Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்தார். ரயில்வே, சாலை, எண்ணெய், எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்த திட்டங்கள் தொடர்புடையவையாகும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், புலந்த்ஷஹர் மக்கள், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள் காட்டிய அன்பு, நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். ஜனவரி 22 ஆம் தேதி பகவான் ஸ்ரீ ராமரின் தரிசனத்திற்கும், இன்றைய நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மக்கள் வருகை தந்ததற்கும் நன்றி கூறுவதாக திரு மோடி தெரிவித்தார். ரயில்வே, நெடுஞ்சாலை, பெட்ரோலிய குழாய், தண்ணீர், கழிவுநீர், மருத்துவக் கல்லூரி, தொழில்துறை நகரம் ஆகிய துறைகளில் இன்று ரூ.19,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக புலந்த்ஷஹர் மக்களுக்கும், ஒட்டுமொத்த மேற்கு உத்தரப்பிரதேச மக்களுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். யமுனை, ராம் கங்கை நதிகளின் தூய்மை இயக்கம் தொடர்பான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

ராமரின் பணி, நாட்டின் பணி ஆகிய இரண்டிற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கல்யாண் சிங் போன்ற ஒரு புதல்வரை இந்தப் பகுதி நாட்டிற்கு அளித்துள்ளது என்று பிரதமர் கூறினார். அயோத்தி கோயில் குறித்த திரு கல்யாண் சிங், அவரைப் போன்றவர்களின் கனவை நாடு நனவாக்கியிருப்பது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். வலிமையான நாடு, உண்மையான சமூக நீதி என்ற அவரது கனவை நனவாக்க நாம் மேலும் விரைவாக பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அயோத்தியில் பிராண பிரதிஷ்டை விழா நிறைவடைந்ததை குறிப்பிட்ட பிரதமர், “நாட்டின் பிரதிஷ்டைக்கு” முன்னுரிமை அளித்து, அதை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். “கடவுளில் இருந்து தேசத்திற்கு, ராமரில் இருந்து ராஜ்ஜியத்திற்கு என்ற பாதையை நாம் வலிமைப்படுத்த  வேண்டும்” என்று கூறிய திரு மோடி, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். உயர்ந்த இலக்குகளை அடைவது குறித்து பேசிய பிரதமர், அனைவரும் இணைவோம் முயற்சி உணர்வுடன் தேவையான அனைத்து ஆதாரங்களையும் திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண்மை, அறிவியல், கல்வி, தொழில், தொழில்முனைவு ஆகிய துறைகளுக்கு புத்துயிர் அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய பிரதமர் திரு மோடி, “உத்தரபிரதேசத்தின் விரைவான வளர்ச்சி வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க இன்றியமையாதது” என்று குறிப்பிட்டார். “இன்றைய நிகழ்ச்சி இந்த திசையில் ஒரு பெரிய படியாகும்” என்று அவர் மேலும் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் வளர்ச்சியில் பிராந்திய ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் புறக் கணிக்கப்பட்டதாக கூறினார். ‘ஆட்சியாளர்’ மனப்பான்மையையும், முந்தைய காலங்களில் அதிகாரத்திற்காக சமூகப் பிளவுகளை தூண்டிவிட்டதையும் பிரதமர் விமர்சித்தார், இதன் விளைவாக மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டதாக கூறினார். “நாட்டின் மிகப்பெரிய மாநிலம் பலவீனமாக இருந்தால், நாடு எப்படி வலுவாக இருந்திருக்க முடியும்?” என்று பிரதமர் கேள்வி எழுப்பினார்.

உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் இரட்டை என்ஜின் கொண்ட அரசு அமைக்கப்பட்டதன் மூலம், பழைய சவால்களை சமாளிக்க மாநிலம் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளது என்றும், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றும், இன்றைய நிகழ்ச்சி அரசின் உறுதிப்பாட்டிற்கு சான்று என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை உதாரணங்களாக சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் உள்ள இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்று உருவாக்கப்பட்டதையும், பல புதிய தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டதையும் குறிப்பிட்டார். நவீன அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் உத்தரப் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணைப்பை மேம்படுத்துதல், முதல் நமோ பாரத் ரயில் திட்டத்தைத் தொடங்குதல், பல நகரங்களில் மெட்ரோ இணைப்பு, கிழக்கு, மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடங்களுக்கான மையமாக மாநிலம் மாறுதல் ஆகியவற்றில் அரசின் முன்னுரிமையையும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த வளர்ச்சித் திட்டங்கள் வரவிருக்கும் நூற்றாண்டுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார். ஜெவர் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டதன் மூலம் இப்பகுதி புதிய வலிமையையும் விமானத்தையும் காணும் என்று பிரதமர் திரு மோடி மேலும் கூறினார்.

“இன்று, அரசின் முயற்சிகளால், மேற்கு உத்தரப்பிரதேசம் நாட்டின் முக்கிய வேலைவாய்ப்பு அளிக்கும் பகுதிகளில் ஒன்றாக மாறி வருகிறது” என்று பிரதமர் கூறினார். உலகத் தரம் வாய்ந்த 4 தொழில் பொலிவுறு நகரங்களை உருவாக்க அரசு பணியாற்றி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நகரங்களில் ஒன்று மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் உள்ளது. இந்த முக்கியமான நகரத்தை பிரதமர் இன்று திறந்து வைத்தார். இது இப்பகுதியில் உள்ள தொழில்துறை, சிறு மற்றும் குடிசைத் தொழில்களுக்கு பயனளிக்கும். இந்த நகரம் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு புதிய வழிகளை உருவாக்கும் என்றும், உள்ளூர் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மகத்தான நன்மைகளை வழங்கும் என்றும் பிரதமர் திரு மோடி கூறினார்.

முந்தைய காலங்களில் போக்குவரத்து வசதி இல்லாததால் வேளாண்மையில் ஏற்பட்ட பாதகமான தாக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், புதிய விமான நிலையம், புதிய பிரத்யேக சரக்கு வழித்தடம் ஆகியவற்றில் தீர்வைக் காணலாம் என்று கூறினார். கரும்பு விலையை உயர்த்தியதற்காகவும், மண்டியில் விளைபொருட்கள் விற்கப்பட்டவுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு விரைவாக பணம் செலுத்தப்படுவதை உறுதி செய்ததற்காகவும் இரட்டை என்ஜின் அரசை பிரதமர் பாராட்டினார். இதேபோல், எத்தனால் மீது கவனம் செலுத்துவது கரும்பு விவசாயிகளுக்கு லாபகரமானது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“விவசாயிகள் நலனே அரசின் உயர் முன்னுரிமை” என்று திரு மோடி குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்க அரசு முயற்சித்து வருவதாகக் கூறிய அவர், நாட்டின் விவசாயிகளுக்கு குறைந்த விலை உரங்கள் கிடைக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவழிப்பதையும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் ரூ.3,000 மதிப்புள்ள யூரியா மூட்டை 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்றும், நானோ யூரியா உருவாக்கம் குறித்தும் பிரதமர் திரு மோடி பேசினார். அங்கு ஒரு சிறிய பாட்டிலில், உரங்களை வைத்திருப்பதன் மூலம் நுகர்வு குறைக்கப்பட்டு பணத்தை சேமிக்கிறது என்றும் அவர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.2.75 லட்சம் கோடியை அரசு செலுத்தியுள்ளது என்று திரு மோடி தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் வேளாண் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து தெரிவித்த பிரதமர், கூட்டுறவு சங்கங்களின் எல்லை தொடர்ந்து விரிவடைந்து வருவதாக குறிப்பிட்டார். சிறு விவசாயிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண்  உற்பத்தியாளர் அமைப்புகளை அவர் பட்டியலிட்டார். கூட்டுறவு அமைப்புகள் விற்பனை, கொள்முதல், கடன்கள், உணவு பதப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படுகின்றன என்றும், உலகின் மிகப்பெரிய சேமிப்பு தொடர்பான திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் குளிர்பதன சேமிப்பு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு வருவதையும் திரு மோடி குறிப்பிட்டார்.

வேளாண் துறையை நவீனமயமாக்கும் அரசின் முயற்சி குறித்து மீண்டும் குறிப்பிட்ட பிரதமர், இதற்காக மகளிர் சக்தி ஒரு பெரிய ஊடகமாக மாற முடியும் என்பதை தெரிவித்தார். நமோ ட்ரோன் மகளிர் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆளில்லா ட்ரோன்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். “நமோ ட்ரோன் திட்டம் மூலம் மகளிர் எதிர்காலத்தில் கிராமப்புற பொருளாதாரம், வேளாண்மைக்கு ஒரு பெரிய சக்தியாக மாறப் போகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

சிறு விவசாயிகள், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பொதுநலத் திட்டங்கள் குறித்து குறிப்பிட்ட பிரதமர், கோடிக்கணக்கான உறுதியான வீடுகள், கழிப்பறைகள், குழாய் நீர் இணைப்புகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகள், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இலவச ரேஷன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அரசின் திட்டத்தில் இருந்து எந்த பயனாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பது அரசின் முயற்சியாகும் என்றும், இதற்காக மோடி  உத்தரவாத வாகனங்கள் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்து உத்தரபிரதேசத்தில் கூட லட்சக்கணக்கான மக்களை சேர்த்து வருகின்றன என்று திரு மோடி கூறினார்.

அரசின் திட்டங்களின் பலன் அனைவருக்கும் கிடைக்கும் என்பது மோடியின் உத்தரவாதம். இன்று மோடியின் உத்தரவாதத்தை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமாக நாடு கருதுகிறது” என்று பிரதமர் கூறினார். “அரசு திட்டத்தின் பலன்கள் ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைவதை உறுதி செய்ய தற்போது நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இது பாகுபாடு, ஊழலுக்கான எந்தவொரு வாய்ப்பையும் அகற்றுவதாகவும் இதுதான் உண்மையான மதச்சார்பின்மை, சமூக நீதி. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்களின் கனவுகள் என்றும் அவர் கூறினார். அரசின் உண்மையான முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து  விடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனது உரையின் நிறைவாக பேசிய பிரதமர், “என்னைப் பொறுத்தவரை நீங்கள் எனது குடும்பம். உங்கள் கனவே என் தீர்மானம்.” என்று குறிப்பிட்டார். கிராமங்கள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைவருக்கும் அதிகாரம் அளிக்கும் இயக்கம் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.

உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு. பிரஜேஷ் பதக், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னணி

புதிய குர்ஜா – புதிய ரேவாரி இடையேயான 173 கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை மின்மயமாக்கப்பட்ட பாதையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேற்கு, கிழக்கு சரக்கு வழித்தடங்களுக்கு இடையே முக்கியமான இணைப்பை நிறுவுவதால் இந்த புதிய சரக்கு வழித்தடப் பிரிவு முக்கியமானது. மேலும், இந்த பிரிவு அதன் குறிப்பிடத்தக்க பொறியியல் சாதனைக்காகவும் அறியப்படுகிறது. இது ‘உயரமான மின்மயமாக்கலுடன் கூடிய ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இரட்டை ரயில் பாதை சுரங்கப்பாதை’யைக் கொண்டுள்ளது, இது உலகிலேயே முதன்முறையாகும். இந்த சுரங்கப்பாதை இரட்டை அடுக்கு கொள்கலன் ரயில்களை தடையின்றி இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு வழித்தடம் பாதையில் சரக்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளதால் பயணிகள் ரயில்களின் செயல்பாட்டை மேம்படுத்த இந்த புதிய சரக்கு வழித்தடப் பிரிவு உதவும்.

மதுரா – பல்வால் பிரிவு, சிப்பியானா புஜுர்க் – தாத்ரி பிரிவை இணைக்கும் நான்காவது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புதிய வழித்தடங்கள் நாட்டில் தெற்கு, மேற்கு கிழக்கு பகுதியை தலைநகருடன் ரயில் இணைப்பை மேம்படுத்தும்.

பிரதமர் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அலிகார் முதல் பத்வாஸ் வரையிலான நான்கு வழிப்பாதை தொகுப்பு-1 (தேசிய நெடுஞ்சாலை 34-ல் அலிகார்-கான்பூர் பிரிவின் ஒரு பகுதி); ஷாம்லி (தேசிய நெடுஞ்சாலை-709A) வழியாக மீரட் முதல் கர்னால் எல்லையை அகலப்படுத்துதல்; தேசிய நெடுஞ்சாலை 709 தொகுப்பு-2ல் ஷாம்லி-முசாபர்நகர் பிரிவை நான்கு வழிப்பாதையாக மாற்றியமைத்தல். ரூ .5000 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த செலவில் உருவாக்கப்பட்ட சாலை திட்டங்கள் இணைப்பை மேம்படுத்துவதோடு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

இந்த நிகழ்ச்சியின் போது, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துண்ட்லா-கவாரியா குழாய் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த 255 கி.மீ நீளமுள்ள குழாய் திட்டம் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மதுரா, துண்ட்லா ஆகிய இடங்களில் நீரேற்று வசதிகளையும், டன்ட்லா, லக்னோ, கான்பூர் ஆகிய இடங்களில் விநியோக வசதிகளையும் கொண்ட பரவுனி – கான்பூர் குழாயின் கவாரியா தி-பாயின்ட் வரை பெட்ரோலியப் பொருட்களை கொண்டு செல்வதற்கு உதவும்.

‘கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில் நகரம் திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.1,714 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டம் 747 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மற்றும் மேற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு முனையங்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது, தெற்கில், கிழக்கு புறவழி விரைவுச் சாலை, கிழக்கில் டெல்லி-ஹவுரா அகல ரயில் பாதை ஆகியவை சந்திக்கின்றன. நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவு சாலை (5 கி.மீ), யமுனா விரைவுசாலை (10 கி.மீ), டெல்லி விமான நிலையம் (60 கி.மீ), ஜேவர் விமான நிலையம் (40 கி.மீ), அஜய்ப்பூர் ரயில் நிலையம் (0.5 கி.மீ) மற்றும் புதிய தாத்ரி சரக்கு வழித்தட நிலையம் (10 கி.மீ) ஆகிய பல மாதிரி இணைப்புக்கான பிற உள்கட்டமைப்புகள் போக்குவரத்து வசதிக்கு வழி செய்கிறது. இந்த பிராந்தியத்தில் தொழில்துறை வளர்ச்சி, பொருளாதார செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதில் இந்த திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் ரூ .460 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானம் உட்பட புதுப்பிக்கப்பட்ட மதுரா கழிவுநீர் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தப் பணியில் மசானியில் 30 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், டிரான்ஸ் யமுனாவில் தற்போதுள்ள 30 மில்லியன் லிட்டர், மசானியில் 6.8 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானம் ஆகியவை அடங்கும். மொராதாபாத் (ராம்கங்கா) கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் (முதற்கட்டம்) பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். சுமார் ரூ .330 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த திட்டத்தில் 58 எம்.எல்.டி கழிவுநீர் சுத்திகரிப்பு, சுமார் 264 கி.மீ கழிவுநீர் நெட்வொர்க் மற்றும் மொராதாபாத்தில் ராம்கங்கா நதியின் மாசு குறைப்புக்காக ஒன்பது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

***

(Release ID: 1999536)

ANU/AD/IR/RS/KRS