Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில்  பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்


மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வாழ்த்துகள்!

 

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த வளர்ச்சி, இணைப்பு ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எங்கள் கூட்டணியின் முக்கிய தூண்களாக கட்டமைப்பு, டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே மின்சாரத் தொகுப்பு இணைப்பு மற்றும் பல்பொருள் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றுவோம். சம்பூர் சூரிய மின்சக்தி திட்டம் துரிதப்படுத்தப்படும். இதற்கும் கூடுதலாக, இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவ இயற்கை எரிவாயு வழங்கப்படும். இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இரு தரப்பினரும் முயற்சி செய்யப்படும்.

நண்பர்களே,

இதுவரை இந்தியா இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மானியங்கள் மற்றும் கடன்களை வழங்கியுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவை வழங்கி வருகிறோம். நமது கூட்டாளி நாடுகளின் வளர்ச்சி முன்னுரிமை அடிப்படையிலேயே நமது திட்டங்கள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி ஆதரவை முன்னெடுத்து, மாஹோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரயில்பாதை சமிக்ஞை முறைமையையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும்  புனரமைப்பதற்கு மானிய ஆதரவை வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். எங்கள் கல்வி ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு மாதாந்தர கல்வி உதவித்தொகை வழங்கவுள்ளோம். வரும் ஐந்து ஆண்டுகளில்  1500 இலங்கை குடிமைப்பணி ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. வீட்டுவசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், விவசாயம், பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளிலும்  இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை வழங்கும். இலங்கையின் தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்தில் இந்தியா கூட்டு சேரும்.

நண்பர்களே,

எமது பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதில் அதிபர் திசாநாயகவும் நானும் முழுமையாக உடன்படுகிறோம். பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவாக இறுதி செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். நீரியல் துறையில் ஒத்துழைக்கவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தளமாகும் என்று நாங்கள் நம்புகிறோம். கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் ஆகிய விஷயங்களில் ஆதரவு வழங்கப்படும்.

நண்பர்களே,

இந்திய, இலங்கை மக்களுக்கு இடையிலான உறவுகள் நமது நாகரிகங்களில் வேரூன்றியவை. பாலி மொழியை செம்மொழியாக இந்தியா அறிவித்தபோது, இந்தக் கொண்டாட்டத்தில் இலங்கை எங்களுடன் இணைந்தது. படகு சேவை மற்றும் சென்னை-யாழ்ப்பாணம் விமான இணைப்பு ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமின்றி, கலாச்சார உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளன. நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகு சேவை வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பின்னர், ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே படகு சேவையை தொடங்குவது என்று நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம். புத்த மத சுற்றுப்பாதை, இலங்கையின் ராமாயண பாதை ஆகியவற்றின் மூலம் சுற்றுலாவில் உள்ள மகத்தான வாய்ப்புகளை உணரவும் பணிகள் தொடங்கப்படும் .

நண்பர்களே,

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் விரிவாகப் பேசினோம். இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நாங்கள் இருவரும் உடன்பட்டோம். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அனைவரையும் உள்ளடக்கிய தனது கண்ணோட்டத்தை அதிபர்  திசநாயக எனக்கு விளக்கினார். தமிழ் மக்களின் விருப்பங்களை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

நண்பர்களே,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அதிபர்  திசநாயகவின் முயற்சிகளில் இந்தியா நம்பகமான கூட்டாளியாக நிற்கும் என்று நான் அதிபர்  திசநாயகவிடம் உறுதியளித்துள்ளேன். இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயக மற்றும் அவரது தூதுக்குழுவினரை மீண்டும் ஒருமுறை அன்புடன் வரவேற்கிறேன். புத்தகயா வருகைக்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அது ஆன்மீக சக்தியும், உத்வேகமும் நிறைந்ததாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மிக்க நன்றி.

***

AD/SMB/AG/DL