Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையில் விமான சேவைகள் ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையில் விமான சேவைகள் ஒப்பந்தம் (ASA) கையெழுத்திடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளைக் கருத்தில் கொண்டும், இரு நாடுகளுக்கும் இடையில் விமான தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்துடனும், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) சமீபத்திய வரையறைகளின் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் அமைந்துள்ளது. இப்போது இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகள் ஒப்பந்தம் எதுவும் இல்லை. இரு நாடுகளுக்கு இடையில் எந்த விமான சேவை தொடங்குவதற்கும் ASA என்பது அடிப்படையான சட்டபூர்வ ஏற்பாடாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் விமான தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

விமான சேவைகள் ஒப்பந்தத்தின் அம்சங்கள் பின்வருமாறு :

i. இரு நாடுகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்களை அறிவிக்கலாம்.

ii. இப்போது இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும், ஜார்ஜியாவில் எந்த இடத்துக்கும் இந்திய விமான நிறுவனங்கள் விமானங்கள் இயக்கலாம். அதே சமயத்தில் ஜார்ஜிய விமானங்கள் இந்தியாவில் ஆறு இடங்களுக்கு, அதாவது புதுடெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சென்னை மற்றும் கோவா நகரங்களுக்கு நேரடி விமான சேவை அளிக்கலாம். இதைத் தவிர, வழித்தடங்களை மாற்றிக் கொள்வதன் மூலம், இடைப்பட்ட இடங்களுக்கும் அல்லது சேருமிடத்தைத் தாண்டிய இடங்களுக்கும் இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்ட விமானங்கள் சேவை அளிக்கலாம்.

iii. விமான சேவைகளை ஊக்குவித்தல் மற்றும் விற்பனைக்காக இரு நாடுகளின் அறிவிக்கப்பட்ட விமான நிறுவனங்களும், அடுத்த நாட்டின் எல்லையில் தங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு உரிமை உண்டு.

iv. இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்ட விமான நிறுவனம், அதே தரப்பு, மறு தரப்பு அல்லது மூன்றாவது தரப்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தாருடன் கூட்டுறவு மார்க்கெட்டிங் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். இந்த விஷயத்தில், அது நேரடி தொடர்பை மட்டும் ஊக்குவிக்காமல், 3வது நாட்டு நிறுவனத்தின் மூலமும் தொடர்பை அளிக்கும். இரு நாடுகளின் நிறுவனங்களுக்கும் சாத்தியமான வாய்ப்புகளை அது அளிக்கும்.

பெருமளவு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை வேகப்படுத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையிலான விமான சேவைகள் ஒப்பந்தம் அளிக்கும். சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் மேம்பாடுகளுக்கு இயைந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் மேற்படி விஷயங்கள் துரிதப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பெருமளவு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்து, இரு தரப்புகளின் விமான நிறுவனங்களுக்கும் வணிக வாய்ப்புகளை அளிப்பதுடன், மேம்படுத்தப்பட்ட மற்றும் தடையற்ற தொடர்புக்கான சூழலை இது அளிக்கும்.