Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் பிரதமரின் உரை

இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் பிரதமரின் உரை

இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் பிரதமரின் உரை


தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபர் மாண்புமிகு திரு. சிரில் ராமபோஸா அவர்களே,

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தலைவர்களே,

தாய்மார்களே அன்பர்களே, 

வணக்கம்!

இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக மாநாட்டில் உங்களுடன் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தென்னாப்பிரிக்க அதிபர் அவர்களே, உங்களுடன் நாங்கள் இம்மாநாட்டில் பங்கேற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த கௌரவத்தை அளிக்கிறது.

     நாளை (26.01.2019) நடைபெறவுள்ள 70-வது குடியரசு தின விழா அணிவகுப்பில் நீங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருப்பது, மிகுந்த சிறப்புக்குரியதாகும்.  நமது ஒத்துழைப்புகள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சுதந்திரப் போராட்டங்களை ஒருங்கிணைத்த, பிரிக்க முடியாத வரலாற்று ரீதியான பிணைப்புடன் கூடியதாகும்.

     தற்போது, நமது மக்களுக்காக மடிபாவும் (நெல்சன் மண்டேலா), மகாத்மாவும் கண்ட கனவுகளை நனவாக்கும் வகையில் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் நமது ஒத்துழைப்புகள் அமைந்துள்ளது.

     செங்கோட்டையிலிருந்து வெளியிடப்பட்ட பிரகடனத்தின் மூலம் 22 ஆண்டுகளுக்கு முன் நம்மிடையேயான நீடித்த நட்புறவுக்கு வித்திடப்பட்டது. இரண்டு பழம்பெரும் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளிடையே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தை, நம்மிடையே அனைத்து வகையிலும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இருதரப்பு மற்றும் சர்வதேச அளவில் நம்மிடையே நெருங்கிய ஒத்துழைப்பு கொள்வது என்ற உறுதிப்பாட்டில் தொடர்ந்து உறுதியோடு இருக்கிறோம்.  அண்மைக்காலமாக நமது இரு பழம்பெரும் நாடுகளிடையே புதிய தொடக்கங்களும், சுவாரஸ்யமான வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.

     இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான வர்த்தகம் மேலோங்கி வருகிறது. 2017-18-ல் வர்த்தகம் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தாண்டியுள்ளது. 2018-ல் இரண்டு பெரிய வர்த்தக அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளே இதற்கு காரணமாகும்.  இதில் ஒன்று 2018 ஏப்ரலில் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா வர்த்தக உச்சிமாநாடாகும்.  மற்றொன்று 2018 நவம்பரில் ஜோஹன்னஸ்பர்கில் நிகழ்ந்த, இந்தியாவில் முதலீடு  என்ற வர்த்தக மாநாடாகும்.

     எனினும், இன்னும் பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அரசு முகமைகள், முதலீட்டு மேம்பாடு நிறுவனங்கள் மற்றும் இருநாடுகளின் வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து இதற்கான சாத்தியக்கூறுகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் எங்கள் நாட்டிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

     நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது, தென்னாப்பிரிக்காவிலிருந்து முக்கியமான பிரதிநிதிகளை வரவேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து அதிகளவில் நமது நண்பர்களையும், பங்குதாரர்களையும் கடந்த வாரம் துடிப்புமிக்க குஜராத் மீண்டும் வரவேற்றது எனக்கு மகிழ்ச்சி.. இதில் ஒருநாள் ஆப்பிரிக்க நாளாக அனுசரிக்கப்பட்டது.  நமது பந்தம் நாம் காண்பதைக் காட்டிலும் மிகவும் ஆழமாக உள்ளது என்பதை இது உணர்த்துகிறது.  நமது இருதரப்பு பொருளாதார பங்களிப்புக்கும் இது மிகவும் அத்தியாவசிமானதாகும். தாய்மார்களே, அன்பர்களே இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 2.6 டிரில்லியன் டாலராக உள்ளதால், உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உருவாகி வருகிறது.

     உலகளவில் 5-வது பொருளாதார நாடாக நாம் உருவாகும் வழியில் இருக்கிறோம். உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்குதல் பற்றிய சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா 77-வது இடத்திற்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 65-வது இடத்தில் இருந்து முன்னேறியுள்ளது.

     யூ.என்.சி.டி.ஏ.டி. பட்டியலின்படி, வெளிநாட்டு நேரடி முதலீடு நாடுகளில் நாம் உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம்.  ஆனாலும் நமக்கு திருப்தி இல்லை.  தினசரி அடிப்படையில், நாம் அவசியமான மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் செய்து வருகிறோம்.

     இந்தியாவில் உற்பத்தி செய்வோம், டிஜிட்டல் இந்தியா மற்றும் இந்தியாவில் தொழில் தொடங்குக ஆகிய நமது சிறப்பு திட்டங்கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

     தொழில் துறையில் 4.0 மற்றும் செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட இதர புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நமது தொழில்துறை முன்னேறி வருகிறது. மனித சமுதாயத்தின் ஆறில் ஒரு பங்காக இருக்கும், நமது நாட்டின் 1.3 பில்லியன் மக்கள் தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.  

     அதிவேகம், திறன் மற்றும் அளவுகோல் முக்கியத்துவத்துடன் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புடன் புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாம் உறுதி பூண்டுள்ளோம்.  இந்த சந்தர்ப்பத்தை உங்களைப் பாராட்டும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்.  

மேன்மைதாங்கிய அதிபர் அவர்களே,

     2018-ல் புதிய தென்னாப்பிரிக்காவை உருவாக்கும் உங்களது பல்வேறு முயற்சிகள் தொடங்கிவைக்கப்பட்டன.  தென்னாப்பிரிக்காவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உங்களது முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு நாங்கள் வாழ்த்துகிறோம்.  மேலும் மூன்று ஆண்டுகளில் இளைஞர்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளையும் வரவேற்கிறோம்.   இந்த நோக்கங்களுக்கு இந்தியா தனது பங்களிப்பை அளித்து வருவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  தென்னாப்பிரிக்காவில் எங்களது முதலீடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.  உள்நாட்டில் 20000 ஆயிரத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், முதலீடும் 10 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது.

     சகோதர நாடு என்ற வகையில், கொள்கை சீர்திருத்தங்களில் தனது அனுபவத்தை இந்தியா பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.  அதற்கான  அடித்தள முகமைகளையும் உருவாக்க விரும்புகிறது.  தென்னாப்பிரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.  இந்திய சந்தையிலும் தென்னாப்பிரிக்க நிறுவனங்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.  குறிப்பாக உணவு, வேளாண் பதப்படுத்துதல், சுரங்கத்தை ஆழப்படுத்துதல், பாதுகாப்புத்துறை, நிதி மற்றும் தொழில்நுட்பம், காப்பீடு மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் புதிய இந்தியா, தேவையான அனைத்து வாய்ப்புகளுடன் உங்களை வரவேற்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். 

     அதேபோன்று புதிய தொழில்கள், சுகாதார சேவை, மருந்து தொழில், உயரிய தொழில்நுட்பம் ஐடி மற்றும், ஐடி தொடர்பான துறைகள் ஆகியவற்றில் தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா பங்குதாரராக இயங்கும்.

     அண்மையில் தொடங்கப்பட்ட காந்தி-மண்டேலா திறன் நிறுவனத்தின் வழியாக தென்னாப்பிரிக்காவின் திறன் மேம்பாட்டில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.   இந்த முயற்சி இளைஞர்களின் அதிகாரத்தை மேம்படுத்த உதவும்.

     இருநாடுகளின் அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுத் தொழில்துறை, ரத்தின கற்கள் மற்றும் அலங்கார நகைகள் துறையாகும். இருநாடுகளும் வைரங்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.

     பொருளாதாரங்களின் அளவை இது உறுதிப்படுத்தும். மேலும், இருநாடுகளில் வாங்குவோர் மற்றும் விற்போரின் செலவையும் குறைக்கும்.  புதிய மற்றும் மாற்று எரிசக்திக்கான நமது பிரச்சாரத்தில் சர்வதேச சூரிய கூட்டணியின் வழியாக இந்தியாவுடன் தென்னாப்பிரிக்காவும் கைகோர்த்திட வேண்டும்.

வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள விசா தொடர்பான விதிமுறைகள்  எளிதாக்கப்படுவதுடன், நேரடி இணைப்பும் வணிகத்தை மேலும் எளிதாக்குவதுடன், மக்களுக்கு இடையேயான பரிமாற்றத்தையும் மேம்படுத்தும்.

தாய்மார்களே, அன்பர்களே,

இந்தியா-தென்னாப்பிரிக்கா பங்குதாரர் அமைப்பில் ஏராளமான ஆற்றல்கள் மறைந்திருக்கின்றன.   இருநாட்டு மக்கள் பயன்பெறும் வகையில் வளர்ச்சி மற்றும் வளமையை பகிர்ந்து கொள்வதற்கான புதிய சகாப்தத்தை உருவாக்க நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

உங்களது வருகை இந்த உறவை முன்னெடுத்துச் செல்வதற்கு அரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த முயற்சியில் உங்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.

நன்றி,

மிக்க நன்றி.