Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய – ஜெர்மனி நாடுகளுக்கு இடையிலான விருப்பக் கூட்டு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது


மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது. இந்தியா ஜெர்மனி நாடுகளுக்கு இடையில் விருப்பக் கூட்டுப் பிரகடனம் (JDI) எட்டப்பட்டது குறித்த தகவல் மத்திய அமைச்சரவைக்கு விவரிக்கப்பட்டது. இந்தியா – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் தொடர்பான இந்தப் பிரகடனத்தில் இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையும், ஜெர்மனியின் கல்வி மற்றும் ஆய்வுக்கான கூட்டாட்சி அமைச்சகமும் கடந்த மே மாதம் 30ம் தேதி கையெழுத்திட்டன. இந்தியா ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான நான்காவது ஆலோசனைக் கூட்டங்களையொட்டி இந்தப் பிரகடனம் ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் உருவானது. பிரகடனத்தில் இந்தியாவின் சார்பில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பிலும் மற்றும் புவி அறிவியல் துறை சார்பிலும் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் ஜெர்மனி நாட்டு கல்வி ஆராய்ச்சித் துறை அமைச்சர் பேராசிரியர் டாக்டர் ஜொஹானா வேன்காவும் கையெழுத்திட்டனர்.

இந்தியா – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் (IGCS) குறித்த இந்தக் கூட்டு விருப்பப் பிரகடனத்தின் (Joint Declaration of Intent) நோக்கம் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடும் இந்தியா ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும். கொள்கை அடிப்படையிலான ஆதரவு, பயிற்றுமுறை, பயிற்சிமுறை மற்றும் பல்வேறு ஆய்வுகள், நிலைத்த மேம்பாடு மற்றும் பருவ மாற்றம் ஆகியவை குறித்த தகவல் பரிமாற்றம் ஆகியவை இந்தப் பிரகடனத்தில் உள்ளடங்கியுள்ளன.

இந்தியாவிலும் ஜெர்மனியிலும் உள்ள கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுடன் பின்னிப் பிணைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அமையும் கூட்டிணைப்புக்கு எதிர்கால இந்தியா – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் (IGCS) ஊட்டமளிக்கும். இந்தியா தரப்பில் இந்திய தொழில்நுட்பக்கழகம்- சென்னை (IIT – Madras) நிறுவனம் இந்தியா – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் (IGCS) செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

இந்த விருப்பக் கூட்டுப் பிரகடனத்தின் (JDI) கீழ் சென்னையில் ஐ.ஐ.டி.யில் அமையும் இந்திய – ஜெர்மனி நிலைத்தன்மை மையத்திற்குத் (IGCS) தேவையான கட்டமைப்பு, நிதியுதவி ஆகிய வசதிகளை மத்திய அறிவியல் – தொழில்நுட்பத் துறையும் ஜெர்மனியின் கல்வி மற்றும் ஆய்வுக்கான கூட்டாட்சி அமைச்சகமும் அளிக்கும். இந்திய – ஜெர்மனி நிலைத்தன்மை மையம் (IGCS) ஆய்வுகளை மேற்கொள்வதற்கு 2018ம் ஆண்டு ஜனவரி முதல் மத்திய அறிவியல் – தொழில்நுட்பத் துறை மானிய உதவி அளிக்கும். அதற்கு ஜெர்மனி அமைச்சகம் துணை புரியும். இந்த உதவி ஐந்தாண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

****