Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய எரிசக்தி வாரத்தின் போது பிரதமரின் கருத்துக்களின் மொழிபெயர்ப்பு

இந்திய எரிசக்தி வாரத்தின் போது பிரதமரின் கருத்துக்களின் மொழிபெயர்ப்பு


மத்திய அமைச்சரவையின் மாண்புமிகு உறுப்பினர்கள், மேன்மை தங்கிய, தூதர்கள், புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகள், மரியாதைக்குரிய விருந்தினர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களே,

இந்திய எரிசக்தி வாரத்திற்காக நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து யஷோபூமியில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! நீங்கள் இந்த எரிசக்தி வாரத்தில் பங்கேற்பாளர்கள் மட்டுமல்ல, பாரதத்தின் எரிசக்தி லட்சியங்களின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளீர்கள். உங்கள் அனைவரையும், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் விருந்தினர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்குச் சொந்தமானது என்று கூறுகிறார்கள். இந்தியா அதன் சொந்த வளர்ச்சியை மட்டுமல்லாமல், உலகின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது, மேலும் நமது எரிசக்தி துறை இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

நண்பர்களே,

அடுத்த இரண்டு தசாப்தங்கள் ‘வளர்ந்த இந்தியாவுக்கு மிக முக்கியமானவை, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், நாம் பல குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் கடப்போம். நமது பல எரிசக்தி இலக்குகள் 2030-ம் ஆண்டு காலக்கெடுவுடன் ஒத்துப்போகின்றன. 2030-ம் ஆண்டுக்குள், 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைச் சேர்க்க இலக்கு வைத்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதை இந்திய ரயில்வே இலக்காகக் கொண்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் மெட்ரிக் டன் பச்சை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்காகும். இந்த இலக்குகள் லட்சியமாகத் தோன்றலாம், ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சாதனைகள் அவற்றை அடைவோம் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா பத்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்தக் காலகட்டத்தில், நமது சூரிய ஆற்றல் உற்பத்தி திறனை 32 மடங்கு அதிகரித்துள்ளோம். இன்று, உலகின் மூன்றாவது பெரிய சூரிய சக்தி உற்பத்தி நாடாக பாரதம் உள்ளது. நமது புதைபடிவ எரிபொருள் அல்லாத ஆற்றல் திறன் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை முன்கூட்டியே அடைந்த முதல் ஜி20 நாடு இந்தியா. இந்தியா தனது இலக்குகளை முன்கூட்டியே அடைவதற்கான ஒரு எடுத்துக்காட்டு எத்தனால் கலத்தல். இந்தியா தற்போது 19 சதவீத எத்தனாலை கலக்கிறது, இது அந்நிய செலாவணி சேமிப்பு, விவசாயிகளுக்கு கணிசமான வருவாய் ஈட்டுதல் மற்றும் கரியமில வாயு உமிழ்வை கணிசமாகக் குறைப்பதற்கு வழிவகுத்தது. அக்டோபர் 2025 க்கு முன் 20 சதவீத எத்தனால் ஆணையை அடைய நாங்கள் பாதையில் இருக்கிறோம். இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில் விரைவான வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. நம்மிடம் 500 மில்லியன் மெட்ரிக் டன் நிலையான மூலப்பொருள் திறன் உள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி நிறுவப்பட்டது மற்றும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 28 நாடுகளும் 12 சர்வதேச அமைப்புகளும் இணைகின்றன. இந்த முயற்சி கழிவுகளை செல்வமாக மாற்றுகிறது மற்றும் சிறந்த மையங்களை நிறுவுகிறது.

நண்பர்களே,

இந்தியா அதன் ஹைட்ரோகார்பன் வளங்களின் திறனை முழுமையாக ஆராய தொடர்ந்து சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது. முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவான விரிவாக்கம் காரணமாக, நமது எரிவாயு துறை விரிவடைந்து வருகிறது. இது நமது எரிசக்தி கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரித்துள்ளது. தற்போது, ​​பாரத் நான்காவது பெரிய சுத்திகரிப்பு மையமாக உள்ளது மற்றும் அதன் சுத்திகரிப்பு திறனை 20 சதவீதம் அதிகரிக்க செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

நமது வண்டல் படுகைகள் ஏராளமான ஹைட்ரோகார்பன் வளங்களைக் கொண்டுள்ளன. பல ஏற்கனவே அடையாளம் காணப்பட்டாலும், பல ஆராயப்படாமல் உள்ளன. இந்தியாவின் மேல்நிலைத் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசு திறந்த ஏக்கர் உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது பிரத்தியேக பொருளாதார மண்டலத்தைத் திறப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒற்றைச் சாளர அனுமதி முறையை நிறுவுவதாக இருந்தாலும் சரி, அரசு இந்தத் துறைக்கு விரிவான ஆதரவை வழங்கியுள்ளது. எண்ணெய் வயல்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்களைத் தொடர்ந்து, பங்குதாரர்கள் இப்போது கொள்கை நிலைத்தன்மை, நீட்டிக்கப்பட்ட குத்தகைகள் மற்றும் மேம்பட்ட நிதி விதிமுறைகளால் பயனடைகிறார்கள். அரசின் இந்த சீர்திருத்தங்கள் கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் ஆய்வு மற்றும் உற்பத்தியை எளிதாக்கும், அத்துடன் பெட்ரோலிய இருப்புக்களை பராமரிக்கும்.

நண்பர்களே,

இந்தியாவில் ஏராளமான கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவடையும் குழாய் உள்கட்டமைப்பு காரணமாக, இயற்கை எரிவாயு விநியோகம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, வரும் ஆண்டுகளில் இயற்கை எரிவாயு பயன்பாடும் வளர்ச்சியடையும், இது இந்தத் துறையில் உங்களுக்கு ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும்.

நண்பர்களே,

நண்பர்களே,

புதுமை மற்றும் உற்பத்தி இரண்டிற்கும் மகத்தான வாய்ப்புகள் உள்ளன.

பேட்டரி மற்றும் சேமிப்பு திறன் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இவ்வளவு பெரிய நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய, பேட்டரி உற்பத்தி மற்றும் சேமிப்பு திறனில் நாம் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும். எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பசுமை ஆற்றலை ஆதரிப்பதற்கான பல அறிவிப்புகள் உள்ளன.

நண்பர்களே,

இந்தியாவின் எரிசக்தித் துறையை வலுப்படுத்த, மக்களின் சக்தியால் அதை மேம்படுத்துகிறோம். சாதாரண குடும்பங்கள் மற்றும் விவசாயிகளை எரிசக்தி வழங்குநர்களாக மாற்றியுள்ளோம். கடந்த ஆண்டு, நாங்கள் பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தை தொடங்கினோம். இந்தத் திட்டத்தின் நோக்கம் வெறும் எரிசக்தி உற்பத்திக்கு அப்பாற்பட்டது. இது சூரிய சக்தி துறையில் புதிய திறன்களை வளர்த்து, புதிய சேவை சூழலை உருவாக்கி, உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது.

நண்பர்களே,

இந்தியா நமது வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் நமது இயற்கையை வளப்படுத்தும் எரிசக்தி தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. இந்த எரிசக்தி வாரம் இந்தத் திசையில் உறுதியான பாதைகளுக்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியாவில் உருவாகும் ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் அனைவரும் ஆராய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

நன்றி.

***

(Release ID: 2101607)
TS/PKV/RR/KR