Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 இல் பிரதமர் உரை

இன்ஃபினிட்டி ஃபோரம் 2.0 இல் பிரதமர் உரை


பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபின்டெக்கில் உலகளாவிய சிந்தனை தலைமைத்துவ தளமான இன்ஃபினிட்டி மன்றத்தின் இரண்டாவது பதிப்பில் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 இன் முன்னோடி நிகழ்வாக சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) மற்றும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் ஆகியவை இணைந்து 2 வது இன்ஃபினிட்டி மன்றத்தை ஏற்பாடு செய்தன.. இன்ஃபினிட்டி மன்றத்தின் 2 வது பதிப்பின் கருப்பொருள் ‘கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி: புதிய யுக உலகளாவிய நிதி சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம்’ என்பதாகும்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2021 டிசம்பரில் இன்ஃபினிட்டி மன்றத்தின் முதல் பதிப்பை ஏற்பாடு செய்தபோது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உலகம் உலகளாவிய பொருளாதார நிலைமையின் நிச்சயமற்ற தன்மையால் சிதைவுற்று இருந்ததை நினைவு கூர்ந்தார். கவலைக்குரிய நிலைமை இன்னும் முழுமையாகக் கடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், புவிசார் அரசியல் பதட்டங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் கடன் அளவுகளின் சவால்களைக் குறிப்பிட்டு, மீட்சி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக இந்தியாவின் எழுச்சியை எடுத்துரைத்தார்.

இத்தகைய சூழ்நிலையில், கிஃப்ட் சிட்டியில் இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது குஜராத்தின் பெருமையை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்கிறது என்று பிரதமர் கூறினார். யுனெஸ்கோவின்  கலாச்சார பாரம்பரிய சின்னத்தின் கீழ் ‘கர்பா’ நடனம் சேர்க்கப்பட்டதற்காக குஜராத் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். “குஜராத்தின் வெற்றி தேசத்தின் வெற்றி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொள்கை, நல்லாட்சி மற்றும் மக்களின் நலன் ஆகிய அரசின் முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். .

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. 2023 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளபடி, 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி விகிதமான 16 சதவீதத்திற்கு இந்தியாவின் பங்களிப்பையும் பிரதமர் எடுத்துரைத்தார்.

“உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இந்திய பொருளாதாரத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது” என்ற உலக வங்கியின் கருத்தை மேற்கோள் காட்டி திரு. மோடி பேசினார். உலகளாவிய தெற்கை வழிநடத்த இந்தியா முதன்மையான நாடு என்ற ஆஸ்திரேலிய பிரதமரின் கருத்தையும் ஏற்றுக் கொள்வதாக திரு. மோடி கூறினார்..

இந்தியாவில் சிவப்பு நாடா வாதம் குறைந்து சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்து உலக பொருளாதார மன்றத்தின் கருத்தை அவர் எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில் வலுவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் சீர்திருத்த மாற்றங்கள் விளைவாக இந்தியா உலகிற்கு நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகின் பிற பகுதிகள் நிதி மற்றும் பண நிவாரணத்தில் கவனம் செலுத்திய நேரத்தில், நீண்ட கால வளர்ச்சி மற்றும் பொருளாதார திறன் விரிவாக்கத்தில் இந்தியா கவனம் செலுத்தியதை அவர் பாராட்டினார்.

உலகப் பொருளாதாரத்துடன் ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் இலக்கை வலியுறுத்திய பிரதமர், பல துறைகளில் மேற்கொள்ளப்படும் நெகிழ்வான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின் சாதனைகளைப் பட்டியலிட்டார். இன்று 3 எஃப்.டி.ஏ.க்கள் கையெழுத்திடப்பட்டதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு பெரிய சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி.ஏ உள்ளது என்று அவர் கூறினார். “கிஃப்ட் சிட்டி சர்வதேச நிதியின் நிலப்பரப்பை மறுவரையறை செய்யும் ஒரு ஆற்றல்மிக்க சூழல் அமைப்பாக கருதப்படுகிறது” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இது கண்டுபிடிப்பு, செயல்திறன் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பின் புதிய அளவுகோல்களை அமைக்கும் என்பதை சுட்டிக் காட்டினார். 2020 ஆம் ஆண்டில் சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையம் ஒரு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டாளராக நிறுவப்பட்டதன் முக்கிய மைல்கல்லை அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார கொந்தளிப்பின் இந்தக் காலகட்டத்தில் ஐ.எஃப்.எஸ்.சி.ஏ 27 ஒழுங்குமுறைகளையும் 10 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். இன்ஃபினிட்டி மன்றத்தின் முதல் பதிப்பின் போது பெறப்பட்ட பரிந்துரைகள் 2022 ஏப்ரலில் ஐ.எஃப்.எஸ்.சி.ஏ அறிவித்தபடி நிதி மேலாண்மை நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான விரிவான கட்டமைப்பின் எடுத்துக்காட்டுடன் தொடங்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுவதில் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

80 நிதி மேலாண்மை நிறுவனங்கள் இன்று ஐ.எஃப்.எஸ்.சி.ஏவில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவை 24 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியை கட்டமைத்துள்ளன. மேலும் 2 முன்னணி சர்வதேச பல்கலைக்கழகங்கள் 2024 ஆம் ஆண்டில் கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சியில் தங்கள் படிப்புகளைத் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.

2022 மே மாதம் ஐ.எஃப்.எஸ்.சி.ஏ வெளியிட்ட விமான குத்தகைக்கான கட்டமைப்பு குறித்தும்அவர் குறிப்பிட்டார்., அங்கு இன்று வரை 26 அலகுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஐ.எஃப்.எஸ்.சி.ஏவின் நோக்கத்தை விரிவுபடுத்துவது குறித்து பேசிய பிரதமர், பாரம்பரிய நிதி மற்றும் முயற்சிகளுக்கு அப்பால் கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி.ஏவை எடுத்துச் செல்வதற்கான அரசின் முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தினார்.

“கிஃப்ட் சிட்டியை புதிய யுக உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் உலகளாவிய கட்டுப்பாட்டு மையமாக மாற்ற விரும்புகிறோம்” என்று கூறிய திரு மோடி, கிஃப்ட் சிட்டி வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகம் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க உதவும் என்றும் அதில் பங்கெடுப்பாளர்களுக்கு பெரும் பங்கு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தின் மகத்தான சவால் குறித்து பிரதமர் மோடி கவனத்தை ஈர்த்தார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்திய சிஓபி28 உச்சிமாநாட்டின் போது இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பற்றி தெரிவித்த அவர், இந்தியா மற்றும் உலகின் உலகளாவிய இலக்குகளை அடைய போதுமான செலவு குறைந்த நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நிலையான நிதியின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இது பசுமையான, மிகவும் நெகிழ்வான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களை நோக்கிய மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

சில மதிப்பீடுகளின்படி, 2070 க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய இந்தியாவுக்கு குறைந்தது 10 டிரில்லியன் டாலர்கள் தேவைப்படும், அங்கு இந்த முதலீட்டின் ஒரு குறிப்பிட்ட அளவு உலகளாவிய ஆதாரங்கள் மூலம் நிதியளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

ஐ.எஃப்.எஸ்.சி.யை நிலையான நிதியின் உலகளாவிய மையமாக மாற்றுவதை அவர் வலியுறுத்தினார். “இந்தியாவை குறைந்த கார்பன் பொருளாதாரமாக மாற்றுவதற்கு தேவையான பசுமை மூலதன ஓட்டத்திற்கான ஒரு திறமையான தடமாக கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி உள்ளது.

பசுமைப் பத்திரங்கள், நிலையான பத்திரங்கள் மற்றும் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் போன்ற நிதி தயாரிப்புகளை உருவாக்குவது முழு உலகின் பாதையை எளிதாக்கும்”, என்று அவர் கூறினார்.

சிஓபி 28 இல் பூமிக்கு ஆதரவான முன்முயற்சியாக இந்தியா மேற்கொண்ட ‘குளோபல் கிரீன் கிரெடிட் முன்முயற்சி’ பற்றியும் அவர் தெரிவித்தார். பசுமைக் கடனுக்கான சந்தை முறையை உருவாக்குவது குறித்து தொழில்துறை தலைவர்கள் தங்கள் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று திரு. மோடி வலியுறுத்தினார்.

“இந்தியா இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் நிதிநுட்ப  சந்தைகளில் ஒன்றாகும்” என்று கூறிய பிரதமர், ஃபின்டெக்கில் இந்தியாவின் வலிமை கிஃப்ட் ஐஎஃப்எஸ்சியின் தொலைநோக்கு பார்வையுடன் இணைந்துள்ளது என்றும், இதன் விளைவாக, இது ஃபின்-டெக்கின் வளர்ந்து வரும் மையமாக வேகமாக மாறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டில் ஃபின்டெக்கிற்கான முற்போக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை ஐ.எஃப்.எஸ்.சி.ஏ வெளியிட்டதன் சாதனைகளையும், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்க இந்திய மற்றும் வெளிநாட்டு ஃபின்டெக் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கும் ஐ.எஃப்.எஸ்.சி.ஏவின் ஃபின்டெக் ஊக்குவிப்புத் திட்டத்தையும் பிரதமர் பட்டியலிட்டார்.

கிஃப்ட் சிட்டி உலகளாவிய நிதிநுட்ப  உலகின் நுழைவாயிலாகவும், உலகிற்கான நிதிநுட்ப  ஆய்வகமாகவும் மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். முதலீட்டாளர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி உலகளாவிய மூலதனத்தின் ஓட்டத்திற்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக மாறுவதை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிரதமர், வரலாற்று நகரமான அகமதாபாத் மற்றும் தலைநகர் காந்திநகருக்கு இடையில் அமைந்துள்ள ‘மூன்று நகரம்’ என்ற கருத்தை விளக்கினார்.

“கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சியின் அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு வணிகங்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் ஒரு தளத்தை வழங்குகிறது” என்று அவர் குறிப்பிட்டார். நிதி மற்றும் தொழில்நுட்ப உலகின் பிரகாசமான மனங்களை ஈர்க்கும் காந்தமாக கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மேலும் கூறினார்.

இன்று, ஐ.எஃப்.எஸ்.சி 58 செயல்பாட்டு நிறுவனங்கள், சர்வதேச நாணய  எக்ஸ்சேஞ்ச் உட்பட 3 பரிமாற்ற சந்தை நிறுவனங்கள், 9 வெளிநாட்டு வங்கிகள் உட்பட 25 வங்கிகள், 29 காப்பீட்டு நிறுவனங்கள், 2 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், ஆலோசனை நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் சி.ஏ நிறுவனங்கள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட தொழில்முறை சேவை வழங்குநர்களைக் கொண்டுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் கிஃப்ட் சிட்டி உலகின் சிறந்த சர்வதேச நிதி மையங்களில் ஒன்றாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். “இந்தியா ஆழமான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்று பாரம்பரியம் கொண்ட நாடு” என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் பல்வேறு வகையான வாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், கிஃப்ட் குறித்த இந்தியாவின் தொலைநோக்கு இந்தியாவின் வளர்ச்சியுடன்  இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினசரி 4 லட்சம் விமானப் பயணிகளின் விமானப் போக்குவரத்து, 2014 ஆம் ஆண்டில் 400 ஆக இருந்த பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை இன்று 700 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

“வரும் ஆண்டுகளில் விமான நிறுவனங்கள் சுமார் 1000 விமானங்களை வாங்கப் போகின்றன” என்று விமான குத்தகைதாரர்களுக்கு கிஃப்ட் சிட்டி வழங்கிய பல்வேறு வசதிகளை எடுத்துரைத்த பிரதமர் தெரிவித்தார்.

ஐ.எஃப்.எஸ்.சி.ஏவின் கப்பல் குத்தகை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்ப திறமையாளர்களின் பெரிய தொகுப்பு, தரவு பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் கிஃப்டின் தரவு தூதரக முன்முயற்சி ஆகியவை அனைத்து நாடுகளுக்கும் வணிகங்களுக்கும் டிஜிட்டல் தொடர்ச்சிக்கான பாதுகாப்பான வசதிகளை வழங்குவதையும் அவர் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் இளம் திறமைக்கு நன்றி, அனைத்து பெரிய நிறுவனங்களின் உலகளாவிய திறன் மையங்களுக்கு நாங்கள் அடித்தளமாக மாறியுள்ளோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகவும், 2047 ஆம் ஆண்டில் வளர்ந்த நாடாகவும் இந்தியா மாறும் என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார். இந்தப் பயணத்தில் மூலதனத்தின் புதிய வடிவங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கால நிதி சேவைகளின் பங்கை அவர் வலியுறுத்தினார்.

கிஃப்ட் சிட்டி அதன் திறமையான விதிமுறைகள், தொழில்முனேவோருக்கு சாதகமான உள்கட்டமைப்பு, பெரிய இந்திய சந்தை பொருளாதாரத்திற்கான அணுகல், செயல்பாட்டின் நன்மை பயக்கும் செலவு மற்றும் திறமையான நன்மை ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாத வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

“உலகளாவிய கனவுகளை நிறைவேற்றுவதை நோக்கி கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சி உடன் இணைந்து முன்னேறுவோம். துடிப்பான குஜராத் உச்சி மாநாடும் மிக விரைவில் நடைபெற உள்ளது”, என்று அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். “உலகின் தீவிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண புதுமையான யோசனைகளை நாம் ஒன்றாக ஆராய்ந்து பின்பற்றுவோம்” என்று திரு மோடி  தனது உரையை முடித்தார்.

பின்னணி

துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 இன் முன்னோடி நிகழ்வாக சர்வதேச நிதி சேவைகள் மையங்கள் ஆணையம் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ) மற்றும் கிஃப்ட் சிட்டி ஆகியவை இணைந்து 2 வது இன்ஃபினிட்டி மன்றத்தை ஏற்பாடு செய்துள்ளன. உலகெங்கிலும் இருந்து முற்போக்கான யோசனைகள், அழுத்தமான பிரச்சினைகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு தீர்வுகள் மற்றும் வாய்ப்புகளாக உருவாக்கப்படும் ஒரு தளத்தை இந்த மன்றம் வழங்குகிறது.

இன்ஃபினிட்டி மன்றத்தின் 2 வது பதிப்பின் கருப்பொருள் ‘கிஃப்ட்-ஐ.எஃப்.எஸ்.சி: புதிய யுக உலகளாவிய நிதி சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம்’ ஆகும், இது பின்வரும் மூன்று தடங்களில் ஒருங்கிணைக்கப்படும்:

முழுமையான தடம்: ஒரு புதிய யுக சர்வதேச நிதி மையத்தை உருவாக்குதல்

பசுமை தடம்: “கிரீன் ஸ்டாக்” கேஸ் உருவாக்குதல்

வெள்ளி தடம்: கிஃப்ட் ஐ.எஃப்.எஸ்.சியில் நீண்ட ஆயுட்கால நிதி மையம்

ஒவ்வொரு தடமும் ஒரு மூத்த தொழில்துறை தலைவரின் இன்ஃபினிட்டி உரை மற்றும் இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிதித் துறையைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குழுவின் விவாதம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இது நடைமுறை நுண்ணறிவுகள் மற்றும் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்கும்.

இந்தியாவிலிருந்து வலுவான ஆன்லைன் பங்கேற்புடன் 300க்கும் மேற்பட்ட சிஎக்ஸ்ஓக்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய பார்வையாளர்கள் இந்த மன்றத்தில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

———-

ANU/PKV/RB/DL