Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – டென்மார்க் பசுமை முக்கியத்துவ பங்களிப்பு குறித்த கூட்டறிக்கை

இந்தியா – டென்மார்க் பசுமை முக்கியத்துவ பங்களிப்பு குறித்த கூட்டறிக்கை


இந்தியா மற்றும் டென்மார்க் நாடுகளின் மெய்நிகர் உச்சி மாநாடு 2020 செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. டென்மார்க் நாட்டு பிரதமர் மாண்புமிகு மெட்டே பிரடெரிக்சென், இந்தியப் பிரதமர் மாண்புமிகு திரு. நரேந்திர மோடி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

2. இரு தரப்பு உறவுகள் குறித்து இந்தியப் பிரதமர் மோடியும், டென்மார்க் பிரதமர் பிரடெரிக்சென்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். கோவிட்-19 நோய்த் தொற்று குறித்தும், உலகளாவிய விஷயங்களில் இரு நாடுகள் சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்தும், பருவநிலை மாற்றம், பசுமை முறைக்கு மாறுதல் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர். நீடித்தப் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்கும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இருவரும் பொதுவான புரிதல் நிலையை எட்டினர்.

3. வரலாற்றுத் தொடர்புகள், பொதுவான ஜனநாயக மரபுகள் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்து இருவரும் திருப்தி தெரிவித்தனர். பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதில் இருவரும் தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

4. நம்பகமான பங்காளர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்ட இரு பிரதமர்களும், இந்திய – டென்மார்க் உறவுகளை பசுமை முக்கியத்துவமான பங்களிப்பாக உருவாக்க ஒப்புக்கொண்டனர்.  ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தை ஏற்படுத்துவதற்கு 2009 பிப்ரவரி 6 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட  ஒப்பந்தத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் செயல்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அரசியல் களத்திலும், வணிகத் துறையிலும், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், எரிசக்தி, கல்வி மற்றும் கலாச்சார துறைகளில் இந்தியா – டென்மார்க் இடையில் பரவலான ஒத்துழைப்பை ஏற்படுத்த அந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆதாரவளங்களைக் கொண்ட எரிசக்தி உற்பத்தி, நகர்ப்புற மேம்பாடு, சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் கால்நடைப் பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைச் சிந்தனை, கப்பல் போக்குவரத்து, தொழிலாளர்  பயணம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுக்காக இப்போது பணியாற்றி வரும் கூட்டுப் பணிக் குழுக்களை இது மேலும் பலப்படுத்துவதாகவும், ஊக்குவிப்பதாகவும் அமையும்.

5. அரசியல் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல், பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், பசுமை வளர்ச்சி, வேலைகள் உருவாக்குதல் மற்றும் உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர் கொள்வதில் கூட்டு முயற்சியை பலப்படுத்துதல் ஆகியவற்றில் பசுமை முக்கியத்துவமான பங்களிப்பு பரஸ்பரம் பயன்தரக் கூடியதாக இருக்கும். பாரிஸ் ஒப்பந்தத்தையும், ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை உயர் விருப்பத்துடன் அமல் செய்வதிலும் இது கவனம் செலுத்தும்.

6. பசுமை முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்தியாவும், டென்மார்க்கும்  உரிய அமைச்சகங்கள், அமைப்புகள் மற்றும் தொடர்புடையவர்கள் மூலம் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளும்.

எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம்

 

7. பசுமை வழியிலான எரிசக்திப் பயன்பாட்டு முறைக்கு மாறுதல், பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கும், உலக அளவிலான சவால்களை எதிர்கொள்வதிலும் இரு நாடுகளும் நெருக்கமான நட்புடன் செயல்படும் என்று இரு பிரதமர்களும் உறுதி தெரிவித்தனர். கடலோரக் காற்று மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முக்கிய ஒத்துழைப்பு மேற்கொள்வது, திறன் மேம்பாடு, காற்றாலை மின் உற்பத்தி குறித்த அறிவுப் பகிர்தல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் அளிப்பதில் இந்தியா – டென்மார்க் எரிசக்திக் கூட்டமைப்பு உருவாக்குதல், எரிசக்தி மாடலிங் தயாரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு ஆகிய முயற்சிகள், உலகளவிலான எரிசக்தி நிலை மாற்றம், பசுமை வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சியில் உள்ள பொதுவான சவால்களை சந்திப்பதில் உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துபவையாக உள்ளன. வரக்கூடிய ஆண்டுகளில் எரிசக்தித் துறையில் பங்களிப்புகள் இன்னும் பலமாகும் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

8. பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதில் இந்தியாவும் டென்மார்க்கும் ஒருமித்த கருத்து தெரிவித்தன. பாரிஸ் ஒப்பந்தத்தை அமல் செய்வது என்ற உயர்விருப்ப லட்சியத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் பருவநிலை மாற்றம் மற்றும் எரிசக்தித் துறைகளில் இரு நாடுகளும் தேசிய அளவில் இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்படுகின்றன. உயர்லட்சியமான பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த எரிசக்தி இலக்குகளை எட்டுவது சாத்தியமானது தான் என்பதை இந்த இரு நாடுகளும் உலகிற்குக் காட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும்.

9. பருவநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயல்பாடுகள் தொடர்பாக, பல்வேறு நிலைகளில் அவ்வப்போது ஆலோசனைகள் மற்றும் கலந்தாடல்கள் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

சுற்றுச்சூழல் / தண்ணீர் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம்

10. சுற்றுச்சூழல் / தண்ணீர் மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் குறித்த விஷயங்களில் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி பலப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். தண்ணீர் சிக்கனம் மற்றும் தண்ணீர் இழப்பு குறித்த விஷயங்களில் ஒத்துழைக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு (2021-23) ஒரு திட்டத்தை உருவாக்க இந்தியாவின் ஜல்சக்தி அமைச்சகம், டெனமார்க்கின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை மற்றும் டென்மார்க் சுற்றுச்சூழல் மற்றும் உணவு அமைச்சகம் ஆகியவை கேட்டுக் கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

11. தண்ணீர் வழங்கல், தண்ணீர் விநியோகம், கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றல் முறைமைகள், சுத்திகரிப்பு செய்த கழிவுநீரைப் பயன்படுத்துதல், நீர் மேலாண்மை மற்றும் தண்ணீர் வளத் துறையில் மின்சாரப் பயன்பாட்டை போதிய அளவுக்குள் கட்டுப்படுத்துதல் ஆகிய விஷயங்களில், இந்திய – டென்மார்க் நீர் தொழில்நுட்பக் கூட்டமைப்பு மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு பிரதமர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

 பொலிவுறு நகரங்களை உள்ளடக்கிய நீடித்த நகர்ப்புற வளர்ச்சி

12.நீடித்த நகர்ப்புற வளர்ச்சி குறித்த, இரண்டாவது இந்திய – டென்மார்க் கூட்டுப்பணிக்குழுக் கூட்டத்தை 2020 ஜூன் 26-ஆம் தேதி மெய்நிகர் வடிவில் நடத்தியதை  இருதரப்பும் குறிப்பிட்டன. கோவாவில் உள்ள நகர்ப்புற வாழ்வியல் ஆய்வகத்தின் மூலம், பொலிவுறு நகரங்களை உள்ளடக்கிய நீடித்த நகர்ப்புற வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

13. உதய்ப்பூர்-ஆர்ஹஸ், துமாக்கூரு-ஆல்போர்க் நகரங்களுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

14. இந்தியாவில் டென்மார்க் நாட்டு நிறுவனங்கள், உள்கட்டமைப்புத் திட்டங்களை வடிவமைப்பதில் ஆற்றி வரும் பங்களிப்பை அவை குறிப்பிட்டுள்ளன. நகர்ப்புற வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், டென்மார்க் நாடு பங்கேற்பதை அவை வரவேற்றுள்ளன.

தொழில், வர்த்தகம், கப்பல் துறை

15. பசுமை மற்றும் பருவநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களில் சிறப்பு கவனத்துடன், இரு நாடுகளின் அரசுகள், நிறுவனங்கள், வர்த்தகங்கள் இடையே கூட்டாண்மையை உருவாக்கும் யோசனையை இரு நாட்டு பிரதமர்களும் வரவேற்றுள்ளனர். பசுமை எரிசக்தியில் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதற்கான ஒழுங்குமுறை வரையறைகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

16. கடல்சார் விவகாரங்களில் ஆழமான ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். கப்பல் கட்டுதல், வடிவமைத்தல், கடல்சார் சேவைகள், பசுமைக் கப்பல்கள், துறைமுக மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஆற்றலையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

17. வர்த்தக தூதுக்குழுவினர், சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான சந்தை அணுக்க நடவடிக்கைகள், எளிதாகத் தொழில் நடத்துவதை வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இரு பிரதமர்களும் வலியுறுத்தினர்.

18. அறிவுசார் சொத்துரிமைகளில், உருவெடுத்து வரும் ஒத்துழைப்பை இந்தியாவும், டென்மார்க்கும் உறுதிப்படுத்தின. புதிய கண்டுபிடிப்புகள், படைப்பாற்றல், தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில்,  இரு நாடுகளின் தேசிய அறிவுசார் சொத்து முறைகளை வலுப்படுத்தவும், நவீனமயமாக்கவும் இது பெரிதும் உதவும். 

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல்

19. தொழில்நுட்ப மேம்பாட்டை மேம்படுத்தவும், புதிய தீர்வுகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு முக்கியமான வழிமுறையாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்பில் (STI)  பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்புடன் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் அதிகரிப்பதற்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை இந்தியாவும், டென்மார்க்கும் உணர்ந்துள்ளன. எஸ்டிஐ-யில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பசுமை செயல்உத்தி சார்ந்த பரஸ்பர பங்கேற்புக்கு உதவுகிறது.  அதிகார வர்க்கம், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகள் மற்றும் இந்தியாவிலும் டென்மார்க்கிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் மூலம் இந்த உதவி அளிக்கப்படுகிறது.  இருதரப்பும் தற்போது உள்ள வலுவான எஸ்டிஐ பரஸ்பரப் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு மேலும் வளர்வதற்கு சம்மதித்துள்ளன.

20. டிஜிட்டல் மயமாக்குதல், டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பசுமைக்கு மாறுவதற்கான வர்த்தக மாதிரிகள் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் நலன்களை இரு நாட்டுத் தலைவர்களும் அங்கீகரித்துள்ளனர். பசுமை சார்ந்த நீடித்த வளர்ச்சிக்கு உதவும் வகையிலான டிஜிட்டல் தொழில்நுட்பக் களத்தில் மேம்பாடு புத்தாக்கம் மற்றும் செயல் விளக்கம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர். 

உணவு மற்றும் வேளாண்மை

21. வேளாண்மைத் தொழிலில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அளப்பரிய வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகிய பிரிவுகளிலும் அதே போன்று கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளம் ஆகிய பிரிவுகளிலும் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையில் ஆழமான மற்றும் நெருக்கமான கூட்டுறவு ஏற்படுவதை இரு நாட்டு பிரதம மந்திரிகளும் ஊக்கப்படுத்துகின்றனர்.

சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல்கள்

22. சுகாதாரப் பிரிவில் இரு தரப்பு உரையாடல்களையும், கூட்டுறவையும் வலுப்படுத்த வேண்டிய வாய்ப்பு மற்றும் பொதுவிருப்பம் ஆகியவற்றை இரு தரப்பும் வலியுறுத்துகின்றன.  இரு நாடுகளும் தங்களது கலந்துரையாடலை விரிவுபடுத்தவும் பெருந்தொற்றுப் பரவல் மற்றும் தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட அதிலும் குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்ப்பதற்கும் மற்றும் எதிர்காலப் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ளவும் தேவைப்படுகின்ற சுகாதாரக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் உறுதி ஏற்றுள்ளன.  ஒன்றிணைந்து ஆராய்ச்சி செய்வது உள்ளிட்ட வாழ்க்கை அறிவியல் துறைகளில் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதன் மூலம் வணிகத்திற்கான வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் அவர்கள் சம்மதித்துள்ளனர். 

கலாச்சாரக் கூட்டுறவு, மக்கள் நேருக்கு நேராக சந்தித்தல் மற்றும் தொழிலாளர்கள் இடம் பெயர்தல்

23. இந்தியா மற்றும் டென்மார்க்குக்கு இடையிலான ஆழமான உறவு என்பது நீண்டகாலம் இரு நாட்டு மக்களின் நேரடி சந்திப்பால் ஏற்பட்டது என்பதை இரு நாட்டுப் பிரதம மந்திரிகளும் அங்கீகரித்துள்ளனர்.  கலாச்சாரக் கூட்டுறவின் மூலமாக இரு நாடுகளின் மக்களுக்கு இடையில் பரஸ்பரப் புரிதலையும், விழிப்புணர்வையும் மேலும் மேம்படுத்த இருவரும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

24. தொழிலாளர் இடம்பெயரும் வாய்ப்புகளைப் பரிசீலனை செய்ய இருதரப்பும் ஒத்துக் கொண்டுள்ளன.  மக்கள் நேருக்கு நேராக சந்தித்துப் பழகுதல் மற்றும் சுற்றுலாத்துறையில் கூட்டுறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான பயணத்தை எளிமைப்படுத்துவதை கவனத்தில் கொள்ள இரு தரப்பும் சம்மதித்துள்ளன.

 

பலதரப்பு ஒத்துழைப்பு

25.       விதிகள் அடிப்படையிலான பல தரப்பு அமைப்பு ஒன்றை ஆதரிக்கவும், மேம்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்ள இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர். எரிசக்தி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் நிலவும் சவால்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய உலக அளவிலான முயற்சிகளை அதிகரிப்பதற்கான அவசியம், சர்வதேச எரிசக்தி முகமை, சர்வதேச புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி முகமை, சர்வதேச சூரியசக்தி இணைப்பு அமைப்பு ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள பொதுவான பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகியவற்றுக்கான வலுவான பலதரப்பு ஒத்துழைப்பு உட்பட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.

26.       உலக அளவிலான வளர்ச்சியையும், தொடர் மேம்பாட்டையும் அதிகரிப்பதற்காக உலக வர்த்தக அமைப்பின் கீழ் விதி அடிப்படையிலான, வெளிப்படையான, அனைத்தையும் உள்ளடக்கிய, பல தரப்பு வர்த்தக அமைப்பை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பின் அவசியத்திற்கு இருதரப்பும் ஆதரவளித்தன.

27.       உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்காக நடந்து கொண்டிருக்கும் விவாதங்களுக்கு இருதரப்பும் தங்களது ஆதரவைத் தெரிவித்தன. உலக வர்த்தக அமைப்பின் விரிவான சீர்திருத்தங்களுக்கு பங்காற்றவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இருதரப்பும் மீண்டும் உறுதியளித்தன. சீர்திருத்தங்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், உலக வர்த்தக அமைப்பின் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கும் இரட்டை அடுக்கு அமைப்பின் ஒரு பகுதியாக முழு வலிமை கொண்ட மேல் தீர்ப்பாய அமைப்பை மீண்டும் கொண்டு வர அதிக முன்னுரிமை அளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

 

28.       ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழமாகவும், வலுவாகவும் அமைக்க லட்சியங்கள் கொண்ட நியாயமான பரஸ்பர நன்மைகள் பயக்கின்ற வர்த்தக முதலீட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளில், தங்களுக்குள்ள பொறுப்புணர்வை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

 

29.       ஆர்க்டிக் கவுன்சில் வரையறைப்படி ஆர்க்டிக் ஒத்துழைப்புக்கு உலக அளவிலான பரிமாணம் உள்ளது என்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கும் இது அவசியம் என்றும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. பருவநிலை மாற்றம் குறித்து ஆர்க்டிக் கவுன்சில் வரையறைக்குட்பட்டு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக இருதரப்பும் தெரிவித்தன.

 

30.       மனித உரிமைகள், மக்களாட்சி, சட்டவிதிகள் ஆகியவற்றின் மதிப்புகளை இரு தலைவர்களும் அங்கீகரித்தனர். மக்களாட்சியையும், மனித உரிமைகளையும் மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு தரப்புகளில் ஒத்துழைக்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

முடிவு

31.       இந்தியக் குடியரசுக்கும், டென்மார்க் அரசுக்கும் இடையே பசுமை உத்தி கூட்டு ஒப்பந்தத்தை நிறுவுவது என்று இரு நாடுகளும் எடுத்த முடிவு, இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே நிலவிவரும் நட்பு ரீதியிலான, ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளதாக இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

32.       லட்சியங்களுடன் கூடிய குறிக்கோள்களும் அதற்கான செயல்களும் வகுக்கப்பட்டு செயல் திட்டத்தில் வரையறுக்கப்பட்டு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக திட்டமிடப்படும்