பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – தான்சானியா இடையே நீர் வள மேலாண்மை மற்றும் மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, நீர் சேமிப்பு, நிலத்தின் மேல் பகுதி மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் மேம்பாடு, மண் மற்றும் பாறைகள் மூலம் நீரை சேமித்தல் (aquifer recharge) உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு வலுப்படும். இந்தப் பகுதிகளில் இருதரப்பும் பரஸ்பரம் இணைந்து ஒத்துழைப்பதுடன், நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்வதால், நீர் சேமிப்பு, நீர் பாதுகாப்பு, நிலத்தின் மேல் பகுதி மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் மேம்பாடு, மண் மற்றும் பாறைகள் மூலம் நீர் சேமிப்பு (aquifer recharge) ஆகியவற்றில் நாட்டுக்கு பயன் ஏற்படும்.
இதன்மூலம், மேற்கொண்ட துறைகளில் திறனை வலுப்படுத்த, நிபுணர்கள் பரிமாற்றம், பயிற்சித் திட்டங்களை வகுத்தல், கல்வி சுற்றுலா, மற்றும் பிற நடவடிக்கைகளான முன்னோடி ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த அரசு ஊக்குவிக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க கூட்டுப் பணிக் குழு அமைக்கப்படும்.
பின்னணி
நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மையில் மற்ற நாடுகளுடனும் இருதரப்பு ஒத்துழைப்பை மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இவை கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்தல், பயிற்சி வகுப்புகள், பணிமனைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விவாதங்கள், நிபுணர்கள் பரிமாற்றம், ஆய்வு சுற்றுலா ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
தான்சானியா அரசின் நீர்வளத் துறை அமைச்சர், புதுதில்லிக்கு ஜூலை 16, 2014-ல் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பட்டுள்ளது. இருதரப்பிலும் நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பு ஆலோசனைக்குப் பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.