Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்


மேதகு பிரதமர் திரு லக்சன் அவர்களே,

 

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

 

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

கியா ஓரா!

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

 

நண்பர்களே,

இருதரப்பு உறவுகளின் பல்வேறு துறைகள் குறித்து இன்று நாங்கள் ஆழமான விவாதங்களை நடத்தினோம். எங்கள் பாதுகாப்பு மற்றும்  ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நிறுவனமயமாக்கவும் முடிவு செய்துள்ளோம். கூட்டு பயிற்சிகள் மற்றும் துறைமுக விஜயங்கள்  மட்டுமல்லாமல், இருதரப்பு பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கான ஒரு செயல் திட்டமும் உருவாக்கப்படும். இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்புக்கான ஒருங்கிணைந்த பணிக்குழு -150 இல்  நமது கடற்படைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. நியூசிலாந்து கடற்படைக் கப்பல் இரண்டே நாட்களில் மும்பை துறைமுகத்தை வந்தடைகிறது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

 

நண்பர்களே,

இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் பயனளிக்கும்  தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளோம். இது இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும். பால்வளம், உணவு பதப்படுத்துதல், மருந்து தயாரிப்பு போன்ற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பும் முதலீடும் ஊக்குவிக்கப்படும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் முக்கிய கனிமங்கள் துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். வனவியல், தோட்டக்கலையில் கூட்டுப் பணி மேற்கொள்ளப்படும். பிரதமருடன் வந்துள்ள பெரிய வர்த்தகக் குழுவினர், இந்தியாவில் உள்ள புதிய வாய்ப்புகளை ஆராயவும், புரிந்து கொள்ளவும் ஒரு வாய்ப்பைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

கிரிக்கெட், ஹாக்கி அல்லது மலையேறுதல் என எதுவாக இருந்தாலும், விளையாட்டில் இரு நாடுகளும் நீண்டகால பிணைப்பைக் கொண்டுள்ளன. விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டு வீரர்களின்  பரிமாற்றம் மற்றும் விளையாட்டு அறிவியல், உளவியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளோம். 2026-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு உறவுகளின் 100 ஆண்டுகளைக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.

 

நண்பர்களே,

நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர். திறன்மிக்க தொழிலாளர்களின் இடப்பெயர்வை எளிமைப்படுத்தவும், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உடன்பாட்டை விரைந்து செயல்படுத்த நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். யு.பி.ஐ இணைப்பை மேம்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, சுற்றுலாவை ஊக்குவிப்பது ஆகியவற்றிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம். கல்வித் துறையில் எங்களது உறவுகள் நீண்டகாலமானது, மேலும் இந்தியாவில் வளாகங்களை அமைக்க நியூசிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

 

நண்பர்களே,

பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். மார்ச் 15, 2019 கிறைஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி அல்லது நவம்பர் 26, 2008 மும்பை தாக்குதலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம். இது தொடர்பாக, நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகளின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த எங்கள் கவலைகளையும் நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். இதுபோன்ற சட்டவிரோத சக்திகளுக்கு எதிராக நியூசிலாந்து அரசின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து பெறுவோம் என்று நம்புகிறோம்.

 

நண்பர்களே,

நாம் இருவரும் தடை இல்லாத, திறந்த, பாதுகாப்பான, வளமான இந்தோ-பசிபிக்கை ஆதரிக்கிறோம். நாங்கள் வளர்ச்சிக் கொள்கையை நம்புகிறோம், விரிவாக்கவாதத்தை அல்ல. இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் நியூசிலாந்து இணைவதை நாங்கள் வரவேற்கிறோம்.

 

நண்பர்களே,

இறுதியாக, ரக்பி மொழியில், சொல்ல வேண்டும் என்றால் எங்கள் உறவில் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் இருவரும் “ஃபிரண்ட் அப்” செய்ய தயாராக உள்ளோம். நாங்கள் ஒன்றிணைந்து ஒரு பிரகாசமான கூட்டாண்மைக்கான பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம்! மேலும், எங்கள் கூட்டாண்மை இரு நாட்டு மக்களுக்கும் ஒரு வெற்றிகரமான கூட்டாண்மையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

மிகவும் நன்றி!

பொறுப்புத் துறப்பு – இது பிரதமர்  வெளியிட்ட கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது கருத்துக்களை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

***

RB/DL