பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்திய அரசின் 100 சதவீத முதலீட்டில் தபால் துறையின் கீழ் பொதுத் துறை நிறுவனமாக இந்தியா போஸ்ட் பண வழங்கீட்டு வங்கி ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்புதலை வழங்கியது.
இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ. 800 கோடியாக இருக்கும். இத்திட்டத்தின் விளைவாக நாட்டின் அனைத்து மக்களும், குறிப்பாக பாரம்பரிய வங்கிச் சேவைக் கட்டமைப்பிற்கு வெளியே உள்ள சுமார் 40 சதவீத மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டமானது படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்படும்.
இந்தியா போஸ்ட் பண வழங்கீட்டு வங்கியானது வங்கிச் சேவைக்கான முறையான அனுமதியை மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து மார்ச் 2017க்குள் பெறும் என்பதோடு, 2017 செப்டம்பருக்குள் நாடு முழுவதிலும் 650 பண வழங்கீட்டு சேவை மையங்களை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும். இந்த வங்கிக் கிளைகள் தபால் நிலையங்கள், கைப்பேசி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய மாற்று வழிகள், விற்பனை மையங்கள், கைப்பேசி மூலமான விற்பனை கருவிகள், ஏடிஎம் மற்றும் இதர எளிமையான கணிணி முறையிலான வழங்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும்.
இந்தக் கருத்துருவானது அடிப்படை வங்கிச் சேவைகள், பணம் வழங்கல், பணம் அனுப்புதல் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நிதியமைப்பில் அனைவரையும் இணைப்பது என்ற முயற்சிக்கு உதவுவதாக இருக்கும் என்பதோடு, காப்பீடு, பரஸ்பர நிதி முதலீடு, ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான வசதிகளை செய்யும். மேலும் வங்கிச் சேவையை பெருமளவிற்கு பெறாத அல்லது முற்றிலுமே பெறாத பிரிவினர், கிராமப்புற மக்கள் ஆகியோர் மீதான தனிக் கவனத்துடன் மூன்றாவது நபருக்கான நிதியுதவி வழங்குவோருடன் தொடர்பு ஏற்படுத்துவது; கடன் வசதிகளை ஏற்பாடு செய்வது ஆகியவற்றையும் இது மேற்கொள்ளும். வங்கிச் சேவையில் தனித் திறன் பெற்றவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை இது உருவாக்கும் என்பதோடு நாடு முழுவதும் நிதி குறித்த கல்வியை பரப்புவதற்கான வாய்ப்புகளையும் அது வழங்கும். தொடர்பு கொள்ளும் வகையில் உலகத்திலேயே மிகப் பெரும் வங்கியாக அது அமையும் என்பதோடு, காலப்போக்கில் மிகக் குறைந்த பணப்புழக்கம் மிக்க பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கு ஊக்கமளிப்பதாகவும் அமையும்.
பின்னணி
நிதியமைப்பில் மேலும் அதிகமான மக்களை இணைப்பது என்ற நோக்கத்துடன் இந்தியா போஸ்ட் பண வழங்கீட்டு வங்கியை துவக்குவது என்ற அறிவிப்பு 2015-16க்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இந்த வங்கியை நிறுவுவதற்கென இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து தபால் துறையானது செப்டம்பர் 2015இல் கொள்கையளவிலான ஒப்புதலைப் பெற்றது. இந்த வங்கியானது தபால் துறையின் நாடு தழுவிய அளவிலான துறையின் வலைப்பின்னல் கட்டமைப்பு, செல்வாக்கு, ஆதாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, எளிமையான, குறைந்த செலவிலான, தரமான நிதிச் சேவைகளை தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் மிக எளிதாகப் பயன்பெறும் வகையில் வழங்கும்.