Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உகாண்டா அரசுமுறை சுற்றுப் பயணத்தில் உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரை

உகாண்டா அரசுமுறை சுற்றுப் பயணத்தில் உகாண்டா நாடாளுமன்றத்தில்  பிரதமரின் உரை

உகாண்டா அரசுமுறை சுற்றுப் பயணத்தில் உகாண்டா நாடாளுமன்றத்தில்  பிரதமரின் உரை


மதிப்பிற்குரிய அதிபர் யோவேரி முசவேணி,

மதிப்பிற்குரிய துணை அதிபர்

உகாண்டா நாடாளுமன்றத்தின் மதிப்பிற்குரிய பேரவைத் தலைவர் ரெபேக்கா கடாகா,

மரியாதைக்குரிய அமைச்சர்கள்,

மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

சகோதர சகோதரிகள்

வணக்கம்,

பாலாமுசிஜா.

சிறப்பிற்குரிய இந்த மன்றத்தில் உரையாற்றுவதற்கான அழைப்பை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்.  இதுபோன்ற  உரிமையை நான் பல நாடாளுமன்றங்களில் பெற்றிருக்கிறேன்.  எனினும் இது சிறப்பானது.  முதல் முறையாக இதுபோன்றதொரு கவுரவம் இந்திய பிரதமர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.  இது 1.25 பில்லியன் இந்திய மக்களுக்கு கிடைத்த கவுரவமாகும். உகாண்டா மக்களுக்கும், இந்த மன்றத்திற்கும் இந்திய மக்களின் நல்வாழ்த்துகளையும், நட்பையும் நான் சுமந்து வருகிறேன்.     பேரவைத் தலைவர் அவர்களே, தங்களை இங்கு பார்ப்பது பெண் பேரவைத் தலைவரை கொண்ட எங்களது மக்களவையை நினைவுபடுத்துகிறது.  இங்கு பல இளைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் பார்க்கிறேன்.  இது ஜனநாயகத்திற்கான நற்செய்தியாகும்.  ஒவ்வொரு முறையும் உகாண்டாவுக்கு வரும்போது ஆப்பிரிக்காவின் இந்த முத்து என்னை கொள்ளை கொள்கிறது.  இந்த நாடு அளவிடாத முடியாத அழகு, இயற்கை வளம் மற்றும் செழிப்பான பாரம்பரியத்தைக் கொண்டது.  இந்த மண்டலத்தில் இங்குள்ள ஆறுகளும், ஏரிகளும் பல நாகரீகங்களை வளர்த்துள்ளன.  மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர், இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதன் வரலாற்றுச் சிறப்பை நாம் அடைந்திருக்கிறோம்.  நமது தொன்மைக்கால கடல்சார் தொடர்பு, காலனி ஆட்சியில் இருந்த காலம், சுதந்திரத்திற்கான பொதுப் போராட்டம், பிரிவினைக் கொண்ட உலகில் சுதந்திர நாடுகளின் நிச்சயமற்ற பாதைகள், புதிய வாய்ப்புகளின் உதயம் மற்றும் இளைய சமுதாயத்தினரின் அபிலாஷைகளின் ஒருமைப்பாடு-இவையாவும் நம்மை இணைக்கின்றன.

திரு. அதிபர் அவர்களே,

மக்கள் உட்பட பல நூலிழைகள் உகாண்டாவையும், இந்தியாவையும் இணைக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உகாண்டாவின் திடமான உழைப்பாளிகள் ரயில்தடத்தின் காரணமாக இந்துமா சமுத்திரத்தின் கரைகளோடு இணைந்தனர்.  தாங்கள் இங்கு வருகை தந்திருப்பது நமது மக்களுக்கு இடையேயான நட்பு மற்றும் ஒருங்கிணைப்பின் அரிய பந்தத்தை பற்றிக் கொள்கிறது.  தாங்கள் தங்களது நாட்டுக்கும் இந்த பகுதிக்கும் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்துள்ளீர்கள்.  பல சவால்களுக்கு இடையே நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் செலுத்துகிறீர்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன்மூலமாக தங்களது நாட்டை உள்ளடக்கியதாக ஆக்கி இருக்கிறீர்கள். தொலைநோக்கோடு கூடிய தங்களது தலைமையின்கீழ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உகாண்டா மக்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பவும், தங்கள் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், தாங்கள் பெரிதும் நேசிக்கும் நாட்டை மறுநிர்மாணம் செய்வதும் சாத்தியமாக்கியுள்ளது.  தங்களது விருந்தினர் மாளிகையில் தீபாவளியை கொண்டாடுவதன் மூலமாக இந்தியாவுக்கும், உகாண்டாவுக்கும் இடையேயான உறவுகளுக்கு மேலும் ஒளியூட்டி இருக்கிறீர்கள்.  புனித தலமான ஜின்ஜாவில் நைல் நதியின் பிறப்பிடத்திற்கு அருகே மகாத்மா காந்தியின் அஸ்தியின் ஒரு பகுதி கரைக்கப்பட்டது.  அவரது வாழ்க்கையிலும், அதைக் கடந்தும், அவர் ஆப்பிரிக்கர்களோடு ஒன்றியவராவார்.  புனித தலமான ஜின்ஜாவில் தற்போது காந்திஜியின் சிலை இருக்கும் இடத்தில் நாங்கள் காந்தி பாரம்பரிய மையத்தை அமைக்கவிருக்கிறோம்.   மகாத்மாகாந்தியின் 150 ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், ஆப்பிரிக்காவில் சுதந்திரம் மற்றும் நீதிக்கு, உத்வேகம் தந்த அவரது முனைப்பில், ஆப்பிரிக்காவின் பங்களிப்பை நினைவுகூருவதற்கு இதுபோன்றதொரு மையம் –   அதுமட்டுமல்ல உலகம் சார்ந்தும், காலத்தையும் கடந்தும் அவரது வாழ்க்கைக்கும், வாக்குக்கும் வேறு என்ன அஞ்சலியாக இருக்க முடியும். 

மதிப்பிற்குரியவர்களே,

இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாறு ஆப்பிரிக்காவோடு நெருக்கமான தொடர்பு கொண்டது.  இது 21 ஆண்டுகள் காந்திஜி ஆப்பிரிக்காவில் வாழ்ந்தது மற்றும் அவரது தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் சார்ந்தது மட்டுமல்ல, இந்தியாவை பொறுத்தவரை விடுதலை இயக்கத்தின் தார்மீக கொள்கைகள், அல்லது அதனை முன்னெடுத்துச் செல்வதற்கான அமைதியான வழிமுறைகள் என்பவை இந்தியாவின்  எல்லைகள் அல்லது இந்தியர்களின் எதிர்காலத்தோடு மட்டும் நின்று விடுவதல்ல. இது ஒவ்வொரு மனிதனின் சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கான உலகளாவிய தேடலாகும்.  ஆப்பிரிக்காவை விட இதற்கு பொருத்தமான களம் இருக்க முடியாது.  எங்களது சுதந்திரத்திற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எங்களது சுதந்திர இயக்கத்தின் தலைவர்கள் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை உலகெங்கிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்திற்கான போராட்டத்தோடு தொடர்புப்படுத்தினர்.  சுதந்திரத்தின் வாயிலில் இந்தியா  நின்று கொண்டிருந்த தருணத்தில், ஆப்பிரிக்காவின் நிலைமை எங்களது மனதில் இருந்து வெகுதூரத்தில் இல்லை.  ஆப்பிரிக்கா கட்டுண்டு கிடக்கும்  வரை இந்தியாவின் சுதந்திரம் முழுமை பெறாது என்று மகாத்மாகாந்தி உறுதியாக நம்பினார்.   சுதந்திர இந்தியா அவரது வாக்கை மறக்கவில்லை.  பேன்டுங்கில் ஆப்பிரிக்க ஆசிய ஒற்றுமையை வலியுறுத்தியது இந்தியா.  தென்னாப்பிரிக்காவின் நிற வெறியை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக நின்றது.   தற்போது ஜிம்பாப்வே என்று அழைக்கப்படும் ரொடேசியா, கினியா பாஸ்சு, அங்கோலா, நமிபியா ஆகிய பிரச்சினைகளில் நாங்கள் முதன்மையான, தைரியமான நிலைப்பாட்டை எடுத்திருந்தோம்.   காந்திஜியின் அமைதிப்பாதை, நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டுடு, ஆல்பர்ட் லுதிலி, ஜூலியஸ் நைரேரே மற்றும் காமே க்ருமா ஆகியோருக்கு உற்சாகம் தந்தது. இந்தியாவின் தொன்மை ஞானம், அமைதிப் பாதையின் வலிமை ஆகியவற்றின் வெற்றிக்கு வரலாறு சாட்சியாக உள்ளது.  ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட சில ஆழமான மாற்றங்கள் காந்திய முறையில் வந்தவையாகும்.  ஆப்பிரிக்காவின் சுதந்திர போராட்டங்களுக்கு இந்தியாவின் கொள்கை சார்ந்த ஆதரவு, அவ்வப்போது எங்களது நாட்டின் வர்த்தகத்திற்கு விலையாக கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், ஆப்பிரிக்காவின் சுதந்திரத்திற்கு இதனை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது.

மதிப்பிற்குரியவர்களே,

நமது பொருளாதாரம் மற்றும் சர்வதேச பங்களிப்பு கடந்த 70 ஆண்டுகளாக பொருளாதார தார்மீக கொள்கைகள் மற்றும்  உணர்வுபூர்வமான பந்தங்கங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.  சந்தைகளிலும், ஆதாரங்களிலும் ஒரு நியாயமான சமத்துவமான அணுகுமுறையை நாங்கள் நாடினோம். சர்வதேச வர்த்தகத்திற்கு வளர்ச்சி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்கு நாம் போராடினோம்.  தெற்கத்திய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பங்களிப்பை விரிவாக்க நாம் பாடுபட்டோம்.  நமது மருத்துவர்களும், ஆசிரியர்களும் ஆப்பிரிக்காவுக்கு சென்றது தொழில் வாய்ப்புகளை தேடி மட்டுமல்ல. சுதந்திர நாடுகளின் வளர்ச்சி என்கின்ற  பொதுவான காரணத்திற்காகவும் ஆகும்.   2015 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த 3 ஆவது இந்தியா-ஆப்பிரிக்க பேரவை உச்சி மாநாட்டில் பேசிய அதிபர் முசவேணியின் வார்த்தைகளை நான் நினைவுப்படுத்துகிறேன்.  “காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நாம் ஒன்றாக போராடினோம், பரஸ்பர வளமைக்காகவும் நாம் ஒன்றாக போராடுவோம்.”

மதிப்பிற்குரியவர்களே,

இன்று இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நம்பிக்கை, பாதுகாப்பு, இளமை, புதுமை, துடிப்போடு கூடிய மக்கள் என்பதாக நம்பிக்கையோடு  மிகப்பெரிய எதிர்காலத்தின் வாயிலில் நிற்கின்றன; ஆப்பிரிக்கா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உகாண்டா எடுத்துக்காட்டு.  பாலியல் சமத்துவம், வளரும் கல்வி மற்றும் சுகாதாரத் தரம் மற்றும்  விரியும் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றை கண்டு வருகிறது உகாண்டா. இது வளரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான மாகாணமாக உள்ளது.  இங்கு புதுமை வேகமாக வளர்ந்து வருவதை காண்கிறோம்.  இந்தியாவில் இருக்கும் நாங்கள் ஆழமான நட்பின் பந்தத்தின் காரணமாக ஆப்பிரிக்காவின் வெற்றியை கொண்டாடுகிறோம்.

மதிப்பிற்குரியவர்களே,

ஆப்பிரிக்காவோடு பங்கேற்பதில் இந்தியா பெருமை அடைகிறது.  இந்த கண்டனத்திற்கான எங்களது கடப்பாட்டின் மையமாக உள்ளது உகாண்டா.   நேற்று உகாண்டாவுக்கான இரு கடன் வழித்தடங்கள் பற்றி நான்  அறிவித்திருந்தேன்.  முதலாவது மின்சார இணைப்புக்கான 141 மில்லியன் டாலர் ஆகும்.  அடுத்து வேளாண் மற்றும் பால் உற்பத்திக்கான  64 மில்லியன் டாலர் ஆகும்.  கடந்த காலம் போன்ற வேளாண், சுகாதாரம், கல்வி, பயிற்சி, உள்கட்டமைப்பு, எரிசக்தி, அரசின் திறன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி ஆகியவற்றில் நாங்கள் உகாண்டா மக்களின் அபிலாஷைகளுக்கு தொடர்ந்து எங்களது ஆதரவை வழங்குவோம்.   சர்வதேச எரிசக்தி கூட்டமைப்பில் இணைவதற்கு அதிபர் முசவேணியும், இந்த மாமன்றமும் எடுத்த முடிவுக்காக எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேன்மைதங்கிய பெருமக்களே,

 

உகாண்டா உடனான எங்களது ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தியுள்ளோம். ஆப்பிரிக்கா முழுவதும் நாங்கள் பயணம் செய்து வருகிறோம்.  கடந்த நான்காண்டுகளில் மட்டும் எங்களது குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரும், நானும் ஆப்பிரிக்காவில் உள்ள 25 நாடுகளுக்குக் குறையாமல் பயணம் செய்திருக்கிறோம். எங்களது அமைச்சர்கள் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சென்றுள்ளனர். 2015-அக்டோபரில் நடைபெற்ற 3-வது ஆப்பிரிக்கா – இந்தியா கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை நடத்தும் கவுரவம் எங்களுக்குக் கிடைத்தது. இதில், ஆப்பிரிக்காவில் உள்ள 54 நாடுகளில், 40-க்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அளவிலானக் குழுக்கள் பங்கேற்றன. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் தொடக்க மாநாட்டிலும் ஏராளமான ஆப்பிரிக்க தலைவர்களை கவுரவிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.  இவை தவிர, கடந்த நான்கு ஆண்டுகளில் 32 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கியின் முதலாவது கூட்டத்தை நடத்தும் வாய்ப்பு, இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்திற்குத்தான் கடந்த ஆண்டு கிடைத்தது. ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியா 18 புதிய தூதரகங்களையும் திறந்துள்ளது.

 

மேன்மைதங்கிய பெருமக்களே,

வளர்ச்சிக்கான ஒத்துழைப்பின் அம்சங்களாக, நாற்பதுக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான 180  கடனுதவித் திட்டங்கள் தற்போது எங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த, இந்தியா – ஆப்பிரிக்கா கூட்டமைப்பின் மாநாட்டில் 10 பில்லியன் டாலர் சலுகைக் கடனும், 600 மில்லியன் டாலர் மானிய உதவியும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறோம். ஆண்டுதோறும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. உங்களது முன்னுரிமை அடிப்படையிலேயே எங்களது முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்காவில் 54 பில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.  ஆப்பிரிக்கா நாடுகளுடன் 62 பில்லியன் டாலர் அளவிற்கு இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இது, கடந்த ஆண்டைக்காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஒத்துழைப்புகள் மூலம்,  நமது பொருளாதார ஒத்துழைப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்கா மின்னணு தொடர்பு வசதிகள் மூலம் 48 ஆப்பிரிக்க நாடுகள், ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் ஆப்பிரிக்காவுக்கு முதுகெலும்பாக மாறியுள்ளன.  ஆப்பிரிக்காவில் ஏராளமான கடலோர நாடுகள் உள்ள நிலையில், நீலப் பொருளாதாரத்தின் பலனை நீடித்த முறையில் அனுபவிப்பதற்கான ஒத்துழைப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொடிய நோய்களிலிருந்து விடுபட இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மருந்துகள் பெரிதும் உதவிகரமாக அமைந்தன. சுகாதார சேவைகள் குறைந்த கட்டணத்தில் பெரும்பாலானோருக்கு கிடைக்கச் செய்யும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். 

 

 

மேன்மைதங்கிய பெருமக்களே,

 

ஆப்பிரிக்காவில் வளம் மற்றும் அமைதியை எற்படுத்த இந்தியா ஒருங்கிணைந்து பாடுபட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்களும், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் எதிர்கால அமைதிக்காக பணியாற்றி வருகின்றனர். காங்கோவில் 1960-ஆம் ஆண்டு முதன்முறையாக இந்திய அமைதிப்படை பணியாற்றிய நிலையில், தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் செயல்படும்,  12-க்கு மேற்பட்ட ஐ.நா அமைதி காக்கும் படைகளில் இந்திய அமைதிப் படையினரும் பணியாற்றி வருவது எங்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது. உலகம் முழுவதும் செயல்படும் ஐ.நா அமைதி காக்கும் படையில் இடம்பெற்ற இந்திய வீரர்கள் 163 பேர் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இது, வேறு எந்த நாடும் செய்யாத மாபெரும் தியாகம் ஆகும். இதில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவில்தான் மரணத்தைத் தழுவியுள்ளனர். தற்போது, ஆப்பிரிக்காவில் உள்ள ஐந்து அமைதி காக்கும் படைகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பணியாற்றுகின்றனர். லைபீரியாவில், ஐ.நா சபையின் முதலாவது அனைத்து மகளிர் காவல்படையில் இந்தியப் பெண்கள் இணைந்து சாதனை  படைத்துள்ளனர். ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில், ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு, கடற்கொள்ளையர்கள் மற்றும் நமது கடற்பகுதிகளை பாதுகாப்பதில் நாம் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.

மேன்மைதங்கிய பெருமக்களே,

ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு, 10  கொள்கைகளின் வழிகாட்டுதலுடன் தொடரும்.

முதலாவதாக, இந்தியாவின் முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. ஆப்பிரிக்காவுடனான எங்களது ஒத்துழைப்புகள் மேலும் முனைப்புடன் விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே தெரிவித்தபடி, இந்த ஒத்துழைப்பு நீடித்த அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும்.

இரண்டாவதாக, வளர்ச்சிக்கான எங்களது ஒத்துழைப்புகள், உங்களது முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். உங்களுக்கு வசதியான வகையில், உங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாதவகையிலும் மேற்கொள்ளப்படும். ஆப்பிரிக்க மக்களின் அறிவாற்றல் மற்றும் திறனில் நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.  எனவே, இயன்ற அளவிற்கு உள்ளுர் திறமைகளை வெளிப்படுத்தி, உள்ளுரிலேயே வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபடுவோம்.

மூன்றாவதாக, ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், எங்களது சந்தை வாய்ப்புகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.  எங்கள் நாட்டு தொழில்துறையினர் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதற்கும் ஆதரவாக செயல்படுவோம்.

நான்காவதாக, டிஜிட்டல் புரட்சியில் இந்தியாவின் அனுபவங்களை ஆப்பிரிக்காவின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம்.  பொது சேவைகளை வழங்கும் முறை மேம்படுத்தப்படுவதுடன், கல்வி மற்றும் சுகாதார ஒத்துழைப்புகள் விரிவுபடுத்தப்படும். டிஜிட்டல் கல்வியும் விரிவுபடுத்தப்படுவதுடன், உள்ளார்ந்த நிதி சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டு, நலிவடைந்த மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கப் பாடுபடுவோம்.

நீடித்த வளர்ச்சிக்கான ஐ.நா-வின் இலக்குகளை அடைவதற்காக மட்டும் அல்லாமல், டிஜிட்டல் உலகில் ஆப்பிரிக்க இளைஞர்கள், அவர்களுக்குரிய இடத்தை அடையவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐந்தாவதாக, உலகில் உள்ள சாகுபடிக்கு உகந்த நிலங்களில் 60 சதவீத நிலம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள போதிலும், சர்வதேச அளவில் உங்களது உற்பத்தி 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஆப்பிரிக்காவில் வேளாண் தொழிலை மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

ஆறாவதாக, ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவு மூலம், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணப்படும். நியாயமான சர்வதேச பருவநிலை உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தவும், நமது பல்லுயிர் வளத்தைப் பாதுகாக்கவும், தூய்மையான – குறைந்த செலவிலான எரிசக்தி வளங்களை பின்பற்றவும், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பாடுபடும்.

ஏழாவதாக, நம்மிடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதுடன், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் பரஸ்பரத் திறமைகளையும் மேம்படுத்துவதுடன், நமது இணைய வெளியை பாதுகாப்பானதாகவும், பத்திரமானதாகவும் வைத்திருக்கவும், அமைதியைப் பராமரிப்பதில் ஐ.நா சபைக்கு ஆதரவாகவும் செயல்படுவோம்.

எட்டாவதாக, கடல்பகுதிகள், அனைத்து நாடுகளுக்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் விதமாக, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் போட்டி மனப்பான்மையுடன் செயல்படாமல், ஒருங்கிணைந்து செயல்படுவதையே உலகம் எதிர்பார்க்கிறது. எனவே, கூட்டுறவு மற்றும் உள்ளார்ந்த அடிப்படையில் பணியாற்றி, பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இந்த மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதே இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு.

ஒன்பதாவது அம்சம், எனக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆப்பிரிக்காவில் சர்வதேச ஒத்துழைப்புகள் அதிகரித்து வரும் வேளையில், போட்டி மனப்பான்மைகளுக்கான இடமாக ஆப்பிரிக்கா மாறுவதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு, ஆப்பிரிக்க இளைஞர்களின் விருப்பங்களை ஊக்குவிக்கும் தளமாக மாற்றுவோம்.

பத்தாவதாக, ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து, இந்தியாவும், ஆப்பிரிக்காவும் ஒருங்கிணைந்து போராடியதுடன், உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியாக உள்ள ஆப்பிரிக்கா்கள் மற்றும் இந்தியர்களின் குரலையும் பங்களிப்பையும் பிரதிபலிக்க ஏதுவாக, பிரதிநிதித்துவ மற்றும் ஜனநாயக உலக நடைமுறையை ஏற்படுத்தவும் பாடுபடுவோம். ஆப்பிரிக்காவுக்கு உரிய இடத்தை வழங்காமல், சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நிறைவு பெறாது. அதுவே எங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

மேன்மைதங்கிய பெருமக்களே

இந்த நூற்றாண்டு நாடுகளின் நூற்றாண்டு என்றால், சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்காக ஒருங்கிணைந்து எழுச்சி பெறுவோம். இந்த காலகட்டம், அனைத்து மனிதர்களுக்கும் புதிய ஒளியை ஏற்படுத்துவதற்கான விடியலை ஏற்படுத்தட்டும். நமது கிரகங்கள் நம்பிக்கை மிகுந்த எதிர்காலத்தை ஏற்படுத்தும் காலமாக அமையட்டும். இவை அனைத்தும் இணைந்து, அற்புதமான இந்த ஆப்பிரிக்கக் கண்டம் உலகின் எஞ்சிய பகுதிகளில் காலடி எடுத்து வைக்க உதவும். இந்தியா உங்களுக்காக, உங்களுடன் இணைந்து பாடுபடும். நம்மிடையேயான ஒத்துழைப்பு, ஆப்பிரிக்காவில் அதிகாரமளித்தலுக்கான சாதனங்களை உருவாக்கும். உங்களது முயற்சி மற்றும் வெளிப்படைத் தன்மை, கவுரவம் மற்றும் சமத்துவக் கொள்கைகளில் இந்தியா உங்ளுடன் உறுதியுடன் நிற்கும். இந்தியா உங்களுக்காக உங்களுடன் இணைந்து குரல் கொடுக்கும். இந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும் வசிக்கும் மக்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்டவர்கள், 35 வயதுக்கும் குறைவானவர்களே. எதிர்காலம் இளைஞர்களுடையது என்றால், இந்த நூற்றாண்டை வடிவமைத்து உருவாக்குவது நமது பொறுப்பாகும். “யார் ஒருவர் கூடுதலாக முயற்சிக்கிறார்களோ அவர்கள் பயனடைவார்கள்” என்ற உகாண்டா நாட்டு வழிகாட்டுதலின்படி, இந்தியா ஆப்பிரிக்காவின் நலனுக்காக அதிக முயற்சிகளை மேற்கொள்ளும். ஆப்பிரிக்காவின் நலனுக்காக இந்தியா எப்போதும் இதை மேற்கொள்ளும்.

     நன்றி, மிக்க நன்றி.

     “அசன்டே சனா”