Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-அமெரிக்கா இடையே உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

இந்தியா-அமெரிக்கா இடையே உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு


வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா இடையேயான உயர் தொழில்நுட்ப ஒத்துழைப்பு நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர்  திரு ஜோசப் ஆர். பைடனும் பங்கேற்றனர். இந்நிகழ்வை அமெரிக்க வர்த்தக அமைச்சர் திருமதி ஜினா ரைமண்டோ ஒருங்கிணைத்தார். இதில்  இந்திய, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களின் முன்னணித் தலைமை நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். ‘அனைவருக்குமான செயற்கை நுண்ணறிவு’, ‘மனிதகுலத்திற்கான உற்பத்தி’ என்பதில் கவனம் செலுத்துவது இந்த நிகழ்வின் கருப்பொருளாக இருந்தது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆய்வுசெய்ய இரு தலைவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. தங்களின் குடிமக்கள் மற்றும் உலகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் அனைவரையும்  உள்ளடக்கிய பொருளாதாரத்தை செயல்படுத்துவதில்  இந்தியா-அமெரிக்க தொழில்நுட்ப  ஒத்துழைப்பின் பங்கு மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதங்கள் கவனம் செலுத்தின. இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பில் இந்தியா மேற்கொண்ட முன்னேற்றங்கள் என்பதுடன் உலகளாவிய ஒத்துழைப்புகளைக் கட்டமைக்க, இரண்டு தொழில்நுட்ப சூழல் அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். உத்திகள் வகுத்தலில் ஒருங்கிணைப்பு, தரநிலைகளில் ஒத்துழைப்பு,  புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றைத் தொடங்க அந்தந்தத் தொழில்களுக்கு இடையே வழக்கமான ஈடுபாட்டிற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பயன்படுத்துவதற்குரிய மகத்தான திறனைப்  பிரதமர் தமது பேச்சில் அடிக்கோடிட்டுக் காட்டினார். புதிய கண்டுபிடிப்பு  கலாச்சாரத்தை வளர்ப்பதில் இந்தியாவின் திறமைமிக்க இளைஞர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார். உயிரித்தொழில்நுட்பம், குவாண்டம் உள்ளிட்ட புதிய துறைகளுக்கு இந்திய-அமெரிக்கத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்த உதவுமாறு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அதிபர் பைடன் அழைப்பு விடுத்தார். இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பு  நமது மக்களுக்கும் உலகிற்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பின்வரும் தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவிலிருந்து:

1. ரேவதி அத்வைதி, சி இ ஓ,  ஃப்ளெக்ஸ்

2. சாம் ஆல்ட்மேன், சி இ ஓ, ஓபென்ஏஐ

3. மார்க் டக்ளஸ், தலைவர் மற்றும் சி இ ஓ, எஃப்எம்சி கார்ப்பரேஷன்

4. லிசா சூ, சி இ ஓ, ஏஎம்டி

5. வில் மார்ஷல், சி இ ஓ, பிளானட் லேப்ஸ்

6. சத்யா நாதெள்ளா, சி இ ஓ, மைக்ரோசாஃப்ட்

7. சுந்தர் பிச்சை, சி இ ஓ, கூகுள்

8. ஹேமந்த் தனேஜா, சி இ ஓ மற்றும் நிர்வாக இயக்குநர், ஜெனரல் கேடலிஸ்ட்

9. தாமஸ் டுல், நிறுவனர், டுல்கோ எல்எல்சி 

10.சுனிதா வில்லியம்ஸ், நாசா விண்வெளி வீராங்கனை

இந்தியாவிலிருந்து:

1. திரு ஆனந்த் மஹிந்திரா, தலைவர், மஹிந்திரா குழுமம்

2. திரு முகேஷ் அம்பானி, தலைவர் & எம்டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்

3. திரு நிக்கில் காமத், இணை-நிறுவனர், ஜெரோதா & ட்ரூ பீகான்  

4. திருமதி விருந்தா கபூர், இணை-நிறுவனர்,  3 வது ஐடெக்

***

AD/SMB/DL