பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் இந்திய எரிசக்தி வாரம் 2025-ல் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். யஷோ பூமியில் நடைபெற்ற கூட்டத்தில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், பங்கேற்பாளர்கள் எரிசக்தி வாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், இந்திய எரிசக்தி லட்சியங்களுக்கு ஒரு பகுதியாக விளங்குபவர்கள் என்று கூறினார். இந்த நிகழ்வில் அவர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்ததோடு வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள சிறப்பு விருந்தினர்கள் உட்பட பங்கேற்பாளர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் வலியுறுத்துவதைச் சுட்டிக்காட்டிய திரு மோடி, “இந்தியா தனது வளர்ச்சியை மட்டுமல்லாம், உலகின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது என்றும், அதில் எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார். வளங்களைத் திறம்பட பயன்படுத்துதல், புத்திக்கூர்மை உடையவர்களிடையே புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், பொருளாதார வலிமை மற்றும் அரசியல் நிலைத்தன்மை, உத்தி சார்ந்த புவியியல் எரிசக்தி வர்த்தகத்தை ஈர்ப்புடையதாகவும், எளிதாகவும் ஆக்குதல், உலகளாவிய நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் ஆற்றல் லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் எடுத்துக்காட்டினார். இந்தக் காரணிகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த இருபது ஆண்டுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு முக்கியமானவை என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அடுத்த ஐந்தாண்டுகளில் பல குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டுவோம் என்று உறுதிபட எடுத்துரைத்தார். 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன், இந்திய ரயில்வேயின் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை அடைதல், ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் பல எரிசக்தி இலக்குகள் 2030 காலக்கெடுவுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்குகள் லட்சியமாகத் தோன்றலாம், ஆனால் கடந்த பத்தாண்டின் சாதனைகள் இந்த இலக்குகள் அடையப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
“கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்தில் இருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது” என்று திரு மோடி குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய மின் சக்தி உற்பத்தித் திறன் முப்பத்திரண்டு மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பாரீஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை எட்டிய முதல் ஜி-20 நாடு இந்தியா என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய பத்தொன்பது சதவிகித எத்தனால் கலப்பு என்பது இந்தியாவின் அந்நியச் செலாவணி சேமிப்பு, விவசாயிகளின் கணிசமான வருவாய் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2025 அக்டோபர் மாதத்திற்குள் இருபது சதவீத எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில்துறை 500 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்ற அளவில் விரைவான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் போது, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டாண்மை நிறுவப்பட்டது. அது தொடர்ந்து விரிவடைந்து வருவதாகவும், தற்போது 28 நாடுகள் மற்றும் 12 சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தக் கூட்டாண்மையானது கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறப்பு மையங்களை அமைக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா தனது ஹைட்ரோகார்பன் வளங்களின் திறனை முழுமையாக ஆராய்வதற்காக தொடர்ந்து சீர்திருத்தம் செய்து வருகிறது என்பதை எடுத்துக்காட்டிய திரு மோடி, முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம் ஆகியன எரிவாயு துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து, இந்தியாவின் எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார். இந்தியா தற்போது நான்காவது பெரிய சுத்திகரிப்பு மையமாக உள்ளதாகவும், அதன் திறனை 20 சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளங்கள் இருப்பதாகவும், அவற்றில் சில ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும், மற்றவை ஆய்வுக்காக உள்ளன என்றும் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவின் இந்த முக்கியத் துறையை மிகவும் ஈர்ப்புடையதாக மாற்ற, அரசு வெளிப்படையான உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். சிறப்பு பொருளாதார மண்டலத்தைத் திறப்பது, ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுதல் உள்ளிட்டவற்றுக்கு அரசு விரிவான ஆதரவை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். எண்ணெய் வயல்களின் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தற்போது பங்குதாரர்களுக்கு கொள்கைசார் நிலைத்தன்மை, நீட்டிக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மேம்பட்ட நிதி விதிமுறைகளை வழங்குகின்றன என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்த சீர்திருத்தங்கள் கடல்சார் துறையில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை ஆராய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும், உத்திசார்ந்த பெட்ரோலிய இருப்புக்களை பராமரிப்பதற்கும் உதவும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவடைந்து வரும் குழாய் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருவதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இது எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு பயன்பாடு அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் துறைகளில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
“இந்தியாவின் முக்கிய கவனமானது இந்தியாவில் தயாரியுங்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலிகளில் உள்ளது” என்று திரு மோடி கூறினார். இந்தியாவில் சூரிய மின்கலத் தொகுப்புகள் உட்பட பல்வேறு வகையான மென்பொருள்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்து ஆண்டுகளில் சோலார் பிவி தொகுப்பு உற்பத்தி திறன் 2 ஜிகாவாட்டிலிருந்து சுமார் 70 ஜிகாவாட்டாக விரிவடைந்து உள்ளதுடன் உள்ளூர் உற்பத்தியையும் இந்தியா ஆதரிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டமானது, அதிக திறன் கொண்ட சூரிய பிவி தொகுப்புகளின் உற்பத்தியை ஊக்குவித்து, துறையை மிகவும் ஈர்ப்புடையதாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். மின்கலங்கள், சேமிப்புத் திறன் துறையில் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் உற்பத்திக்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை எடுத்துரைத்த பிரதமர், மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறிச் செல்வதாகக் குறிப்பிட்டார். மேலும் இந்தத் துறையில் பெரிய நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரைவான நடவடிக்கையின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் பசுமை எரிசக்தியை ஆதரிக்கும் பல அறிவிப்புகள் உள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். மின்சார வாகனங்கள், மொபைல் போன் பேட்டரிகள் தயாரிப்பது தொடர்பாக பல பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து அரசு விலக்கு அளித்துள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். இதில் கோபால்ட் பவுடர், லித்தியம்-அயன் பேட்டரி கழிவுகள், ஈயம், துத்தநாகம் பிற முக்கியமான தாதுக்கள் உள்ளடங்கும். இந்தியாவில் வலுவான விநியோகச் சங்கிலியைக் கட்டமைப்பதில் முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கம் இன்றியமையாதப் பங்கு வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். லித்தியம் அல்லாத பேட்டரி அமைப்பை மேம்படுத்துவதையும் அவர் எடுத்துரைத்தார். நடப்பு ஆண்டு பட்ஜெட் அணுசக்தித் துறை வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தியுள்ளதாகவும், எரிசக்திக்கான ஒவ்வொரு முதலீடும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் பசுமை வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் எரிசக்தி துறையை வலுப்படுத்த, அரசு மக்களுக்கு அதிகாரம் அளித்து வருகிறது” என்று பிரதமர் கூறினார். எளிய குடும்பங்களும் விவசாயிகளும் எரிசக்தி விநியோகஸ்தர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை அவர் எடுத்துரைத்தார். பிரதமர் சூர்ய மேற்கூரை இலவச மின்சாரத் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்றும், அதன் நோக்கம் எரிசக்தி உற்பத்திக்கு மட்டுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் சூரியசக்தி துறையில் புதிய திறன்களை உருவாக்குகிறது, புதிய சேவை சூழலை உருவாக்குகிறது என்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது உரையின் நிறைவாக பிரதமர் திரு நரேந்திர மோடி, வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் இயற்கையை வளப்படுத்தும் எரிசக்தி தீர்வுகளை வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இந்த எரிசக்தி வாரம் இந்தத் திசையில் உறுதியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் உருவாகும் ஒவ்வொரு சாத்தியக்கூறுகளையும் ஆராயுமாறு அனைவரையும் ஊக்குவித்த அவர், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
——
(Release ID: 2101619)
TS/IR/KPG/KR
Sharing my remarks at the @IndiaEnergyWeek. https://t.co/LR166lIqyF
— Narendra Modi (@narendramodi) February 11, 2025