Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை

இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை


மேன்மை தங்கிய பிரதமர் டாக்டர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம், வணக்கம்!

மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் மொரீஷியஸ் இடையேயான உறவுகள் இந்தியப் பெருங்கடலால் தொடர்புடையவை மட்டுமல்ல, நமது பகிரப்பட்ட கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளன. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான பயணத்தில் நாங்கள் பங்குதாரர்கள். இயற்கைப் பேரிடராக இருந்தாலும் சரி, கோவிட் பெருந்தொற்றாக இருந்தாலும் சரி, நாம் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வந்துள்ளோம். பாதுகாப்பு அல்லது கல்வி, சுகாதாரம் அல்லது விண்வெளி என எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் நாம் தோளோடு தோள் சேர்ந்து முன்னேறுகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நமது உறவுகளில் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளோம். வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் புதிய சாதனைகளை நாம் படைத்துள்ளோம்.

மொரீஷியசில் விரைவான போக்குவரத்திற்கு மெட்ரோ எக்ஸ்பிரஸ்,

நீதித்துறைக்கு உச்ச நீதிமன்ற கட்டிடம், வசதியான வாழ்க்கைக்காக சமூக வீட்டுவசதி, நல்ல ஆரோக்கியத்திற்காக காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த யுபிஐ மற்றும் ரூபே அட்டை; குறைந்த செலவில் தரமான மருந்துகளுக்காக மக்கள் மருந்தக மையங்கள்.

இதுபோன்ற பல மக்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகளை நாங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றியுள்ளோம். அகலேகாவில் அமைக்கப்பட்ட மேம்பட்ட போக்குவரத்து வசதியானதூ சிடோ சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை விரைவாக வழங்க உதவியது. இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. இருபது சமூக மேம்பாட்டுத் திட்டங்களுடன்  கேப் மால்ஹியூரக்ஸ் பகுதி சுகாதார மையத்தை நாங்கள் திறந்து வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் பிரதமருடன் சேர்ந்து “அடல் பிஹாரி வாஜ்பாய் பொதுச் சேவை மற்றும் புத்தாக்க நிறுவனத்தை” தொடங்கி வைத்து மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் கௌரவத்தை நான் பெறுவேன்.

நண்பர்களே,

இன்று, பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமும், நானும் இந்தியா-மொரீஷியஸ் கூட்டுறவை ‘மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மை’யாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். மொரீஷியஸில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட இந்தியா ஒத்துழைக்கும் என்று முடிவு செய்துள்ளோம். இது ஜனநாயக அன்னையிடமிருந்து மொரீஷியஸுக்கு நாம் அளிக்கும் பரிசாக இருக்கும். மொரீஷியஸில் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் இரண்டாம் கட்டத்தில், 500 மில்லியன் மொரீஷியஸ் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொரீஷியஸைச் சேர்ந்த 500 அரசு ஊழியர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவார்கள். கூடுதலாக, உள்ளூர் நாணயத்தில் பரஸ்பர வர்த்தகத்தை நடத்துவதற்கான ஒப்பந்தத்தை நாங்கள் எட்டியுள்ளோம்.

நண்பர்களே,

பாதுகாப்பு ஒத்துழைப்பும், கடல்சார் பாதுகாப்பும் நமது ராஜாங்கக் கூட்டாண்மையின் முக்கிய தூண்கள் என்பதை பிரதமரும், நானும் ஒப்புக்கொள்கிறோம். சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் நமது பொதுவான முன்னுரிமையாகும். மொரீஷியஸின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்புக்கு எங்களது முழு ஆதரவையும் வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த விஷயத்தில், கடலோரக் காவல்படையின் தேவைகளை பூர்த்தி செய்ய சாத்தியமான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்வோம்.

மொரீஷியஸில் காவல் துறை அகாடமி மற்றும் தேசிய கடல்சார் தகவல் பகிர்வு மையம் ஆகியவற்றை அமைப்பதற்கும் இந்தியா உதவி செய்யும். கப்பல் போக்குவரத்து, நீலப் பொருளாதாரம் மற்றும் நீரியல் அமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்.

சாகோஸ் விவகாரத்தில் மொரீஷியஸின் இறையாண்மையை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இந்தியப் பெருங்கடல் சங்கம் மற்றும் இந்தியப் பெருங்கடல் மாநாடு போன்ற அமைப்புகள் மூலம் எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்.

நண்பர்களே,

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் நமது கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன. மின்னணு சுகாதாரம், ஆயுஷ் மையம், பள்ளிக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படும். மனித சமுதாய வளர்ச்சிக்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிபிஐ அதாவது மின்னணு பொது உள்கட்டமைப்பை பயன்படுத்த நாம் இணைந்து பணியாற்றுவோம்.

 

 இந்தியாவில் சார் தாம் யாத்திரை மற்றும் ராமாயணப் பாதை சுற்றுலாவுக்கு மொரீஷியஸ் மக்களுக்கு வசதிகள் செய்து தரப்படும். கிர்மிடியா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நண்பர்களே,

 

உலகின் தெற்குப் பகுதியாக இருந்தாலும், இந்தியப் பெருங்கடலாக இருந்தாலும் அல்லது ஆப்பிரிக்கக் கண்டமாக இருந்தாலும், மொரீஷியஸ் நமது முக்கிய கூட்டாளியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி” என்பதைக் குறிக்கும் சாகர் தொலைநோக்கு பார்வைக்கு மொரீஷியஸில்தான் அஸ்திவாரம் போடப்பட்டது. இந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான சாகர் தொலைநோக்குத் திட்டத்துடன் நாங்கள் முன்னேறி செல்கிறோம்.

இன்று, இதன் அடிப்படையில், உலகளாவிய தெற்கிற்கான நமது தொலைநோக்கு சாகர் திட்டத்தையும் தாண்டி மகாசாகராக இருக்கும் என்று நான் கூற விரும்புகிறேன். அதாவது, “பிராந்தியங்களுக்கிடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்” என்பதாக இது இருக்கும். வளர்ச்சிக்கான வர்த்தகம், நீடித்த வளர்ச்சிக்கான திறன் மேம்பாடு, பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான பரஸ்பர பாதுகாப்பு ஆகிய கருத்துக்களை இது உள்ளடக்கியதாக இருக்கும். இதன் கீழ், தொழில்நுட்பப் பகிர்வு, சலுகைக் கடன் மற்றும் மானியங்கள் மூலம் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்.

மேன்மை தங்கியவரே,

இங்கு எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக உங்களுக்கும், மொரீஷியஸ் மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவுக்கு வருகை தருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். உங்களை  வரவேற்க நாங்கள் இந்தியாவில் ஆவலுடன் காத்திருப்போம்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

***

(Release ID: 2110746)
TS/IR/RR/KR