Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாடு

இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாடு


பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் பின்லாந்து பிரதமர் திருமிகு சன்னா மரின் ஆகியோர் காணொலி உச்சி மாநாடு ஒன்றை இன்று நடத்தினர். இருதரப்பு உறவின் ஒட்டுமொத்த பரிமாணம் குறித்தும்  பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா மற்றும் பின்லாந்து நாடுகள் பகிர்ந்து கொள்ளும் நெருங்கிய நட்புறவை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். பன்முகத்தன்மை, சட்டங்கள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு, நீடித்த வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதலுக்கான தங்களது உறுதியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் உறவுகள் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுமைகள், கல்வி, செயற்கை நுண்ணறிவு, 5ஜி/6ஜி மற்றும் குவாண்டம் கணினியியல் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் கூட்டை மேலும் விரிவுபடுத்தவும், வலுவாக்கவும் விருப்பம் தெரிவித்தனர்.

தூய்மையான மற்றும் பசுமை தொழில்நுட்பங்களில் பின்லாந்தின் முன்னணி பங்களிப்பை பாராட்டிய பிரதமர் திரு மோடி, நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் நடவடிக்கைகளில் கூட்டு சேர்வதற்கு பின்லாந்து நிறுவனங்களுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினார். புதுப்பிக்கத்தக்க மற்றும் உயிரி எரிசக்தி, நிலைத்தன்மை, கல்விதொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய துறைகளில் மேம்பட்ட கூட்டுக்கான ஆலோசனையை பிரதமர் வழங்கினார்.

இந்தியஐரோப்பிய யூனியன் கூட்டு, ஆர்க்டிக் பகுதியில் ஒத்துழைப்பு, உலக வர்த்தக அமைப்பு மற்றும் ஐநா சீர்திருத்தங்கள் குறித்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து தலைவர்கள் தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆப்பிரிக்காவில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியா மற்றும் பின்லாந்து நாடுகளின் கூட்டு முயற்சிக்கு நிலவும் சாத்தியக்கூறுகளை இருதரப்பும் குறிப்பிட்டன.

சர்வதேச சூரிய சக்தி கூட்டணியிலும், பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணியிலும் இணையுமாறு பின்லாந்துக்கு பிரதமர் திரு மோடி அழைப்பு விடுத்தார்.

கொவிட்-19 நிலைமை குறித்தும், இரு நாடுகளின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்த இரு தலைவர்களும், அனைத்து நாடுகளுக்கும் விரைவாகவும், குறைந்த விலையிலும் தடுப்பு மருந்து கிடைக்க செய்வதற்கான சர்வதேச முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

போர்டோவில் நடைபெறவுள்ள இந்தியஐரோப்பிய யூனியன் தலைவர்கள் கூட்டம் மற்றும் இந்தியநோர்டிக் உச்சி மாநாடு ஆகியவற்றில் சந்திக்க ஆவலாக இருப்பதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

——-