பிரதமர் திரு நரேந்திர மோடி மொரீஷியஸூக்கு 2025 மார்ச் 11 முதல் 12 வரை மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் போது, மொரீஷியஸ் பிரதமர் டாக்டர் நவீன் சந்திர ராம்கூலமும், திரு நரேந்திர மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான, ஆரோக்கியமான பேச்சு வார்த்தைகளை நடத்தினார்கள்
2025 மார்ச் 11 அன்று நடைபெற்ற இருதரப்பு கூட்டத்தின் போது, மொரீஷியஸும், இந்தியாவும் வரலாறு, மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், உறவு மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் பகிரப்பட்ட பிணைப்புகளைக் கருத்தில் கொண்டு, இணையற்ற சிறப்பான மற்றும் தனித்துவமான நட்புறவை அனுபவித்து வருவதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மக்களுக்கு இடையேயும், கலாச்சார பரிமாற்றங்களுக்கிடையேயும் நிலை நிறுத்தப்பட்ட மொரீஷியஸ் – இந்தியா உறவுகள், கடந்த பல பத்தாண்டுகளாக விரிவான ராஜீய அளவிலான கூட்டாண்மையாக வளர்ந்துள்ளது என்றும், இது இரு நாடுகளுக்கும், அவற்றின் மக்களுக்கும், பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கும் பலனளிக்கும் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மொரீஷியஸ் சுதந்திரம் அடைந்தது முதல் சமூக-பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா திகழ்வதை மொரீஷியஸ் பிரதமர் சுட்டிக் காட்டினார். அனைத்துத் தருணங்களிலும் மொரீஷியஸுக்கு இந்தியா உறுதியான ஆதரவை அளித்து வந்துள்ளது என்று குறிப்பிட்ட மொரீஷியஸ் பிரதமர், எதிர்கால வளர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தனது வலுவான கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
2015 மார்ச் மாதத்தில், தான் மொரீஷியஸுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்ந்த இந்தியப் பிரதமர், இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற இந்தியாவின் தொலைநோக்குத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். தொலைநோக்கு சாகர் திட்டத்தை நனவாக்குவதில் மொரீஷியஸ் முக்கிய பங்குதாரராக உள்ளது என்று கூறியதுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்த மொரீஷியஸ் அரசு அளித்து வரும் விரிவான ஆதரவையும் பாராட்டினார். இந்தியாவின் தொலைநோக்கு சாகர், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறை மற்றும் உலகளாவிய தென் பகுதி நாடுகளுக்கான அதன் உறுதிப்பாடு ஆகியவற்றின் சந்திப்பு முனையில் மொரீஷியஸ் உள்ளது என்று குறிப்பிட்ட அவர், இரு நாடுகளின் பொதுவான நலனுக்காக இந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் மொரீஷியஸ் ஆற்றிய முக்கிய பங்கு குறித்தும் குறிப்பிட்டார்.
இருதரப்பு உறவுகளின் வலிமை மற்றும் தனித்துவத்தை எடுத்துரைத்த இரு தலைவர்களும், இந்த உறவுக்கு மேலும் வழிகாட்டுதலை வழங்கி, அதை மேம்பட்ட உத்திசார் கூட்டாண்மையாக மாற்ற இதுவே சரியான தருணம் என்று ஒப்புக் கொண்டனர்.
அரசியல் பரிமாற்றங்கள் மற்றும்
இருதரப்பு உறவுகள் பல்வேறு நிலைகளில் உயர்ந்த அளவில் நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வைக் கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வழக்கமான உயர்மட்ட பரிமாற்றங்கள் மற்றும் பயணங்கள் மூலம் உறுதுணையாக இருப்பதாகவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியாவின் ஜி-20 தலைமையின் கீழ் விருந்தினர் நாடாக மொரீஷியஸ் பங்கேற்றது என்பது அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்ட இரு தலைவர்களும், இந்த ஈடுபாடுகளைத் தொடர்வதற்கான தங்களது கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
திறன் மேம்பாட்டுத் துறை உட்பட இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையே நடைபெற்று வரும் விவாதங்களை வரவேற்ற இரு தலைவர்களும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மொரீஷியஸ் சுதந்திரம் அடைந்தது முதல் அந்நாட்டின் வளர்ச்சிக்கான முன்னணி கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்றும், அதன் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்தியா-மொரீஷியஸ் மெட்ரோ விரைவுத் திட்டம், புதிய உச்சநீதிமன்ற கட்டிடம், புதிய காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, 956 சமூக வீட்டுவசதி அலகுகள் மற்றும் கல்வி தொடு திரை மடிக் கணினிகள் போன்ற பல்வேறு உயர்மட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் இந்தியா அளிக்கும் ஆதரவை எடுத்துரைத்த மொரீஷியஸ் பிரதமர், பல்வேறு துறைகளில் மொரீஷியஸ் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே விளங்கும் இந்திய ஆதரவு திட்டங்களுக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகளாக மொரீஷியஸின் அனைத்து பிரிவினருக்கும் இந்தத் திட்டங்கள் பலனளித்துள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
அகலேகாவில் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய ஓடுபாதை மற்றும் படகு குழாம் ஆகியவற்றின் பலன்கள் குறித்தும் சிடோ புயலுக்குப் பிறகு அகலேகாவில் உள்ள மொரீஷியஸ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அவற்றின் முக்கிய பங்களிப்பையும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மறுவாழ்விற்காக மொரீஷியஸ் அரசின் முயற்சிகளுக்கு உதவுவதற்காக போக்குவரத்து விமானங்கள் மற்றும் கப்பல்களை ஈடுபடுத்துவது உட்பட உரிய நேரத்தில் மேற்கொண்ட மற்றும் விரைவான உதவிக்காக இந்திய அரசுக்கு மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இதன் மூலம் தேவைப்படும் காலங்களில் மொரீஷியஸுக்கு ‘முதலில் உதவுபவர்‘ என்ற இந்தியாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தினார். அகலேகா நகர மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காக அதன் வளர்ச்சிக்கு இந்தியப் பிரதமரின் உதவியை மொரீஷியஸ் பிரதமர் வரவேற்றார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு, தடய அறிவியல் ஆய்வகம், தேசிய ஆவணக் காப்பகம், நூலகம், குடிமைப் பணிக் கல்லூரி போன்ற தற்போது நடைபெற்று வரும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும், மொரீஷியஸ் முழுவதும் பரவியுள்ள உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் குறிப்பிட்டதுடன், அவற்றை உரிய காலத்தில் முடிப்பதற்கு தங்களது முழு ஆதரவையும் மீண்டும் தெரிவித்தனர்.
இந்தியாவின் உதவியோடு மேற்கொள்ளப்படும் மக்களை மையமாகக் கொண்ட மேம்பாட்டு திட்டங்கள் மொரீஷியஸின் நட்பு மக்களுக்கு உறுதியான பலன்களை அளித்துள்ளன. மொரீஷியஸின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்துள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு, இரு தலைவர்களும் கீழ் வரும் அம்சங்களுக்கு ஒப்புக் கொண்டனர்:
1. 100-மின்சார பேருந்துகளை சரியான நேரத்தில் வழங்குவதற்கும் அதனுடன் தொடர்புடைய மின்னேற்றி நிலைய உள்கட்டமைப்பிற்கும் பணியாற்றுதல்;
2. உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் இரண்டாம் கட்டத்தைச் செயல்படுத்துதல்;
3. மொரீஷியஸில் 100 கிலோ மீட்டர் தொலைவிலான தண்ணீர்க் குழாய்களை மாற்றியமைக்கும் திட்டத்தைத் தொடங்குதல். இரு தரப்புக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட முதலாவது இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தின் கீழ் அமல்படுத்துதல்.
4. மொரீஷியஸ் அரசு அடையாளம் காணவுள்ள இடத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான விவாதங்களை இறுதி செய்தல் மற்றும் இந்தியாவின் மானிய உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு புரிந்துணர்வை இறுதி செய்தல்.
5. கங்கா தலாவ் ஆன்மீக தளத்தை மறுமேம்பாடு செய்வது குறித்த விவாதத்தை இறுதி செய்தல் மற்றும் இந்தியாவின் மானிய உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு புரிந்துணர்வை நிறைவு செய்தல்;
6. மொரீஷியஸ் அரசின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வளர்ச்சி ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை ஆராய்தல்.
மனிதவள மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு
மொரீஷியஸின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் தேவைகளுக்கு இந்தியா எப்போதும் பங்களிப்பு செய்து வருவதையும், மொரீஷியஸின் மனிதவள மேம்பாட்டுத் தேவைகளுக்கு அதன் ஆக்கப்பூர்வமான பங்களிப்பையும் குறிப்பிட்டு, இரு தலைவர்களும் பின்வருவனவற்றை மேற்கொள்ள உறுதியளித்தனர்:
1. மத்திய அரசின் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கட்டமைப்பு மற்றும் பயிற்சித் திட்டங்களின் கீழ் தற்போது நடைபெற்று வரும் திறன் மேம்பாட்டு முயற்சிகளைத் தொடர்தல்; இந்தியாவில் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் மூலம் மொரீஷியஸின் 500 அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு வடிவமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்துதல்;
2. குடிமைப்பணி கல்லூரி, தடய அறிவியல் ஆய்வகம், தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் நூலகம் ஆகியவற்றுக்கு இடையே இந்தியாவில் உள்ள தொடர்புடைய முன்னணி நிறுவனங்களுடன் நிறுவன தொடர்புகளை ஏற்படுத்தி, சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
3. மொரீஷியஸ் அரசின் செயல்பாட்டுத் தேவைகளுக்கு உதவ ஆலோசகர்கள் மற்றும்/அல்லது தொழில்நுட்ப நிபுணர்களை தொடர்ந்து பணி அமர்த்துவதற்கு ஆதரவளித்தல்;
4. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுஷ்மா ஸ்வராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தை நிறுவனமயமாக்குவதன் மூலம் மொரீஷியஸ் தூதர்களுக்கு தற்போதுள்ள பயிற்சி ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வலுப்படுத்துதல்.
5. மொரீஷியஸின் தேவைகளுக்கு ஏற்ப சிவில், காவல் துறை, நாடாளுமன்றம், சுங்கம், சட்டம், சுகாதாரம் மற்றும் பிற களங்களில் மொரீஷியஸ் அதிகாரிகளுக்கான கூடுதல் பயிற்சித் திட்டங்களை ஆராய்தல்.
விண்வெளி மற்றும் பருவநிலை மாற்றம்
தற்போது நடைபெற்று வரும் விண்வெளி ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பெரிதும் பயனளித்துள்ளது என்று கூறிய இரு தலைவர்களும், மொரீஷியஸுடன் இந்தியா கொண்டுள்ள சிறப்பு உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை இது பிரதிபலிக்கிறது என்றும் ஒப்புக் கொண்டனர். மொரீஷியஸுக்காக செயற்கைக்கோள் ஒன்றைக் கூட்டாக உருவாக்குவதற்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவுக்கு மொரீஷியஸ் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, மொரீஷியஸின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா அளித்து வரும் அசைக்க முடியாத ஆதரவுக்கு இந்த ஒத்துழைப்பு ஒரு சான்று என்றும் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் கீழ்கண்டவற்றுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்:
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில், மொரீஷியஸ் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுக்கு தேவையான பயிற்சி உட்பட இந்தியா-மொரீஷியஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக உருவாக்கி ஏவுவதற்கு இணைந்து பணியாற்றுதல்.
2. பல்வேறு தற்காலிக அளவுகளில் வானிலை மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு அமைப்பு, அலை சவாரி மிதவைகள் மற்றும் மொரீஷியஸில் பல அபாய தடுப்பு அவசர அமைப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு ஆதரவளித்து, பேரிடர் தயார்நிலை மற்றும் உதவக் கூடிய அமைப்பை உருவாக்க உதவுதல்;
3. மொரீஷியஸில் இஸ்ரோ தொலை அளவியல் மற்றும் கண்காணிப்பு மையம் குறித்து இஸ்ரோ மற்றும் மொரீஷியஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில் இடையே தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பைப் புதுப்பித்தல்.
4. மொரீஷியஸின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விண்வெளி மற்றும் பருவநிலை மாற்றத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்தல் மற்றும் அது தொடர்பான திறன் மேம்பாட்டு ஆதரவு.
5. குவாட் அமைப்பின் கீழ் தீவிர வானிலை நிகழ்வுகளை மொரீஷியஸ் கண்காணிக்கவும், பருவநிலை தாக்கத்தை திறம்பட ஆய்வு செய்யவும் உதவும் வகையில் புவி கண்காணிப்பு செயலி மற்றும் கணினி கட்டமைப்பைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேம்பாட்டு கூட்டாண்மை திட்டத்திற்கான இந்திய அரசின் முன்மொழிவை தொடர்ந்து செயல்படுத்துதல். இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும்.
சுகாதாரம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு
சுகாதாரம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இந்தியாவின் ஆதரவை சுட்டிக் காட்டிய இரு தலைவர்களும், மொரீஷியஸ் மக்களுக்கு தரமான, குறைந்த செலவிலான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவைப் பலன்களை வழங்குவதில் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். மொரீஷியஸில் இந்தியா முதலாவது மக்கள் மருந்தக மையங்களைத் தொடங்கியதற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்ததுடன், இந்த முன்முயற்சியை மொரீஷியஸின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் ஒப்புக் கொண்டனர்.
போதைப் பழக்கம் மற்றும் அது தொடர்பான சமூகப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதால் மொரீஷியஸ் எதிர்கொண்டுள்ள சவால்களைக் குறிப்பிட்ட தலைவர்கள், போதை மருந்துக்கு அடிமையாதல் மற்றும் மறுவாழ்வு குறித்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் இணைந்து பணியாற்றவும், இந்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் நிபுணத்துவம் மற்றும் ஆதரவுடன் தேசிய மருந்துக் கொள்கை, கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகமையுடன் இணைந்து பணியாற்றவும் ஒப்புக் கொண்டனர்.
சுகாதாரத் துறையில் தற்போது நடைபெற்று வரும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மொரீஷியஸில் டிஜிட்டல் சுகாதார அலுவலக முறையை உரிய நேரத்தில் அமல்படுத்த நெருக்கமாக பணியாற்றவும், இந்தியாவில் இருந்து ஒரு நிபுணரை அனுப்பவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மொரீஷியஸில் சுகாதார சேவைகளை மின்னணுமயமாக்கும் மொரீஷியஸ் அரசின் முயற்சிக்கு உதவ இந்தியாவிலிருந்து ஒரு நிபுணரை அனுப்பவும் ஒப்புக் கொண்டனர்.
ஆயுஷ் துறையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் தலைவர்கள் குறிப்பிட்டனர். மொரீஷியஸில் ஆயுஷ் சிறப்பு மையம் அமைப்பதற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுக்கு மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்ததுடன், இந்த லட்சிய திட்டத்தை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் மொரீஷியஸ் நோயாளிகளுக்கு இந்தியா வழங்கிய அனைத்து வசதிகளுக்கும் இந்திய பிரதமருக்கு மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் (என்.சி.இ.ஆர்.டி) மற்றும் மொரீஷியஸ் உயர்கல்வி அமைச்சகம் இடையே நடைபெற்று வரும் விவாதங்களை தலைவர்கள் வரவேற்றனர். இதுபோன்ற ஒத்துழைப்பு முயற்சிகள் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், பள்ளிக் கல்வித் துறையில் நிறுவன தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும் என்று ஒப்புக் கொண்டனர். தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உத்திகளை அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை தயாரிப்பது மற்றும் மொரீஷியஸில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குநரகத்தை உருவாக்குவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இந்தியா- மொரீஷியஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு
ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையில் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டுடனான இந்தியாவின் முதலாவது வர்த்தக ஒப்பந்தம் இருநாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்பதை இவ்விருநாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மொரீஷியஸ், இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மொரீஷியஸ் நாட்டில் உள்ள வர்த்தக வாய்ப்புகள், கலாச்சார தொடர்புகள் ஆகியவை ஆப்பிரிக்கக் கண்டத்தின் ஒரு அங்கமாக அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அந்நாட்டு பிரதமர், இந்திய நிறுவனங்களும், வர்த்தகர்களும் மொரீஷியசில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகளை விரிவுபடுத்துவதில் உறுதியான நிலைப்பாடு குறித்து தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து உயர்நிலைக்குழுவின் ஆலோசனை கூட்டத்தின் இரண்டாவது அமர்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்தல்.
உள்நாட்டு பணப்பரிவர்த்தனைகளின் அடிப்படையில் வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்துதல். இந்திய ரூபாய், மொரீஷியஸ் ரூபாய் ஆகியவற்றின் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதன் மூலம் மத்திய வங்கிகள், உள்ளூர் நாணய தீர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் நிறைவடைந்த பிறகு, சர்வதேச தரத்திற்கு ஏற்ப இரட்டை வரிவிதிப்பு முறையை தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதற்கான நெறிமுறைகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
நீண்ட கால,நீடித்த பொருளாதார வளர்ச்சிக்காக மொரீஷியஸ் தனது பொருளாதார நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கும் வகையில், கடல்சார் பொருளாதாரம், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிசார் தொழில்நுட்பம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் முடிவு செய்யப்படும்.
டிஜிட்டல் ஒத்துழைப்பு
மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் இந்தியாவின் சாதனைகள், நிர்வாகத்திறன், சேவை வழங்குதல் அவற்றின் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மொரீஷியஸ் பிரதமர், பல்வேறு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார். இதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, , மொரீஷியஸ் நாட்டின் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பின்வரும் நோக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதென இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதன்படி, மகாத்மா காந்தி நிறுவனத்தில் மின்னணு நீதித்துறை முறையை அமல்படுத்தவும், ஆவணக் காப்பகங்கள் மற்றும் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் அதற்கான திறன் மேம்பாடு உள்ளிட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்; மற்றும்
மொரீஷியஸின் தேவைகளுக்கு ஏற்ப பிரதமரின் விரைவு சக்தி சரக்குப் போக்குவரத்திற்கான டிஜிட்டல் தளம் போன்ற இந்தியா உருவாக்கிய வெற்றிகரமான டிஜிட்டல் அமைப்புகளை செயல்படுத்துவதை ஆய்வு செய்தல்.
பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு
ராணுவம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு உறவுகளில் முக்கிய அங்கமாக உள்ளது என்றும், இந்தத் துறையில் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் பெரிதும் பயனளித்துள்ளது என்றும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான, சூழலை உறுதி செய்வதில் இந்தியாவும் மொரீஷியஸும் உறுதியுடன் உள்ளது என்றும், இந்த மண்டலத்தில் இயற்கையான நட்புறவை இருநாடுகளும் கொண்டுள்ளன என்றும் ஒப்புக் கொண்டனர்.
மொரீஷியசில் பரந்த பிரத்யேக பொருளாதார மண்டலத்தைப் பாதுகாப்பதற்கு, பாதுகாப்பு, கடல்சார் சொத்துக்களை வழங்குதல், கப்பல், விமான சேவைகளை வழங்குதல்,கூட்டு கடல்சார் கண்காணிப்பு, ரோந்து, இருதரப்பு பயிற்சிகள், தகவல் பகிர்வு ஆகியவற்றின் மூலம் மொரீஷியஸுக்கு அளித்து வரும் வலுவான ஆதரவுக்காக இந்தியாவுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
விக்டரி, வேலியன்ட், பராகுடா ஆகிய கடலோரக் காவல்படை கப்பல்களை மானிய உதவி அடிப்படையில் புதுப்பிக்க இந்தியா தொடர்ந்து அளித்து வரும் உதவிக்கு மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்து கொண்டார். மொரீஷியஸ் நாடானது இந்தியாவுக்கான கடல்சார் பாதுகாப்பில் நட்பு நாடாக உள்ளது என்றும், இந்தியாவின் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் முக்கியமான பங்குதாரராக உள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில், மொரீஷியஸின் பாதுகாப்புத் தேவைகளை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொள்ள தங்களது கூட்டு விருப்பத்தை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இதில்,மொரீஷியஸின் தேவைகள், முன்னுரிமைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு, கடல்சார் உடைமைகள், தளவாடங்களை வழங்குவதில் ஒத்துழைப்பைத் தொடரவும்.
கூட்டு கடல்சார் கண்காணிப்பு, நீர்நிலை குறித்த ஆய்வுகளுக்கான கப்பல்கள், விமானங்களை பணியில் ஈடுபடுத்துவதை அதிகரிப்பதன் மூலம் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்;
மொரீஷியஸின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அகலேகாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான ஓடுபாதை, படகுத்துறை ஆகியவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துதல்.
கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்த தேசிய கடல்சார் தகவல் பகிர்வு மையம் அமைக்க உதவுதல்.
கடல்சார் செயல்பாடுகள், கடல்சார் பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் வழங்குவதன் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்; துறைமுக பாதுகாப்பு சூழல், துறைமுக அவசரநிலை மற்றும் மொரீஷியஸ் துறைமுக ஆணையத்திற்கான பாதுகாப்பு; மற்றும்
மொரீஷியஸ் காவல் படையின் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு
சாகோஸ் தீவுகள் தொடர்பாக மொரீஷியஸ், இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். சாகோஸ் பிரச்சினையில் மொரீஷியஸுக்கு இந்தியா உறுதியான ஆதரவை அளிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனிப்பட்ட ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்துகொண்டார்.
பிராந்திய மற்றும் பன்முக தன்மையுடன் கூடிய கட்டமைப்புகளின் கீழ், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான கூட்டமைப்பு, கொழும்பு பாதுகாப்பு மாநாடு, சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டமைப்பு, சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது என இரு தலைவர்களும் ஒப்புகொண்டனர். கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் நிறுவன ஆவணங்களில் அண்மையில் கையெழுத்திட்டதையும், 2025-26-ம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான கூட்டமைப்பில் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டதையும் அவர்கள் வரவேற்றனர். கடல்சார் பாதுகாப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
கலாச்சாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான பிணைப்பு
கலாச்சாரப் பாரம்பரியம், வரலாற்று பிணைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான அன்புறவு ஆகியவை மொரீஷியஸ்-இந்தியா இடையிலான நல்லுறவுக்கு உறுதுணையாக உள்ளது என்று குறிப்பிட்ட தலைவர்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.
இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் மூலம் சிறப்புப் பயிற்சி, நிறுவன ஆதரவு உட்பட, இந்தியாவிலிருந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளாகப் பாதுகாப்பதில் மகாத்மா காந்தி நிறுவனத்துக்கு உதவுவதல்;
இந்தியாவை அறிவோம் திட்டம், வேர்களை இணைத்தல், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினம், கல்வி உதவித்தொகை ஆகியவற்றின் மூலம் வெளிநாடுவாழ் இந்தியர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்துதல், கிர்மிதியாவின் பாரம்பரியம் தொடர்பான ஆராய்ச்சியில் ஒத்துழைத்தல், மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பை ஆவணப்படுத்துதல்,
சார்தாம் மற்றும் ராமாயண சுற்றுலா பாதைகள், இந்தியாவில் உள்ள பண்டைய மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்குச் செல்வதன் மூலம் சுற்றுலா, கலாச்சார பரிமாற்றங்களை மேம்படுத்துதல்.
மொரீஷியஸ், இந்தியா இடையே தொழிலாளர் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தொழிலாளர்களை நியமனம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த ஒத்துழைப்பு.
ஒட்டுமொத்த இருதரப்பு உறவுகள் குறித்த விரிவான விவாதங்கள் குறித்து திருப்தி தெரிவித்த தலைவர்கள், தங்களது சிறப்பான, நெருங்கிய இருதரப்பு கூட்டாண்மை குறிப்பிடத்தக்க உத்திசார் நிலையை அடைந்துள்ளது என்பதையும் ஒப்புக் கொண்டனர். வளர்ச்சிக்கான கூட்டு நடவடிக்கைகள், பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் மொரீஷியஸ்-இந்தியா இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது என்றும், இந்த மண்டலத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான தளத்தை அமைக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மொரீஷியஸின் வளர்ச்சிக்கான தேவைகளை பூர்த்தி செய்வதுடன், இந்த மண்டலத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நோக்கங்களுக்காக உத்திசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதலை தொடர்ந்து வழங்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மொரீஷியஸ் நாட்டின் 57-வது சுதந்திர தினம், மொரீஷியஸ் குடியரசின் 33-வது ஆண்டு விழா ஆகியவற்றைக் குறிக்கும் தேசிய தினக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதற்காக இந்தியப் பிரதமருக்கு மொரீஷியஸ் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மொரீஷியஸ் பிரதமரை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
***
(Release ID: 2110718)
TS/IR/RR/SV/AG/KR