பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இரு தரப்பு முதலீட்டுக்கான மாதிரி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. இரு தரப்பு முதலீட்டுக்கான புதிய மாதிரி ஒப்பந்தம், இதற்கு முன் இருந்த பழைய ஒப்பந்தத்துக்கு பதிலாக இயற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மாதிரி ஒப்பந்தம், ஏற்கனவே அமலில் உள்ள ஒப்பந்தங்களின் மீது மறு பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஒப்பந்தங்களை அமல்படுத்தவும், ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தங்களை கையெழுத்திடவும், ஒருங்கிணைந்த பொருளாதார பங்குக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உதவும்.
அரசின் கடமைகளை பேணும் அதே நேரத்தில் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு, முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்திய முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையிலும், இந்த மாதிரி ஒப்பந்தம் அமையும்.
இரு தரப்பு முதலீட்டுக்கான இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதோடு, அவர்கள் முதலீடு செய்ய ஒரு சமமான வாய்ப்பை வழங்குவதோடு, சிக்கல்களை தீர்த்துக் கொள்ள வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவை முதலீடு செய்ய ஏற்ற இடமாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்தியர்களின் நலனை பாதுகாக்கும் முறையிலும், இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவன அடிப்படையிலான முதலீட்டுக்கான வடிவம், உரிய நடைமுறைகளின் மூலமாக பாரபட்சமில்லாத நடவடிக்கை, தேசிய அளவிலான நடவடிக்கை, சொத்துக்களை பறிமுதல் செய்வதிலிருந்து பாதுகாப்பு, முதலீட்டாளர்களின் சிக்கலை தீர்க்க வழிமுறை, சர்வதேச சிக்கல் தீர்ப்பாயங்களை அணுகுவதற்கு முன்னால், உள்ளுரிலேயே சிக்கலை தீர்த்துக் கொள்ள வழிவகை, நஷ்ட ஈடு வழங்கும் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை, இந்த மாதிரி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள். அரசு கொள்முதல், வரி விதித்தல், மான்யம், கட்டாய லைசென்சுகள், தேசிய பாதுகாப்பு போன்றவை, இந்த மாதிரி ஒப்பந்தத்தில் வராது.
பின்னணி
14, மார்ச் 2014ல் இந்தியா முதல் இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அன்று முதல் இன்று வரை, இந்தியா 83 நாடுகளோடு, இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அந்நிய முதலீடுகளில் அரசின் கட்டுப்பாடுகள் பெருமளவில் மாற்றத்துக்குள்ளாகி உள்ளது. மாநில அளவிலும், மத்திய அளவிலும் பல்வேறு சட்டங்கள் முதலீடுகளை ஒழுங்குபடுத்துகின்றன. சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, முதலீட்டாளர் மற்றும் மாநிலங்களுக்கிடையே உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் பல மாற்றங்கள் நேர்ந்துள்ளன.