புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்துள்ளது என்றும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் பாராட்டினார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சாதனைகள் குறித்த நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் இன்று பிரதமர் வெளியிடப்பட்டார். இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எதிர்காலத்தை கோடிட்டுக் காட்டும் தொலைநோக்கு ஆவணத்தையும் அவர் வெளியிட்டார். ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 150 ஆண்டுகால பயணத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக தேசிய வானிலை ஒலிம்பியாட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் பங்கேற்பதாகவும் வானிலை ஆராய்ச்சியில் அவர்களின் ஆர்வத்தை இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கண்காட்சியில் இளைஞர்களுடன் கலந்துரையாடியதை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து இளைஞர்களையும் பாராட்டினார்.
மகர சங்கராந்தி பண்டிகைக் காலத்தில் 1875 ஜனவரி 15 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, “இந்தியாவின் பாரம்பரியத்தில் மகர சங்கராந்தியின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம்” என்றார். குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் தமக்கு மிகவும் பிடித்த பண்டிகை மகர சங்கராந்தி என்றும் அவர் கூறினார். மேலும் விளக்கிய திரு நரேந்திர மோடி, மகர சங்கராந்தி சூரியன் மகர ராசிக்கு மாறுவதையும், உத்தராயணம் என்று அழைக்கப்படும் அதன் வடக்கு நோக்கிய மாற்றத்தையும் குறிக்கிறது என்றார். இந்த காலகட்டம் வடக்கு அரைக்கோளத்தில் சூரிய ஒளியின் படிப்படியான அதிகரிப்பைக் குறிக்கிறது எனவும் இது விவசாயத்திற்கான தயாரிப்புகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். மகர சங்கராந்தி இந்தியா முழுவதும் வடக்கு முதல் தெற்கு வரை, கிழக்கு முதல் மேற்கு வரை பல்வேறு கலாச்சார வெளிப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
“ஒரு நாட்டின் அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றம் அதன் அறிவியல் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது” என்று திரு நரேந்திர மோடி கூறினார். அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவின் மனப்பான்மையுடன் ஒருங்கிணைந்தவை என்று அவர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், ஐஎம்டி-யின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் முன் எப்போதும் இல்லாத விரிவாக்கத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார். டாப்ளர் வானிலை ரேடார்கள், தானியங்கி வானிலை நிலையங்கள், ஓடுபாதை வானிலை கண்காணிப்பு அமைப்புகள், மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இந்தியாவில் வானிலை ஆய்வு, விண்வெளி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பெரிதும் பயனடைகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். அண்டார்டிகாவில் மைத்ரி, பாரதி ஆகிய பெயர்களில் இரண்டு வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன என்றும், கடந்த ஆண்டு, ஆர்க், அருணிகா சூப்பர் கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். இது ஐஎம்டி-யின் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். நிலையான எதிர்காலம், எதிர்கால தயார்நிலைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்தும் வகையில், அனைத்து வானிலை நிலைமைகளுக்கும் நாடு தயாராக இருப்பதை உறுதி செய்து, சிறந்த பருவநிலைத் தகவல் தேசமாக மாறுவதை உறுதி செய்யும் வகையில் ‘மிஷன் மவுசம்’ எனப்படும் வானிலை இயக்கம் தொடங்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.
அறிவியலின் முன்னேற்றம் புதிய உயரங்களை எட்டுவதில் மட்டுமல்ல எனவும் சாதாரண மனிதனின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும் உள்ளது என்று பிரதமர் கூறினார். துல்லியமான வானிலை தகவல்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதன் மூலம் இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த அளவுகோலில் முன்னேறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ‘அனைவருக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை’ முன்முயற்சி தற்போது 90% மக்களைச் சென்றடைகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். கடந்த, வரவிருக்கும் 10 நாட்களுக்கான வானிலை தகவல்களை யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் அணுகலாம் என்றும், முன்னறிவிப்புகள் வாட்ஸ்அப்பில் கூட கிடைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். ‘மேகதூத் மொபைல் செயலி’ அனைத்து உள்ளூர் மொழிகளிலும் வானிலை தகவல்களை வழங்குகிறது என்று அவர் கூறினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள், கால்நடை உரிமையாளர்களில் 10% பேர் மட்டுமே வானிலை தொடர்பான ஆலோசனைகளைப் பயன்படுத்தினர் எனவும், ஆனால் இன்று இந்த எண்ணிக்கை 50% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். மொபைல் போன்களில் மின்னல் எச்சரிக்கை இப்போது சாத்தியமாகிறது என்று அவர் குறிப்பிட்டார். முன்பெல்லாம் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது லட்சக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் கவலையடைந்ததாகவும், ஆனால் இப்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ஒத்துழைப்புடன் மீனவர்களுக்கு சரியான நேரத்தில் வானிலை எச்சரிக்கை தகவல் விடுக்கப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த உடனடி புதுப்பிப்புத் தகவல்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு விவசாயம், நீலப் பொருளாதாரம் போன்ற துறைகளை வலுப்படுத்துகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
“ஒரு நாட்டின் பேரிடர் மேலாண்மைத் திறன்களுக்கு வானிலை ஆய்வு மிகவும் முக்கியமானது” என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்க, வானிலை அறிவியலின் செயல்திறனை அதிகபட்சமாக்க வேண்டும் என்று கூறினார். இந்த முக்கியத்துவத்தை இந்தியா தொடர்ந்து புரிந்துகொண்டுள்ளது என்றும், ஒரு காலத்தில் தவிர்க்க முடியாததாகக் கருதப்பட்ட பேரிடர்களின் விளைவுகளை இப்போது தணிக்க முடிகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார். 1998-ம் ஆண்டு கட்ச் பகுதியில் கண்ட்லாவில் ஏற்பட்ட சூறாவளிப் புயலாலும், 1999-ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட சூப்பர் புயலாலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையும் நினைவுகூர்ந்த பிரதமர், எனினும், சமீபத்திய ஆண்டுகளில், எண்ணற்ற பெரிய புயல்கள், பேரிடர்கள் வந்தபோதிலும், உயிரிழப்புகளை இந்தியா வெற்றிகரமாக குறைத்துள்ளது அல்லது இல்லாமல் செய்துள்ளது என்று கூறினார். இந்த வெற்றிகளில் வானிலை ஆய்வுத் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் பாராட்டினார். விஞ்ஞானம், தயார்நிலை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு பில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருளாதார இழப்புகளையும் குறைத்துள்ளது எனவும் பொருளாதாரத்தில் வலுவடைந்த தன்மையை உருவாக்கியுள்ளது என்றும் இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
“அறிவியலில் முன்னேற்றம், அதன் முழுமையான பயன்பாடு ஆகியவை ஒரு நாட்டின் உலகளாவிய மதிப்பிற்கு முக்கியமாகும்” என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் வானிலை முன்னேற்றங்கள் அதன் பேரிடர் மேலாண்மைத் திறனை வலுப்படுத்தி, ஒட்டுமொத்த உலகிற்கும் பயனளித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் வெள்ள வழிகாட்டு அமைப்பு நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு தகவல்களை வழங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். இயற்கை பேரிடர் காலங்களில் மற்ற நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா எப்போதும் முதலிடம் வகிக்கிறது என்றும் அவர் கூறினார். இது உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது என அவர் கூறினார். இந்த சாதனைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய இந்திய வானிலை ஆய்வு விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வானிலை நிபுணத்துவத்தில் இந்தியாவின் வளமான வரலாற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, மனித பரிணாம வளர்ச்சியில் வானிலை ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது என்றும், வரலாறு முழுவதும், உலகெங்கிலும் உள்ள மக்கள் வானிலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் வளமான வானிலை நிபுணத்துவ வரலாறு குறித்து விவரித்த திரு நரேந்திர மோடி, வேதங்கள், சம்ஹிதைகள், சூரிய சித்தாந்தம் போன்ற பண்டைய நூல்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு, ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் சங்க இலக்கியங்களும் வடக்கில் உள்ள காக் பதரியின் நாட்டுப்புற இலக்கியங்களும் வானிலை ஆய்வு குறித்த விரிவான தகவல்களைக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். முன்பு வானிலையியல் ஒரு தனிப் பிரிவாகக் கருதப்படவில்லை என்றும் ஆனால் வானியல் கணக்கீடுகள், பருவ நிலை ஆய்வுகள், விலங்குகளின் நடத்தை ஆகியவை சமூக அனுபவங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வானிலை அறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். மேகங்கள் உருவாதல், அவற்றின் வகைகள், கிரகங்களின் நிலைகள் குறித்த கணித பணிகள் குறித்து ஆய்வு செய்த கிருஷி பராஷர், பிருஹத் சம்ஹிதா போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை பிரதமர் குறிப்பிட்டார். கிருஷி பராஷரை மேற்கோள் காட்டிய திரு நரேந்திர மோடி, அதிக அல்லது குறைந்த வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை மேகங்களின் பண்புகள் ஆகியவை மழைப்பொழிவை பாதிக்கிறது என்று கூறினார். பழங்கால அறிஞர்கள் நவீன இயந்திரங்கள் இல்லாமல் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், அவர்களின் ஆழ்ந்த அறிவையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய அறிவை நவீன அறிவியலுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்த திசையில் அதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குஜராத் மாலுமிகளின் பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் அறிவை ஆவணப்படுத்தும் “நவீனத்திற்கு முந்தைய கட்ச் கடல்சார் தொழில்நுட்பங்கள், பயணங்கள்” என்ற புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தாம் வெளியிட்டதை பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் பழங்குடியின சமூகங்களிடையே உள்ள வளமான அறிவுப் பாரம்பரியத்தை அவர் பாராட்டினார். இதில் இயற்கை, விலங்குகளின் நடத்தை ஆகியவை பற்றிய ஆழமான புரிதல் அடங்கும் என அவர் கூறினார். இந்த அறிவை சமகால அறிவியல் நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்து அதிக அளவில் ஆராய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வானிலை கணிப்புகள் மிகவும் துல்லியமாக மாறும்போது, அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதை எடுத்துரைத்த பிரதமர், ஐஎம்டி-யின் தரவுகளுக்கான தேவை பல்வேறு துறைகள், தொழில்கள், அன்றாட வாழ்க்கையில் கூட அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கான எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குவது உட்பட எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் வலியுறுத்தினார். விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் போன்ற நிறுவனங்கள் புதிய முன்னேற்றங்களை நோக்கி பணியாற்று வேண்டும் என அவர் ஊக்குவித்தார். உலகளாவிய சேவை, பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கும் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 150 ஆண்டு கால பயணத்திற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துத் தமது உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டே சாலோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னணி:
நமது நாட்டை வானிலை முன்னெச்சரிக்கைத் தகவல்களில் முன்னணியில் உள்ள நாடாக மாற்றும் நோக்கத்துடன் ‘மிஷன் மௌசம்’ எனப்படும் வானிலை இயக்கம் என்ற திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள், சிறந்த அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் மூலம் இதை அடைவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வானிலை, பருவநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், வானிலை மேலாண்மை, நீண்ட காலத்திற்கான தலையீட்டை உத்திசார் முறையில் செயல்படுத்த உதவும் காற்றின் தர தரவை வழங்குதல் ஆகியவற்றிலும் இது கவனம் செலுத்தும்.
வானிலைத் திறன், பருவநிலை மாற்ற தழுவல் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தொலைநோக்கு 2047 ஆவணத்தையும் பிரதமர் வெளியிட்டார். வானிலை முன்னறிவிப்பு, வானிலை மேலாண்மை, பருவநிலை மாற்றத் தணிப்பு ஆகியவற்றிற்கான திட்டங்கள் இதில் அடங்கும்.
ஐஎம்டி எனப்படும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தினத்தைக் கொண்டாடும் வகையில், கடந்த 150 ஆண்டுகளில் ஐஎம்டி-யின் சாதனைகள், இந்தியாவை பருவநிலை-நெகிழ்திறன் கொண்டதாக மாற்றுவதில் அதன் பங்கு, பல்வேறு வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் அரசு நிறுவனங்கள் வகித்த பங்கை எடுத்துரைக்கும் தொடர்ச்சியான நிகழ்வுகள், நடவடிக்கைகள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
***
PLM/DL
Addressing the 150th Foundation Day celebrations of India Meteorological Department. https://t.co/suEquYtds9
— Narendra Modi (@narendramodi) January 14, 2025
IMD के ये 150 वर्ष… ये केवल भारतीय मौसम विभाग की यात्रा नहीं है।
— PMO India (@PMOIndia) January 14, 2025
ये हमारे भारत में आधुनिक साइन्स और टेक्नालजी की भी एक गौरवशाली यात्रा है।
IMD ने इन 150 वर्षों में न केवल करोड़ों भारतीयों की सेवा की है, बल्कि भारत की वैज्ञानिक यात्रा का भी प्रतीक बना है: PM @narendramodi
वैज्ञानिक संस्थाओं में रिसर्च और इनोवेशन नए भारत के temperament का हिस्सा है।
— PMO India (@PMOIndia) January 14, 2025
इसीलिए, पिछले 10 वर्षों में IMD के इंफ्रास्ट्रक्चर और टेक्नॉलजी का भी अभूतपूर्व विस्तार हुआ है: PM @narendramodi
भारत एक climate-smart राष्ट्र बनें इसके लिए हमने ‘मिशन मौसम’ भी लॉंच किया है।
— PMO India (@PMOIndia) January 14, 2025
मिशन मौसम sustainable future और future readiness को लेकर भारत की प्रतिबद्धता का भी प्रतीक है: PM @narendramodi
हमारी meteorological advancement के चलते हमारी disaster management capacity build हुई है।
— PMO India (@PMOIndia) January 14, 2025
इसका लाभ पूरे विश्व को मिल रहा है।
आज हमारा Flash Flood Guidance system नेपाल, भूटान, बांग्लादेश और श्रीलंका को भी सूचनाएं दे रहा है: PM @narendramodi