Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேலில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரை

இஸ்ரேலில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரை

இஸ்ரேலில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரை


இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார்.

இஸ்ரேலுக்கு இந்தியப் பிரதமர் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என்று குறிப்பிட்டு, அவர் தனது பேச்சைத் தொடங்கினார். மேலும், இதற்கு இந்தியா சுதந்திரமடைந்து நீண்டகாலமான 70 ஆண்டுகள் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது பயணம் முழுமைக்கும் சிறப்பான வரவேற்பையும், கவுரவத்தையும் அளித்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ-வுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவு ஏற்பட்டு, 25 ஆண்டுகள் மட்டுமே ஆனபோதிலும், இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான பந்தம், பல நூற்றாண்டுகளாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய இஸ்லாமிய ஞானியான (Indian Sufi) புனித பாபா ஃபரித், ஜெருசலேமுக்கு 13-ம் நூற்றாண்டிலேயே வந்து, குகையில் தியானம் செய்ததாக தன்னிடம் கூறினார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா-இஸ்ரேல் இடையேயான நல்லுறவு என்பது பாரம்பரியம், கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் நட்புரீதியிலானது என்று பிரதமர் விவரித்தார். இந்தியா மற்றும் இஸ்ரேலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஒரே மாதிரியானவை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இதை விவரிக்கும் வகையில், ஹோலி மற்றும் புனிம்; தீபாவளி மற்றும் ஹனுக்கா பண்டிகைகளை அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் அற்புதமான தொழில்நுட்ப வளர்ச்சியையும், வீரம் மற்றும் உயிர்த்தியாகம் செய்வதில் நீண்டகால பாரம்பரியத்தையும் பிரதமர் குறிப்பிட்டார். முதலாவது உலகப் போரின்போது, இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில், இந்திய வீரர்கள் முக்கியப் பங்காற்றியதை திரு.நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். இந்தியா மற்றும் இஸ்ரேலில் இந்திய யூத சமூகத்தினரின் மிகப்பெரும் பங்களிப்பையும் பிரதமர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் புத்தாக்க உணர்வுகளை பிரதமர் வெகுவாக பாராட்டினார். புவி-அனல் மின்சாரம், சூரியமின் தகடுகள், வேளாண்-உயிரி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இஸ்ரேல் மிகப்பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதையும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்தங்களை மேலோட்டமாக பிரதமர் எடுத்துரைத்தார். ஜிஎஸ்டி-யை நடைமுறைப்படுத்தியது, இயற்கை வளங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்தது, காப்பீடு மற்றும் வங்கித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்க அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாவது பசுமைப்புரட்சியை ஏற்படுத்த இஸ்ரேலுடனான நட்புறவு, உந்துவிசையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா-இஸ்ரேல் இடையேயான எதிர்கால உறவுக்கு அறிவியல், புத்தாக்கம், ஆராய்ச்சி ஆகியவை அடிப்படையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மும்பையில் நவம்பர் 26-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின்போது உயிர்பிழைத்த மோசே ஹோல்ட்பெர்க்-கை முன் தினம் தான் சந்தித்துப் பேசியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவையை முடித்திருந்தாலும், இஸ்ரேலில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இஸ்ரேலில் இந்திய கலாச்சார மையம் ஒன்று அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். டெல்லி, மும்பை, டெல்அவிவ் இடையே நேரடி விமான சேவை, விரைவில் தொடங்கப்படும் என்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.