Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரெட்களும் ஒருவருக்கொருவர் உயர் முன்னுரிமை உடையவை: மோடி


நவீன உலகத்தை உருவாக்கும் சக்திகளைப் புரிந்து கொள்ளும் தைரியமான  தொலைநோக்கும் திறனும் கொண்டுள்ள ஐக்கிய அரபு எமிரெட், (UAE,) தலைவர்களைத் தாம் மிகவும் நேசித்து பாராட்டுவதால் அவர்களுக்கு செய்தி வெளியிட தமக்கு உரிமை இல்லை என்று மோடி கூறியுள்ளார்?

ஐக்கிய அரபு எமிரெட்டுகளுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமது முதலாவது பயணத்தில் இன்று அபுதாபி சென்றடையும் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மிக விரைவாக வளர்ந்து வரும் அரபு பொருளாதாரமான UAE –உடனும் அதன் தொலைநோக்கு மற்றும் ஆக்கபூர்வ தலைவர்களுடனும் முக்கியமான ஒத்துழைப்பை, குறிப்பாக பாதுகாப்பு, எரிசக்தி, முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள உயர்பாதுகாப்பு கொண்ட தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் “காலீஜ் டைம்ஸ்” பத்திரிகைக்கு பேட்டி அளித்த மோடி, “UAE – யை சிறிய இந்தியா என்று வருணித்து அங்கே தமது நாட்டின் அனைத்து மொழிகளும் துணை மொழிகளும் அங்கு வாழும் 26 லட்சம் இந்தியர்களால் பேசப்படுவதால் தன் மனத்துக்கு நெருக்கமானது” என்று குறிப்பிட்டார்.

ஆழமான வரலாற்று இணைப்புகள் கொண்ட இரு நாடுகளும் இணைந்து சாதிக்கக் கூடியவை பற்றி விரிவாகப் பேசிய அவர், UAE – ஐ இந்தியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு நெருக்கமான கூட்டாளியாக பார்க்க விரும்புவதாகவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் இவ்வாறு பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.

ஒட்டு மொத்தப் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் முன்னேறி வரும் நிலையில் UAE – ல் உள்ள இந்தியர்கள் தங்களது தாய்நாட்டை முதலீட்டுக்கும் சேமிப்புக்கும் மிகச் சிறந்த, நிலையான, பாதுகாப்பான இடமாக காண்பார்கள் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

UAE – யின் சிறப்பான சாதனைகள் குறித்து வியப்புடன் பாராட்டுவதாகக் குறிப்பிட்ட அவர், “அந்த நாடு இணையில்லாத தொலைநோக்கு, குறிப்பிடத்தக்க சிறப்புத்திறன் ஆகியவற்றினால்  பாலைவனத்தில் கட்டப்பட்ட சொர்க்கம்” என்று வருணித்தார். அவரது பேட்டி:

26 லட்சம் இந்திய வம்சா வளியினர் குடியிருக்கும் ஒரு நாட்டிற்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வருகை தரும் இந்தியப் பிரதமர் ஆகிறீர்கள். சமீப காலத்தில் UAE இந்தியாவால் வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டதா ?

UAE – க்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் வருகை தருவது காலத்தின் மாறுபாடு. நாம் ஆழமான வரலாற்று இணைப்பையும் இணையற்ற உறவுகளையும் பெற்றுள்ளோம். நாம் ஒருவருக்கொருவர் அருகிலேயே அமைந்துள்ளோம். சமயம், பண்பாடு, வர்த்தகம் ஆகியன நம்மிடையே தொடர்ச்சியான இணைப்பை ஏற்படுத்துகின்றன. நாம் இருவரும் பல்வேறு பண்பாடுகள் பல்வேறு சமுதாயங்கள் கொண்ட அமைப்புகளாகும். நாம் பரஸ்பரம் வர்த்தகத்தில் முதல் மூன்று உயர்நிலைக் கூட்டாளிகளாக இருக்கிறோம். இந்தியாவுடன் விமான இணைப்புகளைப் பொருத்தவரை UAEதான் அதிகமான இணைப்புக் கொண்ட நாடு. UAE – யில் வசிக்கும் 26 லட்சம் இந்தியா நாட்டவர்கள் நம்மிடையே அழிக்க முடியாத மனித இணைப்பை ஏற்படுத்தி உள்ளனர். சமீபத்திய 10 ஆண்டுகளில் UAE – யின் தலைமை இந்த நாட்டை உலகத்தின் முன்னணி நாடாக செய்துள்ளது. இந்தியாவும் உலக சக்திகளில் ஒரு பெரிய சக்தியாகவும் உலகப் பொருளாதாரத்தில் புதிய எல்லையாகவும் உருவெடுத்துள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம் உள்ளிட்ட மண்டலத்தின் பொதுவான பாதுகாப்பு முக்கிய கவனம் பெரும் பிரச்சினைகள் ஆகியவை நம் இரு நாடுகளுக்கும் பொதுவானவை.

எனவே, இந்தியாவும் UAE – ம் ஒன்றுக்கு ஒன்று உயர் முன்னுரிமை நாடுகளாக இருக்க அனைத்துத் தகுதிகளும் கொண்டவை. இந்தக் கண்ணோட்டத்துடன்தான் நான் UAE – ஐ பார்க்கிறேன். வளைகுடாப் பகுதி இந்தியாவின் பொருளாதார, எரிசக்தி, பாதுகாப்பு, அக்கறையுள்ள விஷயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனது மண்டலப் பயணத்தை UAE-உடன் தொடங்குகிறேன். இது அந்த நாட்டுக்கு நான் எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தும். அந்த நாட்டுடன் உயர்நிலை தொடர்புகளை முறையாக பராமரித்து வலுவான, விரிவான முக்கிய ஒத்துழைப்பை உருவாக்கவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

இந்தியாவின் பொருளாதாரம், புவி பொருளாதார ஆர்வங்கள் அடிப்படையில் ஈரான் ஒப்பந்தத்தை எவ்வாறு காண்கிறீர்கள் ?

இந்த மண்டலத்தின் இதர நாடுகளைப் போல இந்தியா ஈரானுடன் பல நூற்றாண்டுகள் தொன்மையான நெருங்கிய நாகரீக உறவுகளைக் கொண்டுள்ளது. எமக்கு ஈரானுடன் வலுவான பொருளாதார எரிசக்தி நலன்கள் உள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா ஆகியவற்றுடன் ஆன இந்தியாவின் இணைப்புக்கு ஈரான் மிக முக்கியமானது. மண்டலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் அணுசக்திப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு காண்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் மண்டலத்தின் நிலைத் தன்மையைப் பாதிக்காது என்று நம்புகிறோம். பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் மண்டலத்தில் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு நடைமுறையைத் தொடங்கி நிரந்தர அமைதிக்கும் நிலைத்த தன்மைக்கும் பாடுபடுவோம்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா – UAE உறவுகள் எந்த நிலையில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் ?

 

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி இரு நாடுகளுக்கும் இடையே விரிவான முக்கியமான ஒத்துழைப்பு உருவாக வேண்டும் என விரும்புகிறேன். UAE – ஐ எமது முன்னணி வர்த்தக முதலீட்டு கூட்டாளியாகப் பார்க்க விரும்புகிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தின் உயர்நிலைகளில் சேர்ந்து உழைக்க விரும்புகிறோம். பாதுகாப்பு சவால்களின் முழு நிலையிலும் முறையான திறம்பட்ட ஒத்துழைப்பை உருவாக்க விரும்புகிறோம். இரு நாடுகளின் ஆயுதப் படைகளும் அடிக்கடி இணைந்து பயிற்சி மேற்கொள்ளும். நம்மிடையே உள்ள பண்பாட்டு கல்வி இணைப்புகளைப் பராமரித்து வளர்க்க விரும்புகிறோம். நமது உறவுகளில் வரம்புகள் ஏதும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் ஒவ்வொரு அம்சத்திலும் ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவு செய்ய விரும்புகிறோம்.

 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் குறித்து உங்கள் சிந்தனைகள் என்ன ?

 

துபாய் பல ஆண்டுகளாக அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நான் தொடர்ந்து கேள்விப்படுகிறேன். எனினும் அந்த நாட்டில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரதமர் என்ற முறையில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு நான் UAE செல்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் அந்த நாட்டுக்கு இது எனது முதல் பயணம். இத்தகைய பாலைவனத்தில் இப்படி ஒரு சொர்க்கம்  எப்படி உருவானது என்று நான் சிந்திப்பது உண்டு. என்ன தொலைநோக்கு ! என்ன குறிப்பிடத்தக்க திறன்கள்!

 

இரண்டாவதாக, நான் பிரதமர் ஆன பிறகு அறிந்து கொண்டிருப்பது நாடுகளிடையே முதலில் அரசு நிலை நெருங்கிய உறவுகள் ஏற்படுகின்றன, அதனைத் தொடர்ந்துதான் இரு மக்களுக்கிடையேயான தொடர்பு ஏற்படுகிறது. எனினும் UAE – ஐப் பொறுத்தவரை அந்த நாட்டுடன் நெருங்கிய மக்களுக்கிடையேயான தொடர்பு உள்ளது. அரசுகளுக்கிடையே சற்று இடைவெளி உள்ளது. இது சரியான பொருத்தம் அல்ல. ராஜீயக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இது சரியாகப்படவில்லை. இது மாற வேண்டும். எனது பயணம் இதிலும் வெற்றி அடையும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் பயணத்துக்கு அழைப்பு விடுத்த அபுதாபி, துபாய் ஆட்சியாளர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

UAE தலைமைக்கு என்ன முக்கியச் செய்தியைத் தர விரும்புகிறீர்கள்?

 

UAE அரசுக்கு செய்திதரும் உரிமை எனக்கு இல்லை. முதலாவதாக கவனிக்க வேண்டியது 34 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் ஒருவர் அங்கு பயணம் மேற்கொள்ளுவது இது முதல் முறை. இரண்டாவதாக UAE தலைமையை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களது தொலைநோக்கு, அவர்களது திறன்கள், நவீன உலகத்தை உருவாக்கும் சக்திகளை அவர்கள் அறிந்து கொள்ளும் முறை ஆகியவை பற்றி வியப்பான தகவல்களை கேள்விப்படுகிறோம். இந்நிலையில் அவர்களுக்குச் செய்தி அளிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால் நமது நட்புறவு ஆழமாக வேண்டும், நமது நட்புறவு விரிவாக வேண்டும், இந்தியா – UAE உறவுகள் முக்கிய ஒத்துழைப்பு உறவாக பரிணமிக்க வேண்டும் என்றெல்லம் விரும்புகிறேன்.

இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் பேசப்படும் மொழிகளெல்லாம் UAE –லும் பேசப்படுகின்றன. சொல்லப் போனால் UAE ஒரு சிறிய இந்தியா எனலாம். இந்தியச் சமுதாயத்தினர் UAE – ல் மிகவும் அன்பாக அரவணைக்கப்படுகின்றனர். இரு சமுதாயத்தினரும் இணைந்து உழைப்பது ஒரு சிறப்பு உறவைக் குறிப்பதாக உள்ளது. ஒவ்வொரு நொடியிலும் இந்தியாவுடன் இணைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். உலகம் இந்திய சமுதாயத்தினரின் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ளும் என நம்புகிறேன்.  இந்த தொழிலாளர் படை கடந்த 30, 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. குடி பெயர்ந்து வந்த சமுதாயத்தினர் குடியேறிய நாடுகளில் வாழ்ந்து அங்கே எவ்வாறு அதன் ஒரு பகுதியாக மாறுவது என்பதற்கு அவர்கள் உதாரணமாக விளங்குகின்றனர்.

 

பிரதமர் ஆன பிறகு நீங்கள் பல நாடுகளில் பயணம் செய்து குடிபெயர்ந்த இந்திய சமுதாயத்தினரைச் சந்தித்து வருகிறீர்கள். UAE – ல் உள்ள இந்திய சமுதாயத்தினர் எவ்வகையில் சிறப்பானவர்கள் என்பதை விவரிக்க முடியுமா? இம்முறை வளைகுடா நாட்டை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

 

21 – ம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்பதை முழு உலகமும் ஏற்றுக் கொள்கிறது. ஆசியாவில் UAE – க்கு தனியான இடம் உண்டு. இந்தியா எண்ணிக்கையைப் பொறுத்தவரை மிகப் பெரியநாடு. ஆசியா  உயர வேண்டுமானால் ஆசியாவிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அவர்களுடன் இணைந்து உழைத்து ஆசிய நூற்றாண்டை சாத்தியமாக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.

 

இரண்டாவதாக, மேம்பாட்டு நடைமுறைகள் முன்பு ஒரு சவாலாகவே இருந்தன. இன்றைய நிலையில் மேம்பாட்டு வடிவமே ஒரு சவாலாக உள்ளது. மேலும் பயங்கரவாதம் மனித குலத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்துள்ளது. எனவே மனித நேயத்தில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடுகளும் கால தாமதமின்றி ஒன்றாக நிற்க வேண்டும். பயங்கரவாத சக்தியை முறியடிக்க இது மிகவும் அவசியமானதாகும்.

எனது பயணத்தின் கால நிர்ணயம் பற்றி நான் எப்போதெல்லாம் பயணப்படுகின்றேனோ அப்போதெல்லாம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. எனக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து எனது பயண அட்டவணையைச் சரி செய்து கொள்கிறேன். மேலும் UAE – ல் சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்யலாம் என்ற கூடுதல் அனுகூலமும் உள்ளது.

KT2872815 [ PM India 40KB ]
காலீஜ் டைம்ஸ் பத்திரிகையின்  இணை வர்த்தக ஆசிரியர் ஐசக் ஜான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவுப் பரிசு அளிக்கிறார்.