இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்கும், பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் (பிஎம்ஜிஎஃப்) நிறுவனத்துக்கும் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கென 2019 நவம்பர் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்தது. பிஎம்ஜிஎஃப் இணைத் தலைவரும், அறங்காவலருமான திரு.பில் கேட்ஸ் புதுதில்லியில் பயணம் மேற்கொண்ட போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கீழ்கண்ட துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்கிறது:
(a) அத்தியாவசியமான ஆரம்ப சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துகள் தருதல், சத்துணவு சேவைகள் ஆகியவற்றின் செயல்பரப்பு, சென்றடையும் திறன், தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பேறுகாலத்தின் போதும், குழந்தை பிறந்தவுடனும், கைக்குழந்தைகள் இறப்பு வீதத்தை குறைத்து முக்கிய ஊட்டச்சத்து பலன்களை மேம்படுத்துதல்
(b) குடும்பக் கட்டுப்பாடு முறைகளில் குறிப்பாக மாற்றியமைக்கத்தக்க முறைகளில், தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளையும், தரத்தையும் அதிகரித்தல் மற்றும் இளம் பெண்களுக்கு இந்த முறைகள் கிடைக்கச் செய்வதை அதிகரித்தல்.
(c) தெரிவு செய்யப்பட்ட நோய் தொற்றுகளால் [காசநோய், உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் (விஎல்), நிணநீர் யானைக்கால் (எல்எஃப்)] ஏற்படும் பளுவை குறைத்தல்
(d) பட்ஜெட் பயன்பாடு, மேலாண்மை, சுகாதாரத் துறையில் பணியாளர் திறன்கள், டிஜிட்டல் சுகாதாரம், விநியோக சங்கிலி மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகிய அம்சங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்பு முறையை வலுப்படுத்துதல்
ஒத்துழைப்பு விவரங்களை மேலும் விரிவாக்குவதற்கு திட்ட செயல்குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு ஒத்துழைப்பு ஒப்பந்த அமலாக்கத்தையும் மேற்பார்வையிடும்.
*****