Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய தொலைத்தொடர்பு சேவையின் குரூப் ஏ அதிகாரிகள் சேவைப் பணியை மறுஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய தொலைத்தொடர்பு சேவையின் குருப் ஏ அதிகாரிகளின் சேவைப்பணியை மறுஆய்வு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. உயர்மட்ட அளவில், தொலைத் தொடர்பு தலைமை இயக்குநர் என்ற ஒரு பதவியை உருவாக்குதல்.

2. பதவியில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 853-ஆக நிர்ணயம் செய்தல்.

3. வேறு துறைகள்/அமைப்புகளுக்கு மாற்றுவதற்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையில், இந்திய தொலைத்தொடர்பு சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு 310 இடங்களை ஒதுக்குவது.

4. பி.எஸ்.என்.எல்./எம்.டி.என்.எல். நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் இந்திய தொலைத் தொடர்பு சேவை அதிகாரிகளுக்கு சிறப்பு டிமினிஷிங் ரிசர்வ் வழங்குதல்

5. அதிகாரிகள் அளவை தற்போது பணியாற்றும் அளவான 1,690-லிலேயே வைத்திருத்தல்

இந்த ஒப்புதல் மூலம், தொலைத் தொடர்புத் துறை தலைமையகத்திலும், பணியிடங்களிலும் செயல்பாட்டுத் தேவைக்கு ஏற்ப அதிகாரிகள் அமைப்பை வலுப்படுத்த முடியும். மேலும், பி.எஸ்.என்.எல்./எம்.டி.என்.எல். -லில் திறன்வாய்ந்த பணியாளர்களின் தேவையை பூர்த்திசெய்ய முடியும். தற்போதுள்ள இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகளின் தேக்க நிலை குறையும்.

பின்னணி

தொலைத் தொடர்பு குறித்த பிரிவுகளில் கொள்கைகளை வகுத்தல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை செயல்பாடுகளுக்கான தேவையை நிறைவுசெய்ய 1965-ம் ஆண்டில் இந்திய தொலைத்தொடர்பு சேவை குருப் ஏ பணிச்சேவை அமைக்கப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் சேவை தேர்வுகள் மூலம் இந்திய தொலைத் தொடர்பு சேவை அதிகாரிகள் தேர்வுசெய்யப்படுகின்றனர். இவர்கள், தொலைத் தொடர்புத் துறை, அதன் பொதுத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., டி.சி.ஐ.எல்.), இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), தொலைத்தொடர்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் நிர்வாக தீர்ப்பாயம் (டி.டி.எஸ்.ஏ.டி.) ஆகியவற்றில் மேலாண்மை மற்றும் நிர்வாகப் பதவிகளில் சேர்க்கப்படுகிறார்கள். மேலும், பிற மத்திய அமைச்சகங்கள்/துறைகள்/தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளுக்கு மாற்றுப்பணி மூலம் (deputation) செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்திய தொலைத்தொடர்பு சேவையில் அதிகாரிகள் குழுவை மறுஆய்வு செய்யும் பணி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 1988-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு, தொலைத் தொடர்பு சேவைப் பணிகள், தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து மாற்றப்பட்டுள்ளது. எனினும், தொலைத்தொடர்பு உரிமம் வழங்குதல், கண்காணிப்பு, உரிமங்களுக்கான நிபந்தனைகளை அமல்படுத்துதல், இணைய பாதுகாப்பு, மென்பொருள் சேவைகளை இணைத்து வழங்குதல், தரநிலையை உருவாக்குதல், சட்டப்பூர்வ ஒட்டுக்கேட்பு, ஒருங்கிணைந்த சேவை ஆகிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, செயல்பாடுகளுடன் இணைந்திருந்த மற்ற சில பணிகள், அளவு அடிப்படையிலும், பணி அடிப்படையிலும் இணைந்துள்ளன. டிஜிட்டல் சமூகத்தின் முதுகெலும்பாக வலுவான தொலைத் தொடர்பு கட்டமைப்பு உள்ளது. இந்தத் துறையில் ஒழுங்குபடுத்துதல், அமலாக்கம், பாதுகாப்பு என ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தொலைத் தொடர்புத் துறையில் உயர்மட்ட அளவில் தொழில்நுட்ப மேற்பார்வை அவசியமாகிறது. இதன் காரணமாக, இந்திய தொலைத் தொடர்பு அதிகாரிகள் பிரிவில் மாற்றத்தைக் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டது. தொலைத் தொடர்புத் துறையின் பணிகளையும், கடமையையும் நிறைவேற்ற இது அவசியம் என்று கருதப்படுகிறது. மேலும், பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு புத்துயிரூட்டுவதில் இந்திய தொலைத் தொடர்பு சேவை அதிகாரிகளின் பங்களிப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளுடன் இணைந்து, இந்த சேவையின் பல்வேறு பிரிவுகளில் தேக்கம் இருப்பதால், இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரிகள் பிரிவை மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இந்தப் பணிப்பிரிவில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, தற்போது பணியாற்றிவரும் அதிகாரிகளின் எண்ணிக்கையிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிகாரிகள் குழுவை மறுஆய்வு செய்யும்போது, அரசுக்கு புதிதாக நிதிச்சுமையை ஏற்படுத்தாது.