மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,
இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கு இடையேயான 7-வது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் உங்களையும், உங்கள் தூதுக்குழுவினரையும் அன்பாக வரவேற்கிறேன்.
மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,
இந்தியாவுக்கு உங்களது மூன்றாவது பயணம் இது. அதிர்ஷ்டவசமாக, இது எனது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் இந்திய-ஜெர்மனி அரசு கூட்டமாகும். ஒரு வகையில் இது நமது நட்புறவின் மும்முனைக் கொண்டாட்டம்.
மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,
2022-ம் ஆண்டில், பெர்லினில் நடைபெற்ற அரசுகளுக்கு இடையிலான ஆலோசனையின் போது, இருதரப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய முடிவுகளை நாம் எடுத்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது ஒத்துழைப்பில் பல்வேறு துறைகளில் ஊக்கமளிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை, நீடித்த வளர்ச்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.
மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,
பதற்றம், மோதல், மற்றும் நிச்சயமற்ற காலகட்டத்தில் உலகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் குறித்து கவலைகள் உள்ளன. இதுபோன்ற நேரங்களில், இந்தியா-ஜெர்மனி இடையேயான ராஜதந்திர ஒத்துழைப்பு வலுவாக உருவெடுத்துள்ளது.
இது கொடுக்கல் வாங்கல் உறவு அல்ல; இது இரண்டு திறமையான, வலுவான ஜனநாயகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பாகும். இது மனிதகுலத்திற்கான நிலையான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க பங்களிக்கும் ஒரு ஒத்துழைப்பாகும்.
அந்த வகையில், கடந்த வாரம் நீங்கள் வெளியிட்ட இந்தியா தொடர்பான செயல்திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது.
மதிப்பிற்குரிய ஜெர்மனி பிரதமர் அவர்களே,
நமது நட்புறவை விரிவுபடுத்தவும், உயர்த்தவும் பல புதிய, முக்கியமான முன்முயற்சிகளை நாம் எடுத்து வருகிறோம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் முழு அரசு அணுகுமுறையிலிருந்து முழு தேச அணுகுமுறைக்கு நகர்கிறோம்.
இரு நாடுகளிலும் உள்ள தொழில்கள் புதிய கண்டுபிடிப்பாளர்களையும், இளம் திறமைசாலிகளையும் இணைக்கின்றன. தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்குவது என்பது நமது பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகும். தற்போது புதிய தொழில்நுட்பத்திற்கான செயல் திட்டம் வெளியிடப்படுகிறது. இது செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், தூய்மையான எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
நாம் சமீபத்தில் ஜெர்மன் வர்த்தகத்தின் ஆசிய-பசிபிக் மாநாட்டில் பங்கேற்றுள்ளோம், விரைவில், தலைமை நிர்வாக அதிகாரிகள் அமைப்பிலும் பங்கேற்க உள்ளோம். இது நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். நமது பொருளாதாரங்களை பன்முகப்படுத்தவும், ஆபத்தைக் குறைக்கவும் நமது முயற்சிகள் வேகம் பெறும். இது பாதுகாப்பான, நம்பகமான விநியோக மதிப்புச் சங்கிலிகளை உருவாக்க உதவும்.
பருவநிலை நடவடிக்கைக்கான நமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உலகளாவிய முதலீட்டிற்கான தளத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இன்று, பசுமை ஹைட்ரஜன் செயல்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே கல்வி, திறன் மேம்பாடு போக்குவரத்து ஆகியவை முன்னேறி வருவது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஜெர்மனி வெளியிட்டுள்ள திறன் பெற்ற தொழிலாளர் உத்தியை நாங்கள் வரவேற்கிறோம். இன்றைய கூட்டம் நமது ஒத்துழைப்பை புதிய உச்சத்திற்கு உயர்த்தும் என்று நான் நம்புகிறேன்.
நான் இப்போது உங்கள் எண்ணங்களைக் கேட்க விரும்புகிறேன்.
அதன்பிறகு, பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வளர்க்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எனது சகாக்கள் எங்களுக்கு விளக்குவார்கள்.
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உங்களுக்கும், உங்களது தூதுக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை அன்பான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத் துறப்பு – இது பிரதமர் ஆற்றிய உரையின் உத்தேசமான மொழிப்பெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
=========
TS/PLM/RS/KR/DL
Speaking during meeting with Chancellor Scholz. @Bundeskanzler https://t.co/Fzm87UWMYH
— Narendra Modi (@narendramodi) October 25, 2024