எனதருமை நண்பரான பிரதமர் நேதன்யாஹூ அவர்களே, ஊடக நண்பர்களே. தங்கள் இல்லத்தை இன்று எனக்காகத் திறந்துவைத்த பிரதமர் நேதன்யாஹூ, திருமதி சாரா நேதன்யாஹூ ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது பரிவான, தாராளமான விருந்தோம்பலுக்கு நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கிறேன்.
நண்பர்களே,
சற்று நேரத்திற்கு முன்பாக கொடூரமான இனப் பேரழிவு நடவடிக்கையில் தங்கள் உயிரை இழந்த 60 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நினைவு கூரவும், அவர்களது பெருமைகளைப் போற்றவும் உருவாக்கப்பட்டுள்ள யாட் வஷேம் நினைவு மியூசியத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன். தலைமுறைகளுக்கு முன்பாக இருந்தவர்கள் மீது சொல்லமுடியாத தீங்குகளை நினைவு கூர்வதாக யாட் வஷேம் அமைந்துள்ளது. ஆழமான துயரங்களை விட்டு மேலேறி வெறுப்புணர்வை வெற்றி கொண்டு, உயிரோட்டமான,ஜனநாயக பூர்வமான நாட்டினை உருவாக்க முன்னோக்கிச் சென்ற உங்களின் தோற்கடிக்கப்பட முடியாத உணர்வுகளைப் போற்றுவதாகவும் அது அமைகிறது. மனிதத் தன்மை, நாகரீகமான மதிப்பீடுகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து எந்த வகையிலும் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் யாட் வஷேம் சொல்வதாக அமைகிறது. அந்த வகையில் நமது காலத்தினைப் பீடித்துள்ள பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகிய தீமைகளை நாம் உறுதியோடு எதிர்க்க வேண்டும்.
நண்பர்களே,
நம் இருநாட்டு மக்களுக்கு இடையிலான இணைப்பு என்பது ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே துவங்கியதாகும். இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையோரப் பகுதியில் முதல் யூதர்கள் வந்திறங்கியதில் இருந்து இந்த உறவு துவங்குகிறது. அப்போதிலிருந்தே இந்தியாவில் யூத இனத்தவர்கள் செழிப்புடன் வளர்ந்தார்கள். அவர்களின் பாரம்பரியமும் நடைமுறைகளும் இந்தியாவில் செழித்து வளர்ந்தன. பல்வேறு வகையான பங்களிப்புகளைச் செய்த யூத மகன்களும், மகள்களுமாக விளங்கும் லெப்டி. ஜெனரல் ஜே. எஃப். ஆர். ஜேக்கப், வைஸ் அட்மிரல் பெஞ்சமின் சாம்சன், தலைசிறந்த கட்டிடக் கலை நிபுணரான ஜோஷுவா பெஞ்சமின், திரைப்பட கலைஞர்களான நதிரா, சுலோச்சனா, பிரமீளா போன்றவர்கள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாற்றை உயிரோட்டத்துடனும் துடிப்பாகவும் இணைப்பவர்களாக இந்திய யூத இனத்தவர் விளங்குகின்றனர். நம் இரு நாடுகளின் மக்களிடையே நிலவி வரும் இந்த புராதனமான உறவைக் கொண்டாடுவதாகவே எனது இஸ்ரேலியப் பயணம் அமைகிறது. நாளை இஸ்ரேலில் உள்ள செழிப்பான இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பாக நமது இரு நாடுகளுக்கு இடையிலான முழுமையான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே நமது உறவுகள் நவீன காலத்தில் மிகவும் துரிதமான வளர்ச்சியைக் கண்டன. பொருளாதார வளம், வலுவான தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளுக்கான உறவுகள் ஆகிய பொதுவான நோக்கங்கள், நமது சமூகங்களைப் பாதுகாப்பதற்கான அவசியம் ஆகியவை நம் இரு நாடுகளுக்கிடையே ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான இடத்தை விளக்குவதாக அமைகின்றன. வரவிருக்கும் பத்தாண்டு காலப்பகுதிகளில் பொருளாதார ரீதியான தொடர்பு எல்லைகளை மாற்றி அமைக்கக் கூடிய உறவை கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியா இப்போது உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடாகும். நமது வளர்ச்சிக்கான முன்னுரிமைகளுக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளையும்,தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது நமது கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வர்த்தக உறவுகள் ஆகியவற்றை விரிவுபடுத்துவதற்கான ஆக்க வளம் கொண்ட வாய்ப்பை வழங்குகிறது. நம் இரு நாடுகளின் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் செயல்துடிப்புமிக்க பாதுகாப்பு கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். இந்த நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தெளிவானதொரு நடவடிக்கைக்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைத்து, கட்டமைக்க பிரதமர் நேதன்யாஹூவுடன் நான் இணைந்து செயல்படுவேன். அவர்களது கனிவான வரவேற்பிற்காக பிரதமர் நேதான்யாஹூ, திருமதி. நேதன்யாஹூ ஆகியோருக்கு எனது ஆழ்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி. மிக்க நன்றி.
Sharing my remarks at the press meet with PM @netanyahu. https://t.co/MxUZyLo72s pic.twitter.com/34SZX8j9i1
— Narendra Modi (@narendramodi) July 4, 2017