Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியக கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியக கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியக கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியக கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார்


திரு பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய திரைப்படத்தின் தேசிய அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டடத்தை மும்பையில் இன்று (19.01.2019) திறந்து வைத்தார்.

மகாராஷ்ட்ரா ஆளுநர் திரு.சி. வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், மத்திய இணை அமைச்சர்கள் திரு.ராம்தாஸ் அத்வாலே, கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகையில், இந்திய திரைப்படத்துறையைப் பற்றி, அறிந்து கொள்ள இளைஞர் சமுதாயத்தினருக்கு இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகம் அரியதொரு வாய்ப்பை அளிக்கும் என்றார். இந்த அருங்காட்சியகம் இந்திய கேளிக்கை மற்றும் பொழுது போக்குத் தொழில் துறையின் வரலாறு குறித்த விரிவான தகவல்களையும், திரையுலகப் பிரபலங்களின் வெற்றிக் கதைகளையும் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரைப்படமும், சமுதாயமும் ஒன்றுக்கொன்று பிரதிபலிக்கும் அமைப்புகளாகும் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், சமுதாயத்தில் எந்த சம்பவங்கள் நடைபெற்றாலும், திரைப்படங்களில் அவை பிரதிபலிக்கும் என்று கூறினார். திரைப்படங்களில் வரும் உருவங்களும், சமுதாயத்தில் கண்ணாடி போல் பளிச்சிடும் என்றும் பிரதமர் தெரிவித்தார். திரைப்படங்களின் தற்போதைய நிலைமை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், பல திரைப்படங்கள் பிரச்சினைகள் குறித்தும் அவற்றின் தீர்வையும் வெளிப்படுத்துவது சாதகமான சூழல் என்றார். கடந்த ஆண்டுகளில் பிரச்சினைகளை மட்டுமே காட்டி உதவியற்ற நிலைமையைத் திரைப்படங்களில் காணமுடிந்தது என்றும் அவர் கூறினார். நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண்பதில் தற்போது நாம் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்த திரு மோடி, இத்தருணம் புதிய இந்தியாவுக்கான அடையாளம் என்றார். நமது பிரச்சினைகளை நாமே தலையில் சுமந்து அதற்கு தீர்வு காணும் தகுதியை பெற்றிருக்கிறோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

இந்திய சினிமா உலகெங்கும் சென்றடைந்திருப்பதையும். இந்தியத் திரைப் பாடல்களை இசைக்கும் பல்வேறு உலகத்தலைவர்களுடன் தாம் கலந்துரையாடியிருப்பதையும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார். இளைய சமுதாயத்தினரின் கற்பனைகளுக்கான சிறந்த கதாநாயகர்களை உருவாக்கும் திரைப்படத்துறையினருக்கு அவர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். உலக அளவில் சென்று சேர்ந்துள்ள இது போன்ற கதாநாயகர்களால், இந்தியாவில் இளைஞர்கள் “பேட்மேனு“க்கு மட்டுமல்ல “பாகுபலி“க்கும் ரசிகர்களாக மாறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் மென்மையான அதிகாரம், அதன் நம்பகத்தன்மை, மற்றும் இந்தியாவின் நிலையான அடையாளத்தை உலகெங்கும் மேம்படுத்துவதில் இந்திய சினிமாவுக்கு மிகப் பெரிய பங்கு உணடு என்று பிரதமர் கூறினார். திரைப்படங்கள் மூலமாக முக்கிய சமூக பிரச்சினைகளான துப்புரவுப்பணி, மகளிர் அதிகாரத்தை மேம்படுத்துதல் விளையாட்டு உள்ளிட்டவை மக்களுக்கு தற்போது சென்றடைவதாக கூறிய பிரதமர், தேசத்தை உருவாக்குவதிலும், ஒன்றே பாரதம், சிறந்த பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்துவதிலும் சினிமா முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்டார். நாட்டில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு திரைப்படத்துறை அதிக அளவில் பங்களிப்பை செய்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

திரைப்படம் எடுப்பதை எளிதாக்குவதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பதற்காக ஒற்றைச் சாளர முறையை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். பைரஸியைத் தடுப்பதற்கு 1952 திரைப்படச் சட்டத்தை திருத்துவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

உருவங்களுக்கு உயிரூட்டுதல், காட்சியின் விளைவுகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றுக்கான சிறந்த தேசிய மையம் ஒன்றை உருவாக்கும் பணியில் அரசு முனைந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்குத்துறைக்கு முழுமையாக அர்ப்பணிக்கும் வகையில், பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது இத்தருணத்தில் மிகவும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இதற்கான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் திரைப்பிரபலங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தாவோஸ் உச்சிமாநாட்டைப் போன்று இந்திய திரைப்படத்துறைக்கான சந்தையை விரிவுப்படுத்தும் வகையில் உலக அளவில் திரைப்பட உச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற யோசனையை பிரதமர் தெரிவித்தார்.