கொள்ளும் உலகில் சாதகமாக இந்தியாவை வைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

பதஞ்சலி நிறுவனரும், யோகா குருவுமான ஸ்ரீ பாபா ராம்தேவ், பிரதமரை ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும், இந்தியா மற்றும் உலகின் 140 கோடி மக்களின் குடும்ப உறுப்பினர் என்றும் குறிப்பிட்டார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான பிரதமரின் இலக்கை எடுத்துரைத்த அவர், முதலீடுகளைக் கொண்டுவருவதற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதஞ்சலியின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிட்டார்.

எமார் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கல்யாண் சக்ரவர்த்தி, நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையை வழங்கியதற்காகப் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.     

டி.வி.எஸ் வழங்கல் தொடர் தீர்வுகள் நிறுவனத்தின் தலைவர் திரு ஆர்.தினேஷ், பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக்கு நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். உத்தராகண்டின் வளர்ச்சிக் கதையில் நிறுவனத்தின் பங்களிப்புகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், டயர் மற்றும் வாகன உதிரிபாகங்களின் உற்பத்தி அலகுகள் மற்றும் தளவாடங்கள் மற்றும் வாகனத் துறையில் சேவைகள் ஆகியவற்றின் எடுத்துக்காட்டுகளை வழங்கினார்.    

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தேவபூமி உத்தராகண்டில் இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் உத்தராகண்ட் மாநிலத்தின் தசாப்தம் என்று தான் கூறியதை அவர் நினைவுகூர்ந்தார்.  சில்கியாராவில் சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்கும் திட்டத்தில் ஈடுபட்ட மாநில அரசு மற்றும் அனைவரையும் பிரதமர் பாராட்டினார்.

உத்தராகண்ட் உடனான தனது நெருங்கிய உறவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், உத்தராகண்ட் மாநிலத்தில் ஒருவர் தெய்வீகத்தையும் வளர்ச்சியையும் ஒரே நேரத்தில் உணர்கிறார் என்று கூறினார். இந்த உணர்வை மேலும் விரிவுபடுத்துவதற்காகப் பிரதமர் தனது கவிதைகளில் ஒன்றை வாசித்தார். Strengths, Weaknesses, Opportunities, and Threats

இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதலீட்டாளர்களைத் தொழில்துறையின் முக்கியஸ்தர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஸ்வோத் (பலம், பலவீனம், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள்) பகுப்பாய்வின் ஒப்பீட்டை எடுத்துரைத்து, இந்தப் பயிற்சியை தேசத்தின் மீது செய்ய வலியுறுத்தினார். ஸ்வோத் பகுப்பாய்வின் முடிவுகள் நாட்டில் ஏராளமான விருப்பங்கள், நம்பிக்கை, தன்னம்பிக்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் வாய்ப்புகளைக் குறிக்கும் என்று அவர் எடுத்துரைத்தார். கொள்கை சார்ந்த நிர்வாகத்தின் குறியீடுகள் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கான மக்களின் உறுதிப்பாடு ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டார். “நிலையற்ற தன்மையை விட ஒரு நிலையான அரசை இந்தியா விரும்புகிறது” என்பதற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டிய பிரதமர், நல்லாட்சி மற்றும் அதன் பாதையின் அடிப்படையில் மக்கள் வாக்களித்தனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். கொவிட் தொற்றுநோய் மற்றும் நிலையற்ற பூகோள-அரசியல் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் சாதனை வேகத்தில் முன்னேறுவதற்கான நாட்டின் திறனைப் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். “கொரோனா தடுப்பூசி அல்லது பொருளாதாரக் கொள்கைகளாக இருந்தாலும், இந்தியா அதன் திறன்கள் மற்றும் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தது” என்று  பிரதமர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, உலகின் பிற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியா தனக்கென ஒரு முன்னணியில் நிற்கிறது என்று பிரதமர் கூறினார். உத்தராகண்ட் உட்பட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இந்த வலிமையின் பலனை அனுபவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இரட்டை என்ஜின் அரசின் நன்மைகள் குறித்து மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அதன் இரட்டை முயற்சிகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன என்றார். மாநில அரசு உள்ளூர் யதார்த்தங்களை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு உத்தராகண்டில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளை செய்து வருகிறது. அரசின் இரு நிலைகளும் ஒருவருக்கொருவர் முயற்சிகளை அதிகரித்து வருகின்றன. கிராமப்புறங்களில் இருந்து சார் தாம் வரை செல்லும் பணிகள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், தில்லி-டேராடூன் இடையிலான தூரம் இரண்டரை மணி நேர பயணமாக குறைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார். டேராடூன் மற்றும் பந்த்நகர் விமான நிலைய விரிவாக்கம் விமான இணைப்பை வலுப்படுத்தும். மாநிலத்தில் ஹெலி-டாக்ஸி சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. ரயில் இணைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.  இவை அனைத்தும் விவசாயம், தொழில், தளவாடங்கள், சேமிப்பு, சுற்றுலா, விருந்தோம்பல் ஆகியவற்றிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை வழங்கிய முந்தைய அரசின் அணுகுமுறைக்கு முரணாக, அவற்றை நாட்டின் முதல் கிராமமாக மேம்படுத்துவதற்கான இரட்டை இயந்திர அரசின் முயற்சிகளை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வளர்ச்சி அளவுகோல்களில் பின்தங்கிய கிராமங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் ஆர்வமுள்ள மாவட்டங்கள் மற்றும் விருப்பமுள்ள தொகுதிகள் திட்டம் ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலத்தின் பயன்படுத்தப்படாத திறனை எடுத்துரைத்த திரு. மோடி, முதலீட்டாளர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இரட்டை என்ஜின் அரசின் நன்மைகளை அறுவடை செய்த உத்தராகண்ட் மாநிலத்தின் சுற்றுலாத் துறை குறித்து விளக்கிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான ஆர்வம் பற்றிக் குறிப்பிட்டார். சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையையும், இந்தியாவின் பாரம்பரியத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கில் கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலா சுற்றுகளை உருவாக்குவது குறித்து அவர் தெரிவித்தார். இயற்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கிய உத்தராகண்ட் ஒரு பிராண்டாக உருவெடுக்கப் போகிறது என்று பிரதமர் கூறினார். யோகா, ஆயுர்வேதம், தீர்த்தம் மற்றும் சாகச விளையாட்டுத் துறைகளை ஆராய்ந்து வாய்ப்புகளை உருவாக்க முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் உற்பத்தி திட்டத்தைப் பின்பற்றி இந்தியாவில் திருமணம்இயக்கத்தைத் தொடங்குமாறு நாட்டின் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்தராகண்டில் குறைந்தபட்சம் ஒரு திருமண விழாவையாவது நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். “உத்தராகண்டில் ஒராண்டில் 5000 திருமணங்கள் நடந்தாலும், ஒரு புதிய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, மாநிலத்தை உலகின் திருமண இடமாக மாற்றலாம்” என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவில் மாற்றத்திற்கு வலுவான காற்று வீசுகிறது என்று பிரதமர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் லட்சியமிக்க இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது.  முன்னர் மறுக்கப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வறுமையிலிருந்து மீண்ட கோடிக்கணக்கான மக்கள் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்து வருகின்றனர். உயர் நடுத்தர வர்க்கம், நடுத்தர வர்க்கம் ஆகிய இரண்டும் அதிக செலவு செய்கின்றன “இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் திறனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உத்தராகண்டில் சமூகத்தின் இந்த சக்தி உங்களுக்காக ஒரு பெரிய சந்தையையும் உருவாக்குகிறது” என்று திரு மோடி மேலும் கூறினார்.

ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ் வணிகக் குறியீட்டை  அறிமுகப்படுத்தியதற்காக உத்தராகண்ட் அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், உத்தராகண்ட் மாநிலத்தின் உள்ளூர் தயாரிப்புகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு புதுமையான முயற்சி என்று கூறினார். “ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ்” என்பது உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு,  உலக அளவில் உள்ளூர் பொருட்கள் என்ற எங்கள் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்று திரு மோடி கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், தொகுதியிலிருந்தும் தயாரிப்புகள் உலகளாவியதாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். விலையுயர்ந்த களிமண் பாத்திரங்கள் வெளிநாடுகளில் சிறப்பு வழிகளில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன என்பதை அவர் எடுத்துக்காட்டினார். பாரம்பரியமாக இதுபோன்ற பல சிறந்த தயாரிப்புகளைத் தயாரிக்கும் இந்தியாவின் விஸ்வகர்மாக்களின் திறமை மற்றும் கைவினைத்திறனைக் குறிப்பிட்ட பிரதமர், அத்தகைய உள்ளூர் தயாரிப்புகளுக்கான உலகளாவிய சந்தையை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பல்வேறு மாவட்டங்களில் அத்தகைய தயாரிப்புகளை அடையாளம் காணுமாறு முதலீட்டாளர்களை வலியுறுத்தினார். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் எஃப்.பி.ஓ.க்களுடன் தொடர்புகொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். “உள்ளூரை உலகளாவியதாக மாற்ற இது ஓர் அற்புதமான கூட்டாண்மையாக இருக்கலாம்”, என்று அவர் மேலும் கூறினார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து இரண்டு கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை விளக்கினார். மேலும் ஹவுஸ் ஆஃப் ஹிமாலயா பிராண்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த முயற்சி வேகமெடுக்கும் என்று  அவர் கூறினார். உத்தராகண்ட் அரசின் இந்த முயற்சிக்கு அவர் நன்றி தெரிவித்தார்

தேசியத் தன்மையை வலுப்படுத்துவது குறித்து செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், “நாம் எதைச் செய்தாலும், அது உலகின் சிறந்ததாக இருக்க வேண்டும். நமது தரத்தை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும். நமது உற்பத்தி முழுமையான தாக்கம், குறைபாடின்மை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும். லட்சிய பி.எல்.ஐ இயக்கங்கள் முக்கியமான துறைகளுக்கு ஒரு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான தீர்மானத்தைக் காட்டுகின்றன என்று அவர் கூறினார். புதிய முதலீட்டின் மூலம் உள்ளூர் விநியோகத் தொடர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

சிறுதானியங்கள் போன்ற சத்தான உணவுகளால் இந்தியா மிகவும் வளமாக இருக்கும்போது, ஊட்டச்சத்து என்ற பெயரில் தொகுக்கப்பட்ட உணவுகளுக்கு எதிராகப் பிரதமர் எச்சரித்தார். ஆயுஷ் தொடர்பான இயற்கை உணவுகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் அவை மாநிலத்தின் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழங்கும் வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார். தொகுக்கப்பட்ட உணவில் கூட, உள்ளூர் தயாரிப்பு உலகளாவிய சந்தைகளை அணுக உதவுமாறு அவர் கூட்டத்தினரைக் கேட்டுக்கொண்டார்.

 

இந்தியா, அதன் நிறுவனங்கள் மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கு இது முன்னெப்போதும் இல்லாத நேரம் என்று அவர் குறிப்பிட்டார். “அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறவிருக்கிறது” என்று அவர் கூறினார். நிலையான அரசு, ஆதரவான கொள்கை அமைப்பு, சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தின் மனநிலை, வளர்ச்சியில் நம்பிக்கை ஆகியவற்றின் கலவையை அவர் பாராட்டினார். “இதுதான் நேரம், சரியான நேரம். இது இந்தியாவின் நேரம்” என்று கூறிய பிரதமர், உத்தராகண்ட் மாநிலத்துடன் கைகோர்த்து அதன் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் ஆளுநர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023′ உத்தராகண்டை ஒரு புதிய முதலீட்டு இடமாக நிறுவுவதற்கான ஒரு படியாகும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில்  இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

***

ANU/SMB/PKV/AG/KV