Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டில் பிரதமரின் நிறைவு அறிக்கையின் ஆங்கில மொழியாக்கம்

இந்தியா – பசிஃபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான அமைப்பின் மூன்றாவது உச்சிமாநாட்டில் பிரதமரின் நிறைவு அறிக்கையின் ஆங்கில மொழியாக்கம்


மேன்மைதங்கியவர்களே‘!

தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி!

நமது விவாதங்களில் இருந்து உருவான கருத்துக்களை நிச்சயமாக நாம் பரிசீலிப்போம். நாம்  பகிரப்பட்ட சில முன்னுரிமைகளையும், பசிஃபிக் தீவு நாடுகளின் தேவைகளையும் நாம் கொண்டிருக்கிறோம்.  இந்த அமைப்பில் நமது முயற்சி என்பது இந்த இரண்டு அம்சங்களை மனதில் கொண்டு முன்னேறுவதாகும். ஃபிப்பிக் அமைப்பிற்குள் நமது ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க அறிவிப்புகளை வெளியிட நான் விரும்புகிறேன்.

  1. பசிஃபிக் பிராந்தியத்தில் சுகாதார கவனிப்பை ஊக்கப்படுத்த ஃபிஜியில் உயர் சிறப்பு இருதயவியல் மருத்துவமனையை  திறப்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம். இந்த மருத்துவமனை பயிற்சி பெற்ற ஊழியர்களையும் நவீன வசதிகளையும், அடிப்படை கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இது ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் உயிர்காப்பு சேவையை வழங்கும். பிராண்டமான இந்த நவீன திட்டத்தின் முழு செலவையும் இந்திய அரசு ஏற்கும்.
  2. 14 பசிஃபிக் தீவு நாடுகள் அனைத்திலும் டயாலிசிஸ் பிரிவுகளை அமைக்க இந்தியா உதவிசெய்யும்.
  3. 14 பசிஃபிக் தீவு நாடுகள் அனைத்திலும் கடல் ஆம்புலன்சுகள் வழங்கப்படும்.
  4.  2022-ம் ஆண்டில், ஃபிஜியில் ஜெய்பூர் பாத முகாமை நாங்கள் நடத்தினோம்.  இந்த முகாமில் 600-க்கும் அதிகமானவர்களுக்கு விலையின்றி செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. நண்பர்களே, இந்தப் பரிசைப் பெற்றவர்கள் வாழ்க்கையை பரிசாகப் பெற்றதுபோல் உணர்ந்தார்கள்.

பசிஃபிக் தீவு நாடுகளின் பகுதிக்கு இந்த ஆண்டு பப்புவா நியூ கினியாவில் ஜெய்ப்பூர் பாத முகாமை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். 2024 தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பசிஃபிக் தீவு நாடுகளில் இத்தகைய இரண்டு முகாம்கள் நடத்தப்படும்.

  1. இந்தியாவில் மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் 1800-க்கும் அதிகமான உயர்தர மருந்துகள் கட்டுப்படியாகும் விலையில் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. உதாரணமாக நீரிழிவு நோய்க்கான மருந்துகள் சந்தை விலையோடு ஒப்பிடுகையில் மக்கள் மருந்தக மையங்களில் 90 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கின்றன.  மற்ற மருந்துகளும் சந்தை விலையை விட 60 சதவீதம் முதல், 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில்  கிடைக்கின்றன. இதுபோன்ற மக்கள் மருந்தக மையங்களை உங்கள் நாடுகளுக்கு கொண்டுவர நான் யோசனை தெரிவிக்கிறேன்.
  2. நீரிழிவு போன்ற நோய்களை தடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக யோகா இருப்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.
  3. பப்புவா நியூ கினியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கான உயர் சிறப்பு மையம் மேம்படுத்தப்பட்டு “பிராந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு மையமாக” மாற்றப்படும்.
  4. ஃபிஜி மக்களுக்கு 24 மணி நேர அவசர கால உதவித் தொலைபேசி அமைப்பு உருவாக்கப்படும். இதே போன்ற வசதியை பசிஃபிக் தீவு நாடுகளில் அமைக்க உதவி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
  5. பசிஃபிக் தீவு நாடு ஒவ்வொன்றிலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நான் அறிவிக்கிறேன். இந்தத் திட்டத்தின் கீழ் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்படும். திறன் விரிவாக்கத்திற்கு, திறன் கட்டமைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  6.  பசிஃபிக் தீவு தலைவர்களின் அதிகாரப்பூர்வ குடியிருப்புகளை சூரியமின்சக்தி கொண்டவையாக மாற்றும் திட்டத்திற்கு உங்களின் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. தற்போது ஃபிப்பிக் அமைப்பு நாடுகள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு அரசு கட்டிடத்தையாவது சூரிய மின்சக்தி கொண்டதாக நாங்கள் மாற்றவிருக்கிறோம்.
  7. தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண பசிஃபிக் தீவு நாடு ஒவ்வொன்றிலும் உள்ள மக்களுக்கு உவர்நீரைக் குடிநீராக்கும் அலகுகளை அமைக்க நான் உறுதியளிக்கிறேன்.
  8. திறன் கட்டமைப்புக்கான நீண்டகால உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பசிஃபிக் தீவு நாடுகள் ஒவ்வொன்றுக்கும் “சாகர் அம்ருத் படிப்புதவித் தொகை” திட்டத்தை  நான் அறிவிக்கிறேன். இந்தத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான பயிற்சி வாய்ப்புகள் 1000 பேருக்கு  வழங்கப்படும்.

மேன்மை தங்கியவர்களே,

இத்துடன் எனது கருத்துக்களை நான் நிறைவு செய்கிறேன். இந்த அமைப்புடன் சிறப்பான உறவை நான் கொண்டிருக்கிறேன்.  இது எல்லைகளைக் கடந்ததாக இருக்கிறது. மனிதகுல ஒத்துழைப்பின் எல்லையற்ற ஆற்றலை அங்கீகரிக்கிறது. இன்று இங்கு நீங்கள் பங்கேற்றதற்கு எனது மனமார்ந்த நன்றியை நான் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்தமுறை உங்களை இந்தியாவில் வரவேற்கும் வாய்ப்பை நாம் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.

நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

******

(Release ID: 1926273)

AD/SMB/AG/KRS