Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார்


உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ. 3880 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கிவைத்தார். திரண்டிருந்தோரிடையே  உரையாற்றிய அவர் காசியுடன் தமது ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார்.   தமக்கு  ஆசி வழங்கியதற்காக அவர்  தமது குடும்பத்தினருக்கும் இந்த பிராந்திய மக்களுக்கும்

மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.  தமக்கு  வழங்கிய ஆதரவையும், தம் மீதான அன்பையும்  அவர் அங்கீகரித்தார். இந்த அன்புக்கு தாம் கடன்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்காசி தமக்குள் இருப்பதாகவும், காசியைச் சார்ந்து தாம் இருப்பதாகவும்  கூறினார்.  நாளை  அனுமன் ஜென்மோத்சவம்  என்ற  புனிதநாள்  என்று குறிப்பிட்ட திரு மோடி, காசியில் உள்ள  சங்கட் மோச்சன் மகராஜிக்கு பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றது தமக்கு  கிடைத்த கௌரவம் என்றார்.  அனுமன் ஜென்மோத்சவம் நடைபெறவுள்ள நிலையில், வளர்ச்சியின் திருவிழாவைக் கொண்டாட மக்கள் பெருமளவு ஒன்று திரண்டிருப்பதை  அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் வாரணாசியின் வளர்ச்சி புதிய உத்வேகத்தை பெற்றுள்ளது என்று கூறிய பிரதமர்காசி  நவீனத்தை  தழுவிக் கொண்டுள்ளது.  அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்கிறதுஒளிமயமான எதிர்காலத்தை  பெறவிருக்கிறது என்றார். காசி வெகு காலத்திற்கு வெறுமனே தொன்மையானதாக மட்டுமே இருக்காது என்று  கூறிய அவர்முன்னேற்றமடைந்ததாகவும் இருக்கும் என்றார். தற்போது இது பூர்வாஞ்சலின் பொருளாதார வரைபடத்தில் மையநிலையில் உள்ளது  என்று அவர் கூறினார்.  பகவான் மகாதேவ் மூலம் வழிகாட்டப்படும்  காசி, தற்போது  பூர்வாஞ்சலின்  வளர்ச்சி ரதத்தை செலுத்துகிறது என்று கூறினார்.

காசி, மற்றும் பூர்வாஞ்சலின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடைய பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பற்றியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பது பற்றியும், குறிப்பிட்ட  திரு மோடி, உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் போக்குவரத்து  இணைப்பை வலுப்டுத்துவது, அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான இயக்கம், கல்வி, சுகாதார விரிவாக்கம், விளையாட்டு வசதிகள் போன்றவற்றையும் எடுத்துரைத்தார்.  அனைத்து பகுதிகளுக்கும், குடும்பங்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதற்கு  அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறிய பிரதமர், இந்த முன் முயற்சிகள் பூர்வாஞ்சலை வளர்ச்சியடைந்த பகுதியாக  மாற்றுவதில்  மைல் கல்லாக  அமையும் என்று கூறினார்.  இந்தத் திட்டங்கள் மூலம்  காசியில் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் பலன்  கிடைக்கும் என்று  குறிப்பிட்ட அவர்இந்த வளர்ச்சியின் முயற்சிகளுக்காக  பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மகாத்மா ஜோதிபா பூலேயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவது பற்றி கூறிய  பிரதமர், அவரும், சாவித்ரிபாய் பூலேயும் சமூக நலனுக்கும், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கும் தங்களின்  வாழ்நாளை  அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்றார். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளை எடுத்துரைத்த அவர், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில்  உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமது அரசு, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தை  பின்பற்றுவதாக  கூறிய அவர், பூர்வாஞ்சலின் கால்நடை வளர்ப்பு குடும்பங்கள் குறிப்பாக கைவினைத் தொழில் செய்யும் பெண்கள் இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய முன்னுதாரணத்தை  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  இந்தப் பெண்களிடம்  நம்பிக்கை வைத்துள்ள இந்தப் பகுதி வரலாற்றை உருவாக்குகிறது என்றார்.   உத்தரப்பிரதேசத்தின் பனாரஸ் பால்பண்ணை திட்டத்துடன் இணைந்துள்ள கால்நடை வளர்ப்போர் குடும்பங்களுக்கு போனஸ் வழங்கப்படுவதை யும் அவர்  சுட்டிக்காட்டினார். ரூ.100 கோடிக்கும் அதிகமான இந்த போனஸ் அன்பளிப்பல்ல, மாறாக அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான பரிசாகும் என்று தெரிவித்த பிரதமர், அவர்களின்  உழைப்பையும், விடா முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது என்றார். 

காசியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் செல்வாக்கையும், வாழ்க்கை நிலையையும் பனாரஸ் பால்பண்ணை மாற்றியமைத்துள்ளது என்று உறுதிபட தெரிவித்த திரு மோடி, இந்த பால்பண்ணை வாழ்க்கையை எவ்வாறு மறுவடிவமைப்பு  செய்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் பூர்வாஞ்சலில் ஏராளமான பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றியுள்ளது என்று பெருமையுடன் குறிப்பிட்ட அவர், வாழ்க்கை நடத்துவதில் சிரமங்கள் என்பதை மாற்றி வளத்திற்கான பாதையை ஏற்படுத்தித் தந்துள்ளன என்றார்.  இந்த முன்னேற்றம் பனாரசிலும், உத்தரப் பிரதேசத்திலும் மட்டுமின்றி நாடு முழுவதும் இருப்பதாக  அவர் கூறினார்.   உலக அளவில் பால் உற்பத்தியில்  மிகப்பெரிய நாடாக  இருக்கும் இந்தியா, கடந்த  பத்தாண்டுகளில்  பால்  உற்பத்தி அளவு  சுமார் 65 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.  இந்த வெற்றிக்கு லட்சக்கணக்கான விவசாயிகளும், கால்நடை உரிமையாளர்களும்  காரணமாகும் என்பதை எடுத்துரைத்த அவர், இந்த சாதனைகள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் பயன் என்று  கூறினார்.  கால்நடை உரிமையாளர்களை விவசாயக் கடன் அட்டை திட்டத்துடன்  இணைத்தல், கடன் வரம்பை அதிகரித்தல், மானிய திட்டங்களை அறிமுகம் செய்தல் உட்பட  பால்பண்ணை துறையை இயக்க கதியில்  இந்த முன்முயற்சிகள் முன்னேற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார். கால்நடைகளைப் பராமரிக்க கோமாரி நோய்களுக்கு எதிரான இலவச தடுப்பூசி திட்டம் பற்றியும் குறிப்பிட்ட பிரதமர்ஒருங்கிணைக்கப்பட்ட  பால் சேகரிப்புக்காக 20 ஆயிரத்திற்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்களை புனரமைக்கும் முயற்சிகள், புதிய உறுப்பினர்களை இணைத்தல் ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார். தேசிய கோகுல் இயக்கத்தின் கீழ் அறிவியல் பூர்வமான இனப்பெருக்கத்தின் மூலம்உள்நாட்டு கால்நடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுவதையும்  அவர் சுட்டிக்காட்டினார். இந்த  முன் முயற்சிகள், கால்நடை உரிமையாளர்களை வளர்ச்சிப் பாதையில், சிறந்த சந்தையில், வாய்ப்புகளில்  இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார்.  பனாரஸ் பால்பண்ணையானது பூர்வாஞ்சலில் உள்ள சுமார் ஒரு லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் சேகரிப்பதை பாராட்டிய அவர், இது  அவர்களுக்கு அதிகாரமளிப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரங்களைப் பலப்படுத்துவதாகக் கூறினார்.

பல மூத்த குடிமக்களுக்கு  ஆயுஷ்மான் வாய வந்தனா அட்டைகள் வழங்கும் வாய்ப்பு தமக்கான பேறு என்று பிரதமர் குறிப்பிட்டார். அவர்களின் முகங்களில் திருப்தி உணர்வு வெளிப்படுவதாக எடுத்துரைத்த அவர்இந்தத் திட்டத்தின் வெற்றிக்கான அடையாளம் இது என்று குறிப்பிட்டார். பூர்வாஞ்சல் பகுதியில் 10-11 ஆண்டுகளுக்கு முன்  மருத்துவ சிகிச்சை தொடர்பாக  மூத்த குடிமக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை  நினைவுகூர்ந்த  அவர், இந்தப் பகுதியில் தற்போது பெருவாரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், காசி தற்போது சிறந்த ஆரோக்கியத்தின் தலைநகராக மாறிவருகிறது என்றும் கூறினார்.  மருத்துவமனைகள் அதிகரித்திருப்பது பற்றிக் கூறிய பிரதமர், ஒரு காலத்தில் தில்லி, மும்பை என்று மட்டுமே இருந்த  மருத்துவமனை வசதிகள் தற்போது  மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கிடைக்கின்றன என்றார். இது தான் வளர்ச்சியின் சாராம்சமாகும். அதாவது மக்களுக்கு  நெருக்கமாக வசதிகளை கொண்டு வருவது என்று பிரதமர் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் சுகாதாரப் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் என்பவை மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் நின்று விடாமல், நோயாளிகளின் கண்ணியத்தை மேம்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்ட திரு மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும், இது சிகிச்சையை அளிப்பதுடன் நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார். வாரணாசியில் ஆயிரக்கணக்கானோரும், உத்தரப்பிரதேசம் முழுவதும் லட்சக்கணக்கானோரும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும், ஒவ்வொரு சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் நிவாரணம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும்  குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது என்றும், அவர்களின் சுகாதாரப் பராமரிப்புக்கு அரசே பொறுப்பேற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்ற தமது வாக்குறுதியை நினைவுகூர்ந்த பிரதமர், இதன் பொருட்டு ஆயுஷ்மான் வயவந்தனா திட்டம் தொடங்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இலவச சிகிச்சையை இந்த முயற்சி உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார். வாரணாசி மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 50,000 அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது வெறும் புள்ளிவிவரம் அல்ல, சேவைக்கான அர்ப்பணிப்பு என்றும் அவர் கூறினார். குடும்பங்கள் நிலத்தை விற்கவோ, கடன் வாங்கவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவியற்ற நிலையை எதிர்கொள்ளவோ வேண்டிய அவசியத்தை இது நீக்குகிறது. ஆயுஷ்மான் அட்டை மூலம், அவர்களின் சுகாதாரத்திற்கான நிதிப் பொறுப்பை அரசு ஏற்கிறது என்று அவர் தெரிவித்தார்.

காசியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இவை சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன என்றார். தினமும் லட்சக்கணக்கான மக்கள் வாரணாசிக்கு வருகை தந்து, பாபா விஸ்வநாதரை வழிபடுவதையும், புனித கங்கையில் நீராடுவதையும் குறிப்பிட்ட பிரதமர், வாரணாசியில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவதாகக் கூறினார். காசியின் சாலைகள், ரயில்வேக்கள், விமான நிலையம் ஆகியவை பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலேயே இருந்திருந்தால் காசி பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டிருக்கும் என்று அவர் கூறினார். சிறிய திருவிழாக்களின் போது காணப்படும் போக்குவரத்து நெரிசல்களை நினைவு கூர்ந்த அவர், அங்கு பயணிகள் தூசி மற்றும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு செல்ல வேண்டியிருந்ததையும் சுட்டிக்காட்டினார். புல்வாரியா மேம்பாலத்தின் கட்டுமானம் தூரங்களைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, அன்றாட வாழ்க்கைக்கு நிவாரணம் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வட்டச்சாலையின் நன்மைகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது ஜான்பூர் மற்றும் காசிப்பூரில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கும், பல்லியா, மாவ் மற்றும் காசிப்பூர் மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கும் விமான நிலையத்திற்கு செல்லும் பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளது என்று அவர் கூறினார்.

இந்தப் பிராந்தியத்தில் மேம்பட்ட இணைப்பின் காரணமாக காஸிப்பூர், ஜான்பூர், மிர்சாபூர் மற்றும் அசாம்கர் போன்ற நகரங்களுக்கு விரைவான மற்றும் வசதியான பயணத்திற்கு வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு காலத்தில் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தற்போது வளர்ச்சியின் வேகத்தைக் காண்கின்றன என்று குறிப்பிட்டார். வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இணைப்பை மேம்படுத்த கடந்த பத்தாண்டுகளில் சுமார் ரூ.45,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த முதலீடு, கட்டமைப்பில் மட்டுமின்றி, நம்பிக்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, காசி மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு பயனளித்துள்ளது என்று அவர் கூறினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்களை விரிவுபடுத்தும் தாகவும் அவர் அறிவித்தார். லால் பகதூர் சாஸ்திரி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் இணைப்பை மேம்படுத்த விமான நிலையம் அருகே ஆறு வழி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதை பிரதமர் விளக்கினார். பதோஹி, காசிப்பூர் மற்றும் ஜான்பூர் பகுதிகளை இணைக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டதையும், பிகாரிபூர் மற்றும் மண்டுவாடிஹ் ஆகிய இடங்களில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேம்பாலங்கள் கட்டப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறியது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். வாரணாசி நகரையும் சாரநாத்தையும் இணைக்கும் புதிய பாலம் கட்டப்படுவதாகவும் அவர் அறிவித்தார். இது சாரநாத் செல்லும் போது பிற மாவட்டங்களிலிருந்து பயணிகள் நகரத்திற்குள் நுழைய வேண்டிய தேவையை தவிர்க்கும் என்றார் அவர்.

நடைபெற்று வரும் திட்டங்கள் வரும் மாதங்களில் நிறைவடைந்தவுடன், வாரணாசியில் பயணம் செய்வது மேலும் வசதியானதாக மாறும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முன்னேற்றம் இப்பகுதியில் வேகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் இரண்டையும் ஊக்குவிக்கும் என்று கூறினார். வாழ்வாதாரம் மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக வாரணாசிக்கு வருகை தருபவர்களுக்கு இவை பெரிதும் உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார். காசியில் நகர ரோப்வே அமைப்பதற்கான சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற வசதியை அளிப்பதற்காக உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் வாரணாசியும்  இடம்பெறுகிறது  என்றார்.

வாரணாசியில் ஒவ்வொரு வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களும் பூர்வாஞ்சல் இளைஞர்களுக்குப் பயனளிக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டிய திரு மோடி, காசியின் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருவதை எடுத்துரைத்தார். வாரணாசியில் புதிய விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படுவது குறித்தும், இளம் தடகள வீரர்களுக்கான சிறந்த வசதிகளை உருவாக்குவது குறித்தும் அவர் குறிப்பிட்டார். வாரணாசியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று வரும் புதிய விளையாட்டு வளாகம் திறக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இந்த மைதானங்களில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தைச் சமநிலைப்படுத்தும் இந்தியாவின் பயணத்தை வலியுறுத்திய பிரதமர், இந்த முன்மாதிரியின் மிகச்சிறந்த உதாரணமாக காசி திகழ்கிறது என்றார். கங்கையின் ஓட்டம் மற்றும் இந்தியாவின் உணர்வு குறித்து குறிப்பிட்ட பிரதமர், “இந்தியாவின் ஆன்மா மற்றும் பன்முகத்தன்மையின் மிக அழகான பிரதிநிதித்துவம் காசி” என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தனித்துவமான கலாச்சாரம் மற்றும் காசியின் ஒவ்வொரு சந்திலும் இந்தியாவின் தனித்துவமான வண்ணங்கள் காணப்படுவதைக் குறிப்பிட்ட பிரதமர், ஒற்றுமையின் இழைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தும் காசி-தமிழ்ச் சங்கமம் போன்ற முயற்சிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். காசியில் வரவிருக்கும் ஏக்தா மால், ஒரே கூரையின் கீழ் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும், நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் தயாரிப்புகளை அது வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, அந்த மாநிலத்தின் மீதான ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் மாற்றியுள்ளதாக குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் வாய்ப்புகள் உள்ள மாநிலமாக மட்டுமின்றி, திறமை மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் மாறியுள்ளது என்று அவர் கூறினார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தற்போது உலகளவில் வணிக முத்திரை கொண்ட  பொருளாகப் பிரபலம் அடைந்து வருவதாக, ‘இந்தியாவில் தயாரிக்கப்படும்பொருட்கள் மீதான தேவை அதிகரித்து வருவதாக அவர் கூறினார். புவிசார் குறியீட்டுடன் கூடிய  பல்வேறு தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதையும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புவிசார்  குறியீடுகள் வர்த்தக முத்திரைகளைக் காட்டிலும் கூடுதல் வலிமையானவை என்று அவர் தெரிவித்தார். இத்தகைய குறியீடுகள்  வர்த்தகப் பொருட்களை அடையாளப்படுத்துவதுடன் அது சார்ந்த பகுதியையும் குறிப்பதாக உள்ளன என்று கூறினார். புவிசார் குறியீடுகள் உற்பத்தி செய்யப்படும் பொருளின் பகுதியைக் குறிப்பதாக உள்ளது என்றும் புவிசார் குறியீடுகள் எங்கு சென்றடைகிறதோ, அங்கெல்லாம் அதற்கான சந்தை வாய்ப்புகளும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் புவிசார் குறியீடுகளைப் பெறுவதில் உத்தரப்பிரதேசம் முன்னிலை வகிக்கிறது  என்பதை  சுட்டிக்காட்டிய திரு மோடி, அம்மாநிலத்தின் கலை, கைவினை மற்றும் திறமைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பது அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். வாரணாசி, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதாகவும், இது இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கான அடையாள கடவுச் சீட்டு என்றும் அவர் குறிப்பிட்டார். வாரணாசியின் தபேலா, சேனை, சுவர் ஓவியங்கள், தண்டாய், ஸ்டஃப்டு சிவப்பு மிளகாய், சிவப்பு பேடா மற்றும் திரங்கா பர்பி போன்ற தாயரிப்புகள் அப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளாக உள்ளன என்பதையும் பட்டியலிட்டார். ஜான்பூரின் இமார்டி, மதுராவின் சஞ்சி கலை, புந்தேல்கண்டின் கதியா கோதுமை, பிலிபித்தின் புல்லாங்குழல், பிரயாக்ராஜின் மூஞ்ச் கலை, பரேலியின்  ஜர்தோசி, சித்ரகூட்டின் மர வேலைப்பாடு, லக்கிம்பூர் கேரியின் தாரு ஜர்தோஸி போன்ற தயாரிப்புகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேச  மாநிலத்தின் திறன்கள் தற்போது எல்லைகளைக் கடந்து, அதன் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக் ச்காட்டும் வகையில் உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

காசி நகரத்தைப் பாதுகாப்பது  என்பது நாட்டின் ஆன்மாவைப் பாதுகாப்பது போன்றது என்று பொருள்படும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், காசியை அழகான நகராகப் பராமரிக்க வேண்டும் என்று கூறினார். காசி நகரின் பண்டைய  உணர்வை நவீன அடையாளத்துடன் இணைப்பதில் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், அம்மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்  கலந்து  கொண்டனர்.

பின்னணி

வாரணாசியில் ரூ.3,880 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். உள்கட்டமைப்பு மேம்பாடுகுறிப்பாக  வாரணாசியில் சாலைக் கட்டமைப்பு மேம்படுத்தும் வகையில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், வாரணாசி சுற்றுச் சாலை, சாரநாத் இடையே சாலை மேம்பாலம், நகரின் பிகாரிபூர், மண்டுவாடி சந்திப்புகளில் மேம்பாலங்கள், வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் தேசிய நெடுஞ்சாலை 31-ல் ரூ.980 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

மின்சார கட்டமைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், வாரணாசி கோட்டத்தில் உள்ள ஜான்பூர், சந்தெளலி, காசிப்பூர் மாவட்டங்களில் ரூ.1,045 கோடி மதிப்பிலான இரண்டு 400 கிலோவாட் மற்றும் ஒரு 220 கிலோவாட் மின் பகிர்மான துணை மின் நிலையங்களையும், அது தொடர்பான மின் வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வாரணாசியில் உள்ள சௌகாகாட்டில் 220 கிலோவாட் மின்மாற்றிக்கான துணை மின்நிலையம், காசிப்பூரில் 132 கிலோவாட் மின்மாற்றிக்கான துணை மின் நிலையம் மற்றும் ரூ.775 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள வாரணாசி நகர மின் விநியோக அமைப்பின் விரிவாக்கப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பாதுகாப்புப் படையினருக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக காவல்துறை குடியிருப்புப் பகுதிகளில் தற்காலிக விடுதி மற்றும் ராம்நகர் வளாகத்தில் பாசறை ஆகியவற்றையும் பிரதமர் திறந்து வைத்தார்.  பல்வேறு  காவல் நிலையங்களில் புதிய நிர்வாக கட்டிடங்கள், காவல் குடியிருப்புப் பகுதியில்  விடுதி  அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

அனைவருக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிந்த்ராவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பர்கி கிராமத்தில் சர்தார் வல்லபாய் படேல் அரசு கல்லூரி, 356 கிராமப்புற நூலகங்கள் மற்றும் 100 அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பொலிவுறு நகரங்கள் இயக்கத்தின் கீழ் 77 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை புதுப்பிக்கவும், வாரணாசி சோழப்பூரில் கஸ்தூரிபா காந்தி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டவும் அவர் அடிக்கல் நாட்டினார். நகரில் விளையாட்டு உள்கட்டமைப்பை  மேம்படுத்தும் வகையில், உதய் பிரதாப் கல்லூரியில் மின்னொளி மற்றும் பார்வையாளர் மாடத்துடன் கூடிய செயற்கை புல்தரை மற்றும் ஷிவ்பூரில் ஒரு சிறிய விளையாட்டரங்கம் ஆகியவற்றிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

கங்கை நதியில் சாம்னே படித்துறை, சாஸ்திரி படித்துறை மறுமேம்பாடு, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ரூ.345 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 130 கிராமப்புற குடிநீர் திட்டங்கள், வாரணாசியில் ஆறு நகராட்சி வார்டுகளை  மேம்படுத்துதல் மற்றும் வாரணாசியின் பல்வேறு  இடங்களில்  இயற்கையை ரசித்தல் மற்றும் சிற்பங்களை  நிறுவும் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

கைவினை கலைஞர்களுக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான  ஒருங்கிணைந்த வளாகம், மோகன்சாராயில் போக்குவரத்து நகர் திட்டத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், பெலுப்பூர் டபிள்யூடிபியில் 1 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை, 40 கிராம பஞ்சாயத்துகளில் சமுதாயக் கூடங்கள் மற்றும் வாரணாசியில் பல்வேறு பூங்காக்களை அழகுபடுத்தும் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

தபேலா, ஓவியம், தண்டாய், திரங்கா பர்பி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான புவிசார் குறியீடு சான்றிதழ்களை பிரதமர் வழங்கினார். பனாஸ் பால்பண்ணையுடன் தொடர்புடைய அம்மாநில பால் விநியோகஸ்தர்களுக்கு ரூ.105 கோடிக்கும் அதிகமான ஊக்கத் தொயையையும் அவர் விடுவித்தார். 

*** 

(Release ID: 2120875)

TS/SMB/PKV/SV/ AG/RR/KPG/RJ