Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இந்திய கத்தோலிக்க பிஷப்புகள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


மதிப்பிற்குரிய பிரமுகர்களே…!

உங்கள் அனைவருக்கும், எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

சில நாட்களுக்கு முன்பு, எனது சகாவும் மத்திய இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நான் கலந்து கொண்டேன். இன்று, உங்கள் அனைவர் மத்தியிலும் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய கத்தோலிக்க பிஷப் கூட்டமைப்பால் (சிபிசிஐ) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியில் உங்கள் அனைவருடனும் சேர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்த நாள் நம் அனைவருக்கும் மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. இந்த ஆண்டு சிபிசிஐ நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முக்கியமான தருணத்தில், சிபிசிஐ-க்கும் அதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த ஆண்டு, பிரதமர் இல்லத்தில் உங்கள் அனைவருடனும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, நாம் அனைவரும் இங்கே சிபிசிஐ வளாகத்தில் கூடியிருக்கிறோம். இதற்கு முன்பு, ஈஸ்டர் பண்டிகையின் போது சேக்ரட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்திற்கும் சென்றிருந்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் இத்தகைய அரவணைப்பையும் அன்பையும் பெற்றதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். அதே அன்பை போப் பிரான்சிஸ் அவர்களிடமிருந்தும் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது போப் பிரான்சிஸை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் அது எங்கள் இரண்டாவது சந்திப்பு. பாரதத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தேன். அதேபோல், செப்டம்பர் மாதத்தில் நான் நியூயார்க் சென்றிருந்தபோது, கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களைச் சந்தித்தேன். இந்த ஆன்மீக சந்திப்புகள், இந்த ஆன்மீக சொற்பொழிவுகள், சேவைக்கான நமது தீர்மானத்தை பலப்படுத்தும் சக்தியை அளிக்கின்றன.

நண்பர்களே,

சமீபத்தில், கர்டினல் ஜார்ஜ் கூவக்காட்டை சந்தித்து அவரை கௌரவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில வாரங்களுக்கு முன்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்டினல் ஜார்ஜ் கூவக்காட் அவர்களுக்கு கர்டினல் என்ற பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் தலைமையில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு உயர்மட்டக் குழுவை பாரத அரசு அதிகாரப்பூர்வமாக அனுப்பியது. பாரத மைந்தர் ஒருவர் வெற்றியின் இத்தகு சிகரத்தை அடையும் போது, ஒட்டுமொத்த தேசத்திலும் பெருமிதம் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். கர்டினல் ஜார்ஜ் கூவக்காட் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று உங்கள் மத்தியில் நிற்பது பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அருட்தந்தை அலெக்சிஸ் பிரேம் குமாரை நாங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்த தருணங்களை நான் மிகுந்த திருப்தியுடன் நினைவு கூர்கிறேன். இதேபோல், ஏமனில் ஃபாதர் டாம் பிணைக் கைதியாக வைக்கப்பட்டபோது, அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வர எங்கள் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அவர் திரும்பி வந்த பிறகு அவரை எனது இல்லத்திற்கு அழைத்தேன். வளைகுடா நாடுகளில் நமது செவிலியர் சகோதரிகள் நெருக்கடியான சூழ்நிலைகளில் சிக்கியபோது, ஒட்டுமொத்த தேசமும் அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டது. அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான எங்கள் இடைவிடாத முயற்சிகளும் பலனளித்தன. எங்களைப் பொறுத்தவரை, இவை வெறும் ராஜதந்திர பணிகள் அல்ல; அவை உணர்வுபூர்வமான அர்ப்பணிப்புகள். இவை எங்கள் குடும்ப உறுப்பினர்களை மீட்பதற்கான பணிகள். ஒரு இந்தியர் உலகில் எங்கிருந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதை தனது கடமையாக இன்றைய பாரதம் கருதுகிறது.

நண்பர்களே,

பாரதம் தனது வெளியுறவுக் கொள்கையில் தேச நலனுக்கு மட்டுமல்ல, மனித நலனுக்கும் முன்னுரிமை அளிக்கிறது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது, பாரதம் தனது திறன்களுக்கு அப்பாற்பட்டு, கருணை உணர்வுடன் பல நாடுகளுக்கு உதவிகளை வழங்கியது. 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பினோம். பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம். இது உலகளவில் ஆழமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சில நாட்கள் முன்பாக நான் கயானாவுக்கும், பின்னர் குவைத் நாட்டுக்கும் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பாரதம் குறித்து பரவலான பாராட்டுகளைக் கேட்டேன். குறிப்பாக தடுப்பூசிகள் மூலம் பாரதம் வழங்கிய உதவிக்கு அங்குள்ள மக்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

நண்பர்களே,

கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தை கொண்டாடுகின்றன. இந்த உணர்வை பலப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம். ஆனால், வன்முறையை பரப்பி சமூகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கும்போது அது என் இதயத்தில் வலியை ஏற்படுத்துகிறது. சவால்களை ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடுவது முக்கியம்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். ஏழைகள் நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொண்டதால் இது சாத்தியமானது. ஆம், வறுமைக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை. அதே காலகட்டத்தில், பாரதம் உலகின் 10 வது பெரிய பொருளாதாரத்திலிருந்து 5 வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. பாரதத்தின் 10 ஆண்டுகால வளர்ச்சிப் பயணம் நமக்கு புதிய நம்பிக்கையையும், வரவிருக்கும் ஆண்டுகளுக்கும், நமது எதிர்காலத்திற்கும் எண்ணற்ற விருப்பங்களையும் அளித்துள்ளது. இந்த தசாப்தத்தில், நமது இளைஞர்கள் பெற்ற வாய்ப்புகள் வெற்றிக்கான புதிய பாதைகளை அமைத்துக் கொடுத்துள்ளன.

நண்பர்களே,

“ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்துகொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதாவது, நாம் ஒருவருக்கொருவர் அக்கறை காட்ட வேண்டும். ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இந்த மனப்பான்மையோடுதான் நமது நிறுவனங்களும், அமைப்புகளும் சமூக சேவையில் மகத்தான பங்காற்றுகின்றன. கல்வித் துறையில் புதிய பள்ளிகளை நிறுவுவதாகட்டும், கல்வியின் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்த முயற்சிப்பதாகட்டும், அல்லது சுகாதாரத் துறையில் சாமானிய மனிதனுக்கு சேவை செய்ய உறுதிபூண்டிருப்பதாகட்டும், இந்த முயற்சிகளை எங்களது பகிரப்பட்ட பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம்.

நண்பர்களே,

இரக்கம், தன்னலமற்ற சேவையின் பாதையை இயேசு கிறிஸ்து உலகிற்கு காட்டினார். நாம் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறோம். இயேசுவை நினைவுகூர்கிறோம். இதனால் இந்த மதிப்புகளை நம் வாழ்வில் எப்போதும் நமது கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். இது நமது தனிப்பட்ட பொறுப்பு மட்டுமல்ல. ஒரு சமூகக் கடமை. ஒரு தேசம் என்ற வகையில் நமது கடமை என்று நான் நம்புகிறேன். “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற உறுதிப்பாட்டில் பொதிந்துள்ள அதே உணர்வுடன் இன்று இந்தியா முன்னேறி வருகிறது.

ஒவ்வொரு ஏழைக்கும் நிரந்தர வீடு கிடைப்பதை உறுதி செய்வதாகட்டும், இருளை விரட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்குவதாகட்டும், ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதாகட்டும், அல்லது பணம் இல்லாததால் யாரும் சிகிச்சை பெறாமல் இருப்பதைத் தடுப்பதை உறுதி செய்வதாகட்டும்.. இத்தகைய சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஒரு ஏழைக் குடும்பம் இத்தகைய உத்தரவாதத்தைப் பெறும்போது, அவர்களின் தோள்களிலிருந்து எவ்வளவு சுமை இறக்கி வைக்கப்படுகிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

நண்பர்களே,

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரசின் திறன் முக்கியமானது. உதாரணமாக, நம் நாட்டில் சுமார் மூன்று கோடி மீனவர்கள், மீன் விவசாயிகள் உள்ளனர். இருப்பினும், இந்த மக்களுக்கு கடந்த காலத்தில் உரிய கவனம் ஒருபோதும் வழங்கப்படவில்லை. மீன்வளத்துறைக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை போன்ற சலுகைகளை வழங்கத் தொடங்கினோம். நாங்கள் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல நவீன முயற்சிகள் செயல்படுத்தப்பட்டன. இந்த முயற்சிகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தியுள்ளன.

நண்பர்களே,

செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நான் அனைவரும் இணைவோம், அனைவரின் முயற்சி பற்றிப் பேசினேன். அதாவது கூட்டு முயற்சி. நாட்டின் எதிர்காலத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. மக்கள் ஒன்றிணைந்தால், நாம் அதிசயங்களைச் செய்ய முடியும். இத்தகைய முயற்சிகளை முன்னின்று வழிநடத்தும் நமது இளைஞர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நிறைவேற்ற இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கியம்.

நண்பர்களே,

நமது கூட்டு முயற்சிகள் நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்பது நமது பகிரப்பட்ட இலக்கு. அதை நாம் ஒன்றாக அடைய வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு ஒளிமயமான பாரதத்தை விட்டுச் செல்வதை உறுதி செய்வது நமது கடமையாகும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயபூர்வமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியிலும், உரையின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் நிகழ்த்தி இருந்தார்.