பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய அரசுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே விஞ்ஞான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்த புதுப்பிப்பு 2015 மே 17 முதல் 2020 ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கானது. ஆராய்ச்சி மற்றும் புதுமை படைத்தலை சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உத்வேகம் அளிக்கும் கருவிகளாக பயன்படுத்துவதில் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட உறுதிபாட்டை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர் நாடுகளுக்கும் இடையே பொது அக்கறையுள்ள விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது இந்த உடன்பாட்டின் நோக்கமாகும். சமத்துவம், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல், நிதி உள்ளிட்ட ஆதாரங்களை இணைந்து முதலீடு செய்வது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உடன்பாடு செயல்படும். இந்த ஒத்துழைப்புச் செயல்பாடுகளில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் பரிவர்த்தனை, உயர் ஆராய்ச்சி வசதிகளைப் பகிர்ந்துக் கொள்ளுதல், கூட்டுக் கருத்தரங்குகள் கருத்துக் கோவைகள் பயிலரங்குகள் நடத்துதல், அறிவியல் தொழில்நுட்பம் புதுமைப் படைப்புக் கொள்கை சார்ந்த தகவல்களை பகிர்ந்துக் கொள்ளுதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியன அடங்கும்.
மத்திய அரசின் விஞ்ஞானத் தொழில்நுட்பத் துறையும் ஐரோப்பிய ஆணையத்தின் பொது ஆராய்ச்சி புதுமைப் படைப்பு இயக்ககமும் இந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும் முகமைகளாக இருந்து விஞ்ஞான தொழில்நுட்பத்திற்கான கூட்டு நெறிப்படுத்தும் குழு கூட்டங்கள் மூலமாக உடன்பாட்டு அமலாக்கத்தை மேற்பார்வையிடும்.
பின்னணி:
இந்த ஒப்பந்தம் முதலில் 2001 நவம்பரில் கையெழுத்திடப்பட்டது. இது 2015 மே வரை அமலில் இருந்தது. இந்த ஒப்பந்தம் இந்திய தூதரகத்திற்கும் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்சல்ஸ், ஐரோப்பிய யூனியனுக்கும் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ்-ல் உள்ள ஐரோப்பிய யூனியன் பொதுச் செயலகத்திற்கும் இடையே 2016 மார்ச் மாதம் தூதரக கடிதங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டது.