பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா யாகத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்கும் உலகின் மிகப்பெரிய கூட்டங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். இந்த நிகழ்வுக்காக ஒரு புதிய நகரம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். “பிரயாக்ராஜ் மண்ணில் புதிய வரலாறு எழுதப்படுகிறது” என்று பிரதமர் பெருமிதம் கொண்டார். அடுத்த ஆண்டு மகா கும்பமேளா அமைப்பது நாட்டின் ஆன்மீக மற்றும் கலாச்சார அடையாளத்தை புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்று கூறிய பிரதமர், ஒற்றுமையின் இத்தகைய ‘மகாயாகம்‘ உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் என்று கூறினார். மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்த மக்களுக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“இந்தியா புனிதமான இடங்கள் மற்றும் புனித யாத்திரைகளின் நாடு” என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, நர்மதா உள்ளிட்ட எண்ணற்ற நதிகள் பாயும் பூமி இது என்றும் அவர் கூறினார். பிரயாகை என்பது இந்த நதிகளின் சங்மமாகும். இந்த நதிகளின் புனித ஓட்டத்தின் சக்தி, பல புனித யாத்திரைத் தலங்களின் முக்கியத்துவம், அவற்றின் பெருமை ஆகியவற்றை விவரித்த பிரதமர், பிரயாகை மூன்று நதிகளின் சங்கமம் மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்று கூறினார். இதன் முக்கியத்துவத்தை விளக்கிய அவர், சூரியன் மகர வீட்டிற்குள் நுழையும் ஒரு புனிதமான நேரம் என்று பிரயாகை பற்றி கூறப்பட்டுள்ளது, பின்னர் அனைத்து தெய்வீக சக்திகள், அமிர்தம், முனிவர்கள் மற்றும் புனிதர்கள் பிரயாகைக்கு இறங்குகிறார்கள். பிரயாகை அத்தகைய ஒரு இடம் என்று அவர் கூறினார், அது இல்லாமல் புராணங்கள் முழுமையடையாது. வேதங்களின் வசனங்களில் போற்றப்பட்ட அத்தகைய ஒரு இடம் பிரயாகை என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒவ்வொரு அடியிலும் புனிதமான இடங்கள் மற்றும் நல்லொழுக்கமான பகுதிகள் இருக்கும் இடமாக பிரயாகை உள்ளது” என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். பிரயாக்ராஜின் கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை விளக்கிய பிரதமர், சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கூறி, “திரிவேணியின் விளைவு, வேணிமாதவின் மகிமை, சோமேஷ்வரின் ஆசீர்வாதம், பரத்வாஜரின் தவ பூமி, பகவான் நாகராஜ் வாசு ஜியின் சிறப்பு இடம், அக்ஷயவதத்தின் இறவாமை மற்றும் கடவுளின் கருணை – இவைதான் நமது தீர்த்தராஜ் பிரயாகையை உருவாக்குகின்றன” என்று விளக்கினார். பிரயாக்ராஜ் என்பது ‘தர்மம்‘, ‘அர்த்‘, ‘காம‘ மற்றும் ‘மோக்ஷா‘ ஆகிய நான்கு கூறுகளும் கிடைக்கும் இடம் என்று அவர் மேலும் விளக்கினார். “பிரயாக்ராஜ் என்பது வெறும் புவியியல் பகுதி மட்டுமல்ல, அது ஆன்மீகத்தை அனுபவிக்கும் இடமாகும்” என்று கூறிய பிரதமர், பிரயாக்ராஜுக்கு வருகை தந்த குடிமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கடந்த கும்பமேளாவின் போது சங்கமத்தில் புனித நீராடியதை நினைவு கூர்ந்த பிரதமர், இன்று எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் குறிப்பிட்டார். முன்னதாக ஹனுமான் மந்திர் மற்றும் அக்ஷயவதத்தில் தமது தரிசனம் மற்றும் பூஜை குறித்து பேசிய பிரதமர், பக்தர்கள் எளிதாக அணுகுவதற்காக ஹனுமான் நடைபாதை மற்றும் அக்ஷயவத் நடைபாதை மேம்பாடு குறித்து எடுத்துரைத்தார். இன்று தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்களை திரு மோடி பாராட்டினார்.
“மகா கும்பமேளா என்பது நமது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய தெய்வீக பண்டிகையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வாழும் அடையாளமாகும்” என்று திரு மோடி புகழாரம் சூட்டினார். ஒவ்வொரு முறையும், மதம், அறிவு, பக்தி மற்றும் கலை ஆகியவற்றின் தெய்வீக சேகரிப்பை இந்த மாபெரும் நிகழ்வு குறிக்கிறது என்று அவர் கூறினார். சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைக் கூறிய பிரதமர், சங்கமத்தில் புனித நீராடுவது, கோடிக்கணக்கான புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்வதற்கு சமம் என்று விளக்கினார். புனித நீராடும் ஒருவர் தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார் என்று அவர் மேலும் கூறினார். பல்வேறு பேரரசர்கள், ராஜ்ஜியங்கள் ஆட்சி செய்த போதிலும், ஆங்கிலேயர்களின் சர்வாதிகார ஆட்சியின் போதும் கூட இந்த நித்திய நம்பிக்கை நிறுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், கும்பமேளா எந்தவொரு வெளிப்புற சக்திகளாலும் இயக்கப்படவில்லை என்பதே இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்று கூறினார். கும்பமேளா மனிதனின் உள் ஆன்மாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும், உள்ளிருந்து தோன்றி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களை சங்கமத்தின் கரைகளுக்கு ஈர்க்கிறது என்றும் அவர் கூறினார். கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களைச் சேர்ந்த மக்கள் பிரயாக்ராஜை நோக்கிப் புறப்படுகிறார்கள் என்றும், இதுபோன்ற கூட்டம் மற்றும் வெகுஜனக் கூட்டத்தின் சக்தியை வேறு எங்கும் காண்பது அரிது என்றும் அவர் கூறினார். ஒரு தனிநபர் மகா கும்பமேளாவிற்கு வந்தவுடன், துறவிகள், முனிவர்கள், ஞானிகள், சாதாரண மக்கள் என அனைவரும் ஒன்றாகிவிடுவதாகவும், சாதி மற்றும் பிரிவுகளின் வேறுபாடுகள் முடிவுக்கு வருவதாகவும் திரு மோடி கூறினார். கோடிக்கணக்கான மக்கள் ஒரே இலக்கு, ஒரே சிந்தனையுடன் இணைந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இந்த முறை மகா கும்பமேளாவின் போது, பல்வேறு மொழிகள், சாதிகள், நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் சங்கமத்தில் ஒன்றுகூடி ஒற்றுமையாக இருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். மகா கும்பமேளா ஒற்றுமையின் மஹாயாகமாக இருப்பதற்கான தனது நம்பிக்கை இதுதான் என்றும், இங்கு அனைத்து வகையான பாகுபாடுகளும் தியாகம் செய்யப்படுகின்றன என்றும், இங்கு சங்கமத்தில் நீராடும் ஒவ்வொரு இந்தியரும் ஒரே பாரதம், உன்னத பாரதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தில் கும்பமேளாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, முக்கியமான தேசிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து துறவிகளிடையே ஆழமான விவாதங்களுக்கான மேடையாக கும்பமேளா எப்போதும் இருந்து வருவதை எடுத்துரைத்தார். கடந்த காலங்களில் நவீன தகவல் தொடர்பு வழிகள் இல்லாத போது, குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்களுக்கு கும்பமேளா அடித்தளமாக மாறியது என்று குறிப்பிட்ட அவர், துறவிகளும், அறிஞர்களும் ஒன்றுகூடி நாட்டின் நலன் குறித்து விவாதித்தனர், தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் குறித்து விவாதித்தனர், இதன் மூலம் நாட்டின் சிந்தனை செயல்முறைக்கு புதிய திசையையும் சக்தியையும் அளித்தனர் என்று கூறினார். இன்றும் கூட, நாடு முழுவதும் நேர்மறையான செய்திகளை அனுப்பி, தேச நலன் குறித்த கூட்டு சிந்தனைக்கு உத்வேகம் அளிக்கும் இதுபோன்ற விவாதங்கள் தொடரும் ஒரு மன்றமாக கும்பமேளா தனது முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த ஒன்றுகூடல்களின் பெயர்கள், மைல்கற்கள் மற்றும் பாதைகள் மாறுபட்டாலும், நோக்கமும் பயணமும் ஒன்றாகவே உள்ளன என்று பிரதமர் கூறினார். கும்பமேளா தொடர்ந்து நடைபெற்று வரும் தேசிய விவாதங்களின் அடையாளமாகவும், எதிர்கால முன்னேற்றத்திற்கான கலங்கரை விளக்கமாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.
முந்தைய அரசுகள் கும்பமேளா மற்றும் மத யாத்திரைகளை புறக்கணித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் இருந்தபோதிலும், பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர் என்று கூறினார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையுடன் தொடர்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறிய அவர், தற்போதைய அரசின் கீழ் மத்திய மற்றும் மாநில மட்டத்தில் இந்தியாவின் மரபுகள் மற்றும் நம்பிக்கைக்கு ஆழ்ந்த மரியாதை இருப்பதாக குடிமக்களுக்கு உறுதியளித்தார். கும்பமேளாவில் பங்கேற்கும் யாத்ரீகர்களுக்கு வசதிகளை செய்து கொடுப்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் பொறுப்பாகக் கருதுவதாக அவர் கூறினார். பல்வேறு திட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சுமூகமான முன்னேற்பாடுகளை உறுதி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அயோத்தி, வாரணாசி, ரேபரேலி, லக்னோ போன்ற நகரங்களில் இருந்து பிரயாக்ராஜுக்கு இணைப்பை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி, யாத்ரீகர்களுக்கு எளிதான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு தயாராகும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளின் கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், ‘ஒட்டுமொத்த அரசு‘ அணுகுமுறையை நடைமுறையில் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சி மற்றும் இந்தியாவின் பாரம்பரியத்தை வளப்படுத்துதல் ஆகிய இரண்டிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதை குறிப்பிட்ட பிரதமர், ராமாயண சுற்றுலா, கிருஷ்ணா சுற்றுலா, புத்தமத சுற்றுலா மற்றும் தீர்த்தங்கர் சுற்றுலா ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துரைத்தார். ஸ்வதேஷ் தர்ஷன், பிரசாத் போன்ற திட்டங்கள் பற்றிப் பேசிய பிரதமர், புனித தலங்களில் வசதிகளை அரசு விரிவுபடுத்தி வருவதாகக் கூறினார். பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானத்தின் மூலம் அயோத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவர் எடுத்துரைத்தார், இது ஒட்டுமொத்த நகரத்தையும் உயர்த்தியுள்ளது. விஸ்வநாத் தாம் மற்றும் மகாகல் மகாலோக் போன்ற திட்டங்கள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். பிரயாக்ராஜில் உள்ள அக்ஷய் வாட் வழித்தடம், ஹனுமான் மந்திர் வழித்தடம் மற்றும் பரத்வாஜ் ரிஷி ஆசிரம வழித்தடம் ஆகியவை இந்த தொலைநோக்கை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், சரஸ்வதி கூப், படல்புரி, நாக்வாசுகி மற்றும் துவாதாஸ் மாதவ் மந்திர் போன்ற இடங்களும் யாத்ரீகர்களுக்காக புத்துயிர் பெற்று வருகின்றன என்றார்.
மரியாதா புருஷோத்தமனாக மாறுவதற்கான ராமரின் பயணத்தில் நிஷாத்ராஜ் பூமியான பிரயாக்ராஜ் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பக்தி மற்றும் நட்பின் அடையாளமாக, ராமரின் கால்களைக் கழுவி, தனது படகுடன் ஆற்றைக் கடக்க உதவிய குகன் அத்தியாயம் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார். பகவான் கூட தனது பக்தரின் உதவியை நாடலாம் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது என்று அவர் மேலும் கூறினார். ஷ்ரிங்வெர்பூர் தாமின் வளர்ச்சி இந்த நட்புக்கு ஒரு சான்றாகும் என்றும், கடவுள் ராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலைகள் எதிர்கால சந்ததியினருக்கு நல்லிணக்கத்தின் செய்தியை தொடர்ந்து கொண்டு செல்லும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
பிரம்மாண்டமான கும்பமேளாவை வெற்றிகரமாக மாற்றுவதில் தூய்மையின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். பிரயாக்ராஜில் முறையான சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மையை உறுதி செய்வதற்காக கங்கை புத்துயிரூட்டல் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், கங்கா தூத், கங்கா பிரஹாரி மற்றும் கங்கா மித்ராக்களை நியமிப்பது போன்ற முயற்சிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை 15,000-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கும்பமேளாவை தூய்மைப்படுத்துவதை உறுதி செய்வார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே தனது நன்றியைத் தெரிவித்த அவர், கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்மீக மற்றும் சுத்தமான சூழலை வழங்குவதில் அவர்களின் அர்ப்பணிப்பை ஒப்புக் கொண்டார். பயன்படுத்தப்பட்ட தட்டுகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு பணியும் முக்கியமானது என்ற செய்தியை அனுப்பிய கிருஷ்ணரை உவமையாகக் கூறிய பிரதமர், துப்புரவுப் பணியாளர்கள் தங்கள் செயல்களால் இந்த நிகழ்வின் மகத்துவத்தை அதிகரிப்பார்கள் என்று கூறினார். 2019 கும்பமேளாவில் தூய்மைக்காக கிடைத்த பாராட்டுகளை நினைவு கூர்ந்த பிரதமர், துப்புரவுப் பணியாளர்களின் கால்களைக் கழுவி தமது நன்றியை வெளிப்படுத்தியதையும், அது அவருக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
கும்பமேளா பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வலியுறுத்திய திரு மோடி, இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விடுகிறது என்றார். கும்பமேளாவுக்கு முன்பிருந்தே, இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். சங்மக நதிக்கரையில் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு தற்காலிக நகரம் அமைக்கப்படும் என்றும், தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில் பிரயாக்ராஜில் ஒழுங்கை பராமரிக்க ஏராளமான மக்கள் தேவைப்படுவார்கள் என்று அவர் கூறினார். 6,000-க்கும் மேற்பட்ட படகோட்டிகள், ஆயிரக்கணக்கான கடைக்காரர்கள், மத சடங்குகள் மற்றும் புனித தீர்த்தங்களுக்கு உதவுபவர்களின் பணி அதிகரிப்பதைக் காண்பார்கள் என்றும், இது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் திரு மோடி கூறினார். விநியோகச் சங்கிலியை பராமரிக்க, வணிகர்கள் மற்ற நகரங்களில் இருந்து பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார். கும்பமேளாவின் தாக்கம் சுற்றுப்புற மாவட்டங்களிலும் உணரப்படும் என்று பிரதமர் கோடிட்டுக் காட்டினார். பிற மாநிலங்களில் இருந்து வரும் யாத்ரீகர்கள் ரயில் அல்லது விமான சேவைகளைப் பயன்படுத்துவார்கள், இது பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும் என்று அவர் மேலும் கூறினார். கும்பமேளா சமூகத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களின் பொருளாதார அதிகாரம் பெறுவதற்கும் பங்களிக்கும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மகா கும்பமேளா 2025-ஐ வடிவமைக்கும் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை திரு மோடி குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகரித்துள்ளனர், டேட்டா விலை 2013 ஐ விட மிகவும் மலிவானது என்று அவர் சுட்டிக்காட்டினார். பயனர் நட்பு பயன்பாடுகள் கிடைப்பதால், குறைந்த தொழில்நுட்ப அறிவு உள்ளவர்கள் கூட அவற்றை எளிதாகப் பயன்படுத்த முடியும் என்று கூறிய அவர், பதினொரு இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் திறன் கொண்ட கும்பமேளாவிற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் சாட்போட் தொழில்நுட்பத்தின் முதல் பயன்பாட்டைக் குறிக்கும் ‘கும்ப சஹாயக்‘ சாட்போட் அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டார். ஒற்றுமையின் அடையாளமாக கும்பமேளாவின் சாரத்தை சித்தரிக்கும் புகைப்படப் போட்டிகளை நடத்துவது போன்ற அதிக மக்களை ஈடுபடுத்த தரவு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இந்த புகைப்படங்கள், எண்ணற்ற உணர்வுகளையும் வண்ணங்களையும் கலக்கும் ஒரு மகத்தான காட்சியை உருவாக்கும். கூடுதலாக, ஆன்மீகம் மற்றும் இயற்கையை மையமாகக் கொண்ட போட்டிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார், இது கும்பமேளாவின் ஈர்ப்பை குறிப்பாக இளைஞர்களிடையே மேலும் அதிகரிக்கும்.
மகா கும்பமேளாவிலிருந்து வெளிப்படும் கூட்டு மற்றும் ஆன்மீக சக்தி, வளர்ந்த இந்தியாவை நோக்கிய தேசத்தின் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். கும்பமேளா நீராடல் வரலாற்றுச் சிறப்புமிக்க மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தின் மூலம் மனிதகுலத்தின் நலனுக்காக பிரார்த்தனை செய்தார். புனித நகரமான பிரயாக்ராஜுக்கு வருகை தந்த அனைத்து யாத்ரீகர்களையும் வரவேற்ற பிரதமர், தமது நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி. ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர்கள் திரு. கேசவ் பிரசாத் மவுரியா, திரு. பிரஜேஷ் பதக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பிரயாக்ராஜ் சென்று, சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனத்தையும், பின்னர் அக்ஷய வத விருட்சத்தில் பூஜையையும், அதைத் தொடர்ந்து அனுமன் மந்திர் மற்றும் சரஸ்வதி கூப்பில் தரிசனம் மற்றும் பூஜையையும் மேற்கொண்டார். மஹா கும்பமேளா கண்காட்சி தளத்தில் நடைப்பயணத்தையும் பிரதமர் மேற்கொண்டார்.
மகா கும்பமேளா 2025-க்கான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பிரயாக்ராஜில் உள்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும் தடையற்ற இணைப்பை வழங்குவதற்கும் 10 புதிய சாலை மேம்பாலங்கள், நிரந்தர படித்துறைகள், ஆற்றங்கரை சாலைகள் போன்ற பல்வேறு ரயில் மற்றும் சாலை திட்டங்கள் இதில் அடங்கும்.
தூய்மை மற்றும் நிர்மல் கங்கை குறித்த தமது உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, கங்கை நதிக்கு செல்லும் சிறிய வடிகால்களை இடைமறித்து, கட்டுதல், திருப்பி விடுதல் மற்றும் சுத்திகரிப்பு செய்யும் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுத்திகரிக்கப்படாத நீர் கங்கையில் பூஜ்ஜியமாக வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்படும். குடிநீர் மற்றும் மின்சாரம் தொடர்பான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
பரத்வாஜ் ஆசிரம வழித்தடம், சிரிங்வெர்பூர் தாம் வழித்தடம், அக்ஷயவத் வழித்தடம், ஹனுமான் மந்திர் உள்ளிட்ட முக்கிய கோயில் வழித்தடங்களை பிரதமர் திறந்து வைத்தார். இந்தத் திட்டங்கள் பக்தர்களுக்கு எளிதான அணுகலை உறுதி செய்வதுடன், ஆன்மிக சுற்றுலாவையும் மேம்படுத்தும். மகா கும்பமேளா 2025 பக்தர்களுக்கு நிகழ்வுகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் புதுப்பிப்புகளை வழங்குவதற்கான விவரங்களை வழங்கும் கும்பமேளா சாட்போட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்.
***
AD/PKV/KPG/DL
महाकुंभ हमारी आस्था, अध्यात्म और संस्कृति का दिव्य महोत्सव है। इसकी तैयारियों का जायजा और विभिन्न विकास कार्यों के लोकार्पण के लिए प्रयागराज की पवित्र भूमि पर आकर सौभाग्यशाली महसूस कर रहा हूं। https://t.co/pxQSGIUOKK
— Narendra Modi (@narendramodi) December 13, 2024
प्रयाग वो है, जहां पग-पग पर पवित्र स्थान हैं, जहां पग-पग पर पुण्य क्षेत्र हैं: PM @narendramodi pic.twitter.com/a73JLRvvrH
— PMO India (@PMOIndia) December 13, 2024
किसी बाहरी व्यवस्था के बजाय कुंभ, मनुष्य के अंतर्मन की चेतना का नाम है: PM @narendramodi pic.twitter.com/k6WOTpDnDf
— PMO India (@PMOIndia) December 13, 2024
महाकुंभ, एकता का महायज्ञ है: PM @narendramodi pic.twitter.com/EjO0Fn54pG
— PMO India (@PMOIndia) December 13, 2024