பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அந்தக் குழு, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் கூடுதல் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக 2017-18ம் ஆண்டில் மொத்தம் ரூ. 660 கோடி மதிப்புக்கு கடன்பத்திரங்களை வெளியிட வகை செய்யும் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இவ்வாறு கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் வருவாயைத் 12.4.2016ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் தேசிய நீர்வழிகள் சட்டத்தின் (2016) கீழ் தேசிய நீர்வழித் திட்டங்களின் மேம்பாடு, பராமரிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும். கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் நிதி கட்டுமானத்துக்கான நிதியாக மூலதனச் செலவுக்காகத் தனியாகப் பயன்படுத்தப்படும்.
நடைமுறைகள்:
குறிப்பிட்ட சில நீர்வழிப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தேவைப்படும் முதலீடு 2017-18ம் ஆண்டில் மொத்தம் ரூ. 2412.50 கோடியாக இருக்கும். இதன்கீழ் நீர்வழி மேம்பாட்டுத் திட்டத்திற்கு (JMVP) உலக வங்கி 12.4.2017ம் தேதி 37.50 கோடி டாலரை அனுமதித்துள்ளது. இத்திட்டத்திற்கான மொத்தம் ரூ. 1715 கோடியில் உலக வங்கி 2017-18ம் ஆண்டில் ரூ. 857.50 கோடியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையகத்திற்கு 2017-18ம் ஆண்டில் ரூ. 2412.50 கோடி தேவைப்படும். 2016-17ம் ஆண்டில் மூலதனச் சொத்துகளை உருவாக்குவதற்காக ஆணையகத்துக்கு செலவுக்காக ரூ. . 296.60 கோடி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்காகக் கடன் பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன.
கூடுதல் நிதி ஆதாரத்தில் அசல் மற்றும் வட்டியான மொத்தம் ரூ. 600 கோடியை இந்திய அரசு கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் மானியக் கோரிக்கையில் ஒதுக்கீடு செய்யும். இந்த வட்டி ஆண்டுக்கு இரு முறை செலுத்தப்படும். கடன் தவணைக் காலம் நிறைவடைந்தபின் அசல் முழுதுமாகத் திருப்பிச் செலுத்தப்படும்.
இப்பணிகளை முன்னணி மேலாண் நிறுவனங்கள், இந்தியப் பங்கு மற்றும் பரிமாற்ற வாரியத்தின் (SEBI) ஒருங்கிணைப்புடன் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் செயல்படுத்தும். நிதி இரு பகுதிகளாக வெளியிடப்படும். 2017-18ம் ஆண்டு இறுதிக் காலாண்டில் குறிப்பாக கடைசி இரு மாதங்களில் கடன் பெறுவது தவிர்க்கப்படும்.
பின்னணி:
தேசிய நீர்வழிச் சட்டத்தின் (2016) உருவாக்கப்பட்ட 106 நீர்வழிகளின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் மொத்த நிதி போதுமானதாக இல்லை. மொத்த திட்ட மதிப்பான ரூ. 1000 கோடியில் 2016-17ம் ஆண்டில் ரூ. 340 கோடி திரட்டப்பட்டது. எனவே, கூடுதலாக ரூ. 660 கோடி நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அதற்காக நிதி அனுமதியைப் பெற மறு சீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் தனது 2016-17ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:
“கட்டுமானத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையகம் (NHAI), மறுகட்டமைப்பு நிதிக் கழகம் (RFC), ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (REG), தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD), இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையம் (IREDA) இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (IWAI) ஆகியவை மூலமும் கடன் பத்திரங்கள் மூலமும் மொத்தம் ரூ. 31,300 கோடியைத் திரட்ட அனுமதிக்கப்படும்.
இந்த அறிவிப்பின்படி கட்டுமானத்துக்காக 2016-17ம் ஆண்டில் மட்டும் ரூ. 1000 கோடிக்கு கடன்பத்திரங்களை வெளியிட இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது முதல் முறை என்பதால், மின் ஏலம் மூலம் (e-bidding) 1.3.2017ம் தேதி மொத்தம் ரூ. 340 கோடி திரட்டப்பட்டது. இது 2016-17ம் ஆண்டில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் மேம்பாட்டுக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் பங்குகள் மூலம் கிடைக்கும் coupon rate எனப்படும் நிலையான வருவாயில் 7.9 சதவீதம் என்ற விகிதத்தில் திரட்டப்பட்டது.