பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, நவம்பர் 2015ல் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் குறித்து கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், பின்வரும் துறைகளில் இரு அரசுகளிடையே நல்ல நிர்வாகம் குறித்த நடைமுறைகள் பகிர்ந்து கொள்ளப்படும். பயனாளருக்கான வடிவமைப்பு, சேவைகள் துறையில் நிர்வாக நடைமுறைகளை குறைத்தல், அரசு நடைமுறைகளை மாற்றி அமைத்தல், ஊழியர்களின் திறன் வளர்த்தல், குறை தீர்ப்பு நடைமுறைகள், உள்ளாட்சி அமைப்புகள் சீர்திருத்தம், சமூக பாதுகாப்பு தொடர்பான சீர்திருத்தம், அரசுத் துறைகளில் நெறிமுறைகளை உருவாக்குதல், ஊழியர் நிர்வாகத்தில் அரசு மற்றும் தொழில்துறை இடையே ஒத்துழைப்பு, பொதுமக்களோடு உறவாட வழிமுறைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் டிஜிட்டல் நிர்வாகம்.
பொது நிர்வாகம் மற்றும் அரசு துறைகளில் இருந்து உருவாக்கப்படும் ஒரு கூட்டுக் குழு, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
மாறி வரும் பொது நிர்வாகச் சூழலில் பிரிட்டனில் உள்ள பொதுச் சேவைகள் துறை செயல்படும் முறைகளைப் பார்த்து, அதை இந்தியாவுக்கு ஏற்றவாறு மாற்றி, அதை செயல்படுத்தி, இந்தியாவில் பொதுச் சேவைகள் வழங்கு முறைகைளில் மாற்றங்கள் செய்து, வேவைகளை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவி செய்யும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இம்மாத இறுதியில் லண்டனில் நடைபெற உள்ளது.
பின்னணி :
குடிமக்களை மையமாகக் கொண்ட ஆன்லைன் சேவைகளை வழங்குவது சிறந்த பொது நிர்வாகத்தின் அடிப்படை. அது வெளிப்படைத் தன்மைக்கும், பொறுப்புக்கும் வழிவகுக்கும்.
பொதுமக்களுக்கு ஆன்லைன் சேவைகளை வழங்குவதில் பெரும் மாற்றங்களை செய்ய மத்திய அரசு உத்தேசித்துள்ளது. பொது நிர்வாகச் சீரமைப்பு, குறை தீர்ப்பு முறைகள், மின்னணு நிர்வாகம், டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களை, “குறைந்த அரசு தலையீடு, நிறைந்த நிர்வாகம்” என்ற லட்சியத்தின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மின்னணு நிர்வாகம் மூலமாக, மக்களுக்கு இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் வழங்குவதே இதன் நோக்கம்.
பொது நிர்வாகத்தில் சர்வதேச ஒத்துழைப்பை பெரும் நோக்கத்தில், மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் குறை தீர்ப்புத் துறை, இது வரை, சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தர வரிசையின் முன்னணியில் உள்ள பிரிட்டனுடன் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அந்த திசையை நோக்கிய நடவடிக்கையே.