Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய  உரையின் தமிழாக்கம்

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-ஆவது நிறுவன தினத்தில் பிரதமர் ஆற்றிய  உரையின் தமிழாக்கம்


மத்திய அமைச்சர்கள் குழுவின் எனது சக நண்பர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே,  டபிள்யூ.எம்.ஓவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டி சவுலோ அவர்களே, வெளிநாட்டிலிருந்து வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். எம் ரவிச்சந்திரன் அவர்களே, ஐ.எம்.டியின் தலைமை இயக்குநர் டாக்டர். மிருத்யுஞ்சய் மொஹபத்ரா அவர்களே,  பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் விஞ்ஞானிகளே, அதிகாரிகளே,  தாய்மார்களே, அன்பர்களே! 

இன்று நாம் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். இந்த 150 வருடங்கள்,  இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பயணம் மட்டுமல்ல. இது நம் நாட்டில் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் புகழ்பெற்ற பயணமுமாகும். ஐ.எம்.டி, இந்த 150 ஆண்டுகளில் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் அறிவியல் பயணத்தின் அடையாளமாகவும் மாறியுள்ளது. இன்று, இந்த சாதனைகள் குறித்து தபால் தலை மற்றும் சிறப்பு நாணயமும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-இல் இந்திய வானிலை ஆய்வு மையம் எப்படி இருக்கும் என்பது குறித்த தொலைநோக்குப் பார்வை ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பான சந்தர்ப்பத்திற்காக  உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 150 ஆண்டுகால இந்தப் பயணத்துடன் இளைஞர்களை இணைக்க தேசிய வானிலை ஒலிம்பியாட் போட்டியையும் ஐ.எம்.டி ஏற்பாடு செய்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். 
நண்பர்களே,

1875-ஆம் ஆண்டில், இந்திய வானிலை ஆய்வுத்துறை, ஜனவரி 15ஆம் தேதி மகர சங்கராந்தியின் போது நிறுவப்பட்டது. இந்திய பாரம்பரியத்தில் மகர சங்கராந்தி எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில், மகர சங்கராந்தியுடன் தொடர்புடைய பல்வேறு பண்டிகைகளுக்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த ஒரு நாட்டின் அறிவியல் நிறுவனங்களின் முன்னேற்றமும், அறிவியலின் மீதான அதன் விழிப்புணர்வைக் காட்டுகிறது. அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் புதிய இந்தியாவின் மனோபாவத்தின் ஒரு பகுதியாகும். அதனால்தான், கடந்த 10 ஆண்டுகளில், ஐ.எம்.டி-இன் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன் எப்போதும் இல்லாத விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது. டாப்ளர் வெதர் ரேடார், தானியங்கி வானிலை நிலையங்கள், ஓடுபாதை வானிலை கண்காணிப்பு அமைப்புகள், மாவட்ட வாரியாக மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்கள் போன்ற பல நவீன உள்கட்டமைப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து, மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முழுப் பயனையும் வானிலை ஆய்வுகள் பெற்று வருகின்றன. இன்று, நாட்டில் அண்டார்டிகாவில் மைத்ரி மற்றும் பாரதி என்ற 2 வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஆர்க் மற்றும் அருணிகா சூப்பர் கம்ப்யூட்டர்கள் தொடங்கப்பட்டன. இதுவும் முன்னெப்போதையும் விட வானிலை ஆய்வு மையத்தின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில், எந்தவொரு வானிலை நிலைமைக்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டும், இந்தியா ஒரு காலநிலை ஸ்மார்ட் தேசமாக மாற வேண்டும், இதற்காக நாங்கள் ‘மௌசம் இயக்கத்தைத்’ தொடங்கினோம். மௌசம் இயக்கம், நிலையான எதிர்காலம் மற்றும் எதிர்காலத் தயார்நிலைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அடையாளப்படுத்துகிறது.

நண்பர்களே,

வானிலை ஆய்வுத் துறையின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும். வரும் காலங்களில், ஐ.எம்.டி தரவுகளுக்கான தேவை அதிகரிக்கும். இந்தத் தரவுகளின் பயன்பாடு பல்வேறு துறைகள், தொழில்கள் மற்றும் சாதாரண மக்களின் வாழ்வில் கூட அதிகரிக்கும். எனவே, எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளின் சவால்களும் உள்ளன. அங்கு நாம் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டும். இந்தத் திசையில் புதிய முன்னேற்றங்களை நோக்கி நமது விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஐ.எம்.டி போன்ற நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலக நாடுகளுக்கு சேவை செய்வதோடு, உலகின் பாதுகாப்பிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்த உற்சாகத்துடன், வரும் காலங்களில் ஐ.எம்.டி புதிய உச்சங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். 150 ஆண்டுகால இந்த புகழ்பெற்ற பயணத்திற்காக ஐ.எம்.டி. மற்றும் வானிலை ஆய்வுடன் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2092754 

***************** 

TS/BR/KV