இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான கருத்துக்களையும் யோசனைகளையும் கேட்க, கெய்சாய் டோயுகையின் (ஜப்பான் நிறுவன நிர்வாகிகள் சங்கம்) தலைவர் திரு. தகேஷி நினாமி தலைமையில் கெய்சாய் டோயுகை மற்றும் 20 பிற வணிக பிரதிநிதிகளின் உயர் அதிகாரம் கொண்ட குழுவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை 7 லோக் கல்யாண் மார்க்கில் சந்தித்தார்.
இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல், வேளாண்மை, கடல்சார் பொருட்கள், விண்வெளி, பாதுகாப்பு, காப்பீடு, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, அணுசக்தி மற்றும் எம்.எஸ்.எம்.இ கூட்டுமுயற்சி போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து இந்த விவாதம் நடைபெற்றது.
இந்திய-ஜப்பான் சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, வர்த்தகத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகளை விரைவுபடுத்தவும், வசதி செய்யவும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜப்பான் பிளஸ் முறையை அவர் எடுத்துரைத்தார். முதலீட்டாளர்களுக்கு எந்த தெளிவின்மையோ தயக்கமோ இருக்கக்கூடாது என்று அவர் மேலும் வலியுறுத்தினார். இந்தியாவின் ஆளுகை, கொள்கையால் இயக்கப்படுகிறது, மேலும் வெளிப்படையான மற்றும் கணிக்கக்கூடிய சூழலை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.
நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பிரதமர் பேசினார். புதிய விமான நிலையங்களை நிர்மாணித்தல் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறன்களை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பரந்த பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, செயற்கை நுண்ணறிவு சூழலில் நாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவுடன் கூட்டு சேர அவர்களை ஊக்குவித்தார்.
உயிரி எரிபொருளை மையமாகக் கொண்ட இயக்கத்தைத் தொடங்கியதன் மூலம், பசுமை எரிசக்தித் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதையும் பிரதமர் எடுத்துரைத்தார். குறிப்பாக, வேளாண் துறை, உயிரி எரிபொருள் ஒரு முக்கியமான மதிப்புக் கூட்டல் என்ற வகையில் பயனடையும் என்று அவர் கூறினார்.
காப்பீட்டுத் துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும், விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைகளில் அதிநவீன துறைகளில் எப்போதும் விரிவடைந்து வரும் வாய்ப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.
ஜப்பானின் மூத்த வர்த்தகத் தலைவர்களை உள்ளடக்கிய கெய்சாய் டோயுகாய் தூதுக்குழுவினர், இந்தியாவுக்கான தங்கள் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். மனிதவளம் மற்றும் திறன் மேம்பாட்டில் இந்தியா மற்றும் ஜப்பான் இடையே பரஸ்பர ஒத்துழைப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் தெரிவித்தனர். எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்ததுடன், வரும் ஆண்டுகளில் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை ஆழப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளனர்.
சன்டோரி ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் பிரதிநிதி இயக்குநர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு நினாமி தகேஷி, பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான செழிப்பான உறவுகளைப் பாராட்டினார். இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பானுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல் என்ற பிரதமர் திரு மோடியின் தொலைநோக்குப் பார்வையை அவர் வலியுறுத்தினார்.
என்.இ.சி கார்ப்பரேஷனின் கார்ப்பரேட் மூத்த நிர்வாக துணைத் தலைவரும் தலைமை அரசு விவகார அதிகாரியுமான திரு தனகா ஷிகெஹிரோ, ஜப்பானிய தொழில்துறை இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது பார்வை மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதமர் திரு மோடி மிகத் தெளிவாக விளக்கினார் என்று குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு ஜப்பானிய வணிகத்தின் ஆதரவு மற்றும் 2047 இல் வளர்ந்த பாரதம் பார்வைக்கு அர்த்தமுள்ள மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது.
***
(Release ID: 2115945)
RB/DL
Had an excellent meeting with a delegation from Keizai Doyukai (Japan Association of Corporate Executives). We talked about the robust India-Japan friendship and how to deepen economic linkages.https://t.co/SNhu8C173Q pic.twitter.com/gMeYeSmgZT
— Narendra Modi (@narendramodi) March 27, 2025