Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-நெதர்லாந்து காணொலி உச்சி மாநாடு

இந்தியா-நெதர்லாந்து காணொலி உச்சி மாநாடு


பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்து பிரதமர் திரு மார்க் ரூட்டும் காணொலி உச்சி மாநாட்டை இன்று நடத்தினார்கள். 2021 மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் திரு ரூட் கலந்துகொள்ளும் முதல் உயர்மட்ட உச்சிமாநாடு இதுவாகும். பிரதமர் திரு ரூட்டின் தேர்தல் வெற்றி மற்றும் தொடர்ந்து நான்காவது முறையாக நெதர்லாந்தின் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு, இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஜனநாயகம், சட்ட முறைகள், மனித உரிமைகள், இருநாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு ஆகியவற்றின் வாயிலாக இந்தியாவும் நெதர்லாந்தும் வலுவான மற்றும் நிலையான உறவைக் கொண்டுள்ளன.

இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு மேற்கொண்டதோடு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், நீர் மேலாண்மை, வேளாண் துறை, சீர்மிகு நகரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் விண்வெளி ஆகிய துறைகளில் பன்முகத் தன்மை வாய்ந்ததாக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தண்ணீர் சம்பந்தமான துறைகளில் இந்தியா-நெதர்லாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காகவும், தண்ணீர் மீதான பணிக் குழுவை அமைச்சக அளவில் தரம் உயர்த்தவும்  தண்ணீர் மீதான கேந்திர கூட்டமைப்பைஉருவாக்க இரு பிரதமர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

பருவநிலை மாற்றம், தீவிரவாத எதிர்தாக்குதல், கொவிட்-19 பெருந்தொற்று போன்ற சர்வதேச மற்றும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வது தொடர்பான கருத்துக்களையும்  இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டதோடு, இந்திய-பசிபிக் நெகிழ்வுத் தன்மை வாய்ந்த விநியோக சங்கிலி, சர்வதேச டிஜிட்டல் ஆளுகை போன்ற புதிய துறைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி ஆகியவற்றிற்கு ஆதரவு அளித்த நெதர்லாந்துக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். நெதர்லாந்தின் இந்திய- பசிபிக் கொள்கையையும், 2023 ஆம் ஆண்டு ஜி20 மாநாட்டை தலைமை ஏற்க உள்ள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் அந்நாட்டின் விருப்பத்தையும்  பிரதமர் திரு மோடி வரவேற்றார்.

சர்வதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக விதிமுறைகளின் அடிப்படையிலான பலதரப்பு ஆணைகளில் உறுதி பூண்டிருப்பதை  இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியதோடு, 2021 மே மாதம் போர்ச்சுக்கலில் நடைபெற உள்ள இந்திய-ஐக்கிய ஐரோப்பிய தலைவர்கள் கூட்டம் வெற்றியடையவும் வாழ்த்து தெரிவித்தனர்.

*****************