Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” வாரக் கொண்டாட்டத்தை மும்பையில் துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” வாரக் கொண்டாட்டத்தை  மும்பையில் துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

“இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” வாரக் கொண்டாட்டத்தை  மும்பையில் துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


மாண்புமிகு சுவீடன் பிரதமர் அவர்களே,

மாண்புமிகு பின்லாந்து பிரதமர் அவர்களே,

மாண்புமிகு போலந்து துணைப் பிரதமர் அவர்களே,

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள அமைச்சர்களே, மாண்பு மிக்கோரே பெருமை மிக்கோரே,

மகாராஷ்டிரா மாநில ஆளுநர் அவர்களே,

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அவர்களே,

வர்த்தகத் தொழில் துறை இணை அமைச்சர் அவர்களே,

அழைப்பாளர்களே, தொழில் துறை தலைவர்களே, சீமாட்டிகளே

கனவான்களே!

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் வாரக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வந்துள்ள நமது நண்பர்களை வரவேற்கிறேன், அவர்களது தீவிர பங்கேற்புக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மகாராஷ்டிர மாநில அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கேற்றுள்ள இதர மாநிலங்களுக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

நண்பர்களே!

ஓராண்டுக்கு முன் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் தொடங்கப்பட்டதை பின் நோக்கி பார்க்கும் போது நமது இளைஞர்களின் உள்ளக் கிடக்கைகளையும் நான் நினைவு கூர்கிறேன். இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்கும் கீழ்பட்டவர்கள். இந்த இளமை மிகு ஆற்றல் தான் நமது மிகப்பெரிய சக்தி.

நாம் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கவும் சுய வேலைவாய்ப்பு உருவாக்கவும் தொடங்கினோம். இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கி நாம் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜி.டி.பி) உற்பத்தி துறையின் பங்கு அடுத்த சில ஆண்டுகளில் 25 சதவீதமாக உயர வேண்டும் என விரும்புகிறோம்.

இந்த இயக்கத்தின் தாக்கம் காரணமாக அரசு எந்திரத்தின் கொள்கைகளைப் பொறுத்தவரை ஏராளமான திருத்தங்களைச் செய்ய வேண்டி இருக்கும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம்.

இந்தியாவை வர்த்தகம் புரிவதற்கு எளிதான இடமாக மாற்ற நாம் உறுதி பூண்டுள்ளோம்.

உற்பத்தி, வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு ஆகியவற்றின் அடித்தளம் என்ற வகையில் இந்தியா வழங்கும் மிகப் பெரிய வாய்ப்புகளை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்ட விரும்புகிறோம்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் வாரக் கொண்டாட்டம் நாம் எவ்வாறு செயல் பட்டுள்ளோம் என்பதை கணக்கெடுக்க ஒரு வாய்ப்பளித்துள்ளது. மேலும் செல்ல வேண்டிய பாதை என்ன என்பதை அறியவும் இது உதவுகிறது.

நாம் அடைந்துள்ள வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களைக் காட்சிப் படுத்த இந்த நிகழ்ச்சி பயன்படும். இதுதான் இந்தியாவில் இதுவரை நடைபெற்ற மிகப்பெரிய பல துறை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியாகும். இந்தியா எடுத்துள்ள திசையை நீங்களே பார்த்துக் கொள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓராண்டு காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டம் இந்தியா முன் எப்போதும் ஏற்படுத்தாத பெரிய வர்த்தகச் சின்னமாக ஆகி உள்ளது. நாட்டிற்குள்ளேயும் வெளியேயும் இந்த திட்டம் மக்கள், நிறுவனங்கள், தொழில் துறை, தகவல் ஊடகங்கள், அரசியல் தலைமை ஆகியவற்றின் மனதில் இடம் பிடித்துள்ளது.

அது ஏன் என்றால் :

• உற்பத்தி செயல்பாடுகளில் ஒன்றுபட்டு உழைக்கும் நமது விருப்பத்தை அது பிரதிபலிக்கிறது.

• பொருட்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் உலக அவசியத்தையும் அது பிரதிபலிக்கிறது.

• அது நமது தவறுகளை திருத்திக் கொள்ளவும் திறன்பாட்டை மேம்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்துகிறது.

• அது உலகத்தை சமத்துவத்துடன் ஒருங்கிணைக்க நமக்கு தைரியம் அளித்துள்ளது.

நாம் என்ன செய்துள்ளோம் என்பதற்கு சில திடமான உதாரணங்களைத் தர விரும்புகிறேன்.

இன்றைக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியாதான் மிகவும் வெளிப்படையான நாடாகும். அந்நிய நேரடி முதலீட்டுக்கான அநேக துறைகள் தாமாகவே அனுமதி பெறும் மார்க்கத்தில் அமைந்துள்ளன.

எனது அரசு பதவி ஏற்ற நாளுக்கு பிறகு நமது அந்நிய நேரடி முதலீடு வரத்து 48 சதவீதம் உயர்ந்துள்ளது. உண்மையில் பார்த்தால் 2015 டிசம்பர் மாதம் வந்த அந்நிய நேரடி முதலீடு நாட்டிலேயே மிக அதிகமான அளவானதாகும். உலக அந்நிய நேரடி முதலீடுகள் கணிசமாக குறைந்து வரும் இச்சமயத்தில் இது நடந்துள்ளது.

வரித்துறையில் பல்வேறு திருத்தங்களை நாம் செய்திருக்கிறோம். நாம் முன்கூட்டி வரிவிதிப்பை மேற்கொள்ள மாட்டோம் என்று கூறியிருக்கிறோம். அதனையே மீண்டும் உறுதி மொழியாக கூற விழைகிறேன். நமது வரி விதிப்பு முறைகளை வெளிப்படையானதாக, நிலைத்ததாக, முன்கூட்டியே அறிந்து கொள்ளதக்கதாக மாற்றுவதை நோக்கி விரைவாக செயல்பட்டு வருகிறோம்.

வர்த்தம் புரிதலை எளிதாக்குவதற்கு ஒட்டுமொத்த அழுத்தம் கொடுத்துவருகிறோம். உற்பத்தி துறையில் நடைமுறைகளை எளிமைப் படுத்தவும் விதி முறைகளை நியாயப்படுத்தி அமைக்கவும் இறுதியான முடிவுகளை எடுத்திருக்கிறோம். இதில் உரிமம் வழங்குதல், எல்லை தாண்டிய வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி ஆகியன அடங்கும். மின்னணு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்திருக்கிறோம்.

பாதுகாப்புத் துறையில் கணிசமான கொள்கைத் திருத்தங்களை நாம் செய்திருக்கிறோம். உரிமம் வழங்குதலில் இருந்து குறிப்பிட்ட அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யும் முறை (ஆப்செட்) மற்றும் ஏற்றுமதி முறை வரை பாதுகாப்புத் தொழில் துறையினர் எதிர்பார்க்கும் அனைத்தையும் நாம் கொடுத்திருக்கிறோம்.

வெளிப்படையான இலகுவான இயற்கை வளங்கள் ஒதுக்கீடு மற்றொரு உதாரணமாகும். இதன் அனுகூலங்கள் இருவகைப் பட்டவை: ஒன்று, ஒவ்வொரு வளத்தின் உற்பத்தியும் உயர்ந்துள்ளது. மற்றொன்று வளங்களைப் பயன்படுத்துவோர் மற்றும் அக்கறை உள்ளோருக்கு ஒரு சம நிலையில் போட்டியிடும் நிலையை நாம் ஏற்படுத்திய வெளிப்படைத் தன்மை உருவாக்கி உள்ளது.

இந்த ஆணடு மிக உயரிய சாதனை அளவாக நிலக்கரி உற்பத்தி இருக்கும். மேலும், 2015-ம் ஆண்டுதான் இந்தியாவின் மிக உயர்ந்த சாதனை அளவான மின்சார உற்பத்தி பதிவாகி உள்ளது.

சொத்துப் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் விஷயத்தில் மத்தியஸ்த நடவடிக்கைகளை கண்காணிக்க நாம் ஏற்கனவே சட்டம் இயற்றி உள்ளோம். உயர்நீதி மன்றங்களில் வர்த்தக பிரிவுகளையும் தனியாக வர்த்தக நீதி மன்றங்களையும் உருவாக்கி வருகிறோம். கம்பெனி சட்ட நடுவர் மன்றம் அமைக்கப்படுவது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

திறம்பட்ட அறிவுசார் சொத்துக்கள் கொள்கையும் பதிவு உரிமை சட்டங்களும் வெகு விரைவில் ஏற்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள திவால்கள் மசோதா சட்டமாக இயற்றப்படும் என நம்புகிறோம்.

எனவே, கொள்கை மற்றும் நடைமுறை ஆகியவற்றை பொருத்தவரை நாம் நமது முறைகளை தூய்மையானவையாகவும் எளிமையானவையாகவும் தாமே முன்வந்து செயல்படுபவையாகவும் வர்த்தகத்திற்க உகந்தவையாகவும் அமைத்திருக்கிறோம்.

குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆட்சி முறை என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஆகையால் ஏறக்குறை தினசரி அடிப்படையில் முதலீடு மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் இடையூறுகளை நீக்குவதற்கு நாம் முயற்சி எடுத்து வருகிறோம்.

மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் மத்திய அரசு நிலையில் மட்டுமின்றி மாநில நிலையிலும் நடைபெறுவது மிகச் சிறந்த ஒன்றாகும். எளிதாக வர்த்தகம் புரிவது, அடிப்படை வசதிகளை இணைப்பது ஆகியவற்றில் மாநிலங்களுக்கு இடையே தற்போது ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இதனுடைய பலன்கள் ஊக்கமளிப்பதாக உள்ளன.

இந்தியா உலகின் விரைவாக வளரும் பொருளாதாரமாகி வருகிறது. இந்த நிதி ஆண்டு இறுதியில் 7 சதவீதத்திற்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருக்கும். சர்வதேசப் பண நிதியம், உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு, ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் இதர நிறுவனங்கள் வரும் நாட்களில் இந்தியாவின் வளர்ச்சி மேலும் அதிகமாக இருக்குமென கணித்துக் கூறியுள்ளன.

2014-15ம் ஆண்டில் உலக வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு 12.5 சதவீதமாகும். உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு அது உலக பொருளாதாரத்தில் பெற்றுள்ள பங்கினைவிட 68 சதவீதம் கூடுதலாகும்.

வேறு சில குறியீடுகளைப்பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

• பல்வேறு உலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களால் தொடர்ச்சியாக இந்தியா மிகச் சிறந்த முதலீட்டு இடமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

• எளிதாக வர்த்தகம் புரிதல் குறித்த உலக வங்கியின் உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 12 தர நிலைகள் உயர்ந்துள்ளது.

• ஐ.நா. வர்த்தக மேம்பாட்டு மாநாட்டு அமைப்பின் முதலீடு கவர்ச்சித் தன்மை தர வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

• உலக பொருளாதார அமைப்பின் உலக போட்டியிடும் தன்மைக் குறியீட்டில் இந்தியா 14 இடங்களைத் தாவி முன்னேறி உள்ளது.

• இந்தியாவின் தரத்தை மூடிஸ் தர நிர்ணய நிறுவனம் பாசிடிவ் என நிலை உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தின் வேகம் நமக்கு நம்பிக்கை அளித்துள்ளது. அது நமது கொள்கைகளையும் நடைமுறைகளையும் எளிதானதாகவும் நட்புறவு கொண்டதாகவும் மாற்றி அமைக்க உத்வேகம் அளிக்கிறது.

இந்த பின்னணியுடன், இந்தியாவை உங்கள் பணி இடமாக, வாழும் இடமாக மாற்றி அமைக்க ஊக்குவிக்கிறேன், அழைப்பு விடுக்கிறேன்.

நண்பர்களே!

அடுத்த தலைமுறை அடிப்படை வசதிகளில் நமது முதலீட்டை அதிகரிக்க நாம் குறிப்பான அக்கறையுடன் இருக்கிறோம். இவற்றில் சாலைகள், துறை முகங்கள், ரயில்வே, விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு, டிஜிட்டல் கட்டமைப்பு, தூய்மையான எரிசக்தி ஆகியவை அடங்கி இருக்கும்.

நமது பள்ளிகள், தொழிலியல் மற்றும் வேளாண்மை அடிப்படை வசதிகள் ஆகியவற்றிலும் நாம் முதலீடு செய்து நமது மக்களுக்கு மேலும் சிறந்த வருவாயையும் வாழ்க்கைத் தரத்தையும் கொடுக்க விரும்புகிறோம்.

இதுவரை நமது அமலாக்கத் திறன்தான் மிகப் பெரிய இடையூறாக இருந்தது. இப்போது நமது நடைமுறையை விரைவுபடுத்தி உள்ளோம். இதன் பயனாக திட்டங்கள் விரைவாக நிறைவேறி பலன்தரத் தொடங்குகின்றன. இந்தியாவின் மிக அதிக அளவிலான புதிய நெடுஞ்சாலை அமைப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது 2015-ல் தான்.

இதே போல ரயில்வே மூலதனச் செலவின உயர்வு இந்த ஆண்டில்தான் மிக அதிகமாகும்.

இவ்வாறாக அடிப்படை வசதி, சமூக அடிப்படை வசதி எதுவானாலும் அவற்றை நாம் மிகமிக திறன்பட்ட முறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் செயல்படுத்தி வருகிறோம்.

மற்றொரு இடையூறு நிதி வழங்குதல் ஆகும். நிதி வழங்குவதை உயர்த்த நாம் புதுமையான வழிகளை பின்பற்ற முயற்சி செய்கிறோம். பொதுத்துறை தனியார் துறை பங்களிப்பு திட்டங்களுக்கு நாம் நமது பசுமை மற்றும் பழுப்பு வண்ணத் திட்டங்களை மேலும் திறந்ததாக செய்துள்ளோம். வலுவான நிதி கட்டுப்பாடு, ஓட்டைகளை அடைத்தல் ஆகியவற்றின் மூலம் அடிப்படை வசதி துறைக்கு மேலும் அதிக ஆதாரங்களை வழங்க முயற்சி மேற் கொண்டுள்ளோம்.

தேசிய முதலீடு மற்றும் அடிப்படை வசதி நிதியத்தையும் நாம் ஏற்படுத்தி உள்ளோம். ரயில், சாலைகள், பாசனத் துறை திட்டங்களுக்கென வரியற்ற அடிப்படை வசதிப் பத்திரங்கள் வெளியிடும் அமைப்பைக் கொண்டு வந்துள்ளோம். இதுபோன்ற நிதி பத்திரங்களை உருவாக்க அநேக நாடுகள், நிதிச் சந்தைகள், நிதியங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பாடுபட்டு வருகிறோம்.

சீமாட்டிகளே, கனவான்களே !

இந்தியா அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட நாடு. நமது நகரங்களில் 50 மெட்ரோ ரயில் அமைப்பை ஏற்படுத்த தயாராகி உள்ளோம். நாம் 50 மில்லியன் வீடுகளைக் கட்டியாக வேண்டும். சாலை, ரயில், நீர்வழிப் பாதைகள் ஆகியவற்றின் தேவைகள் மிக அதிகமாகும். படிப்படியான மாற்றங்களுக்கு போதுமான நேரம் இல்லை. நாம் பெரிய அளவு தாவி முன்னேற விரும்புகிறோம்.

இதனை தூய்மையான பசுமையான வழிகளில் செய்து முடிக்க முடிவு செய்துள்ளோம். எனவே தான் பாரிசில் நடைபெற்ற சி.ஷ.பி 21 மாநாட்டில் நாம் உலக சமுதாயத்திற்கு உறுதி மொழி அளித்திருக்கிறோம். எனவே, நாம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை நோக்கி பெரிய அளவில் அதாவது 175 கிகாவாட்ஸ் அளவிற்கு செல்ல இருக்கிறோம்.

பூஜ்யம் குறைபாடு மற்றும் பூஜ்ய பலன் உற்பத்திக்கு நான் மிகுந்த முக்கியத்துவம் தருகிறேன். மின்சார சிக்கனம், தண்ணீர் மறுசுழற்சி, கழிவிலிருந்து மின்சாரம், தூய்மை இந்தியா, ஆறுகளை தூய்மைப் படுத்துதல் ஆகியவற்றிக்கு உயர்ந்த அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த முயற்சிகள் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கியதாக அமைக்கப்படும். இந்த முயற்சிகள் உங்களுக்கு தொழில்நுட்பம், சேவைகள், மனித ஆற்றல் ஆகியத் துறைகளில் கூடுதல் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும்.

நண்பர்களே!

இந்தியா மூன்று டி-களால் ஆசீர்வதிக்கப்பட்டது. அவையாவன: ஜனநாயகம் (democracy) மக்கள் தொகை (demography) தேவைகள் (demand). இவற்றுடன் மேலும் ஒரு டி-யை சேர்த்துள்ளோம் அதாவது கட்டுப்பாடுகளை நீக்குதல் (deregulation). இன்றைய இந்தியா இந்த 4 பரிமாண இந்தியாவாகும்.

நமது நீதி முறை அமைப்பு சுயேட்சை ஆனது, காலத்தால் சோதிக்கப்பட்டது.

நீங்கள் வேறு எந்த நாட்டிலும் இத்தகையை அனைத்து அம்சங்களையும் காண முடியாது.

இந்த வலிமைகளுடன் இந்தியா உங்களது உற்பத்தி செய்யும், வடிவமைக்கும் திறன்களை தொடங்கவும் சோதிக்கவும் ஒரு திடமான மேடையை வழங்குகிறது. மேலும், எமது கடல்சார் இட அமைப்பு பல்வேறு நாடுகளில் உற்பத்தி பொருட்களைச் சந்தைப் படுத்த வசதியாக உள்ளது.

இந்த பெரிய திறனை பயன்படுத்தி கொள்ள பல புதிய முயற்சிகளை தொடங்கி உள்ளோம். டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா போன்ற இயக்கங்கள் இந்த நடைமுறையில் மக்களை பங்கேற்க தயார்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. தொழில் முனைவுத் திறனை மேம்படுத்துவதற்கு தனியாக நிதித் திட்டங்களை தொடங்கி உள்ளோம். முத்ரா வங்கி மூலம் எவ்வித பிணையமும் இன்றி நாம் கடன் வழங்குகிறோம். இளம் வயதினருக்கு, குறிப்பாக ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோருக்கு நிதி வழங்க வங்கிகளை நாம் வலியுறுத்தி உள்ளோம்.

• இது ஒன்றுதான் மகாத்மா காந்தி அடிகளின் தொழில்களை கிராமத்திலும் குடிசைகளிலும் நடத்துதல் என்ற கனவினை நனவாக்கும்.

• இது ஒன்றுதான் விவசாயத்தில் உள்ள உபரியான வேலைத் திறன்களை இதரத் தொழில்களுக்கு திருப்பி விடுவதன் அவசியம் பற்றிய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் கனவை நனவாக்கும்.

நிமிர்ந்து நில் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நடைமுறையை விரைவில் மேலும் வலுப்படுத்த இருக்கிறோம்.

இன்று உலகில் உறுதியற்ற நிலைமை இருந்த போதிலும் நமது உள்நாட்டு தொழில் துறையினரும் முதலீட்டாளர்களும் நல்ல நம்பிக்கையுடனும் உறுதி பாட்டுடனும் இருப்பதாகவே உணர்கிறேன்.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தை நாம் தொடங்கிய போது நாட்டின் உற்பத்தி வளர்ச்சி 1.7 சதவீதம் தான். இந்த ஆண்டில் இது கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தக் காலாண்டில் உற்பத்தி துறை வளர்ச்சி சுமார் 12.6 சதவீதம் ஆக இருக்குமென எதிர் பார்க்கப்படுகிறது.

• 2016 ஜனவரியில் பி.எம்.ஐ. கூட்டு வெளியீட்டு குறியீட்டு எண் கடந்த 11 மாதங்களில் மிக உயர்ந்த அளவான 53.3 சதவீதமாக உயர்ந்தது.

• கடந்த எட்டு மாதக் காலத்தில் மொத்த முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகமாயிற்று.

• 2015-ல் மிக அதிகமான மோட்டார் வாகன உற்பத்தில் பதிவாகி உள்ளது.

• கடந்த 10 மாதங்களில் 50 புதிய மொபைல் தொலைபேசி தொழிற்சாலைகள் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.

• மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்து 18 மில்லியனாக உள்ளது.
• 2015-ல் 159 மின்னணு அமைப்பு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பிரிவுகள் அமைக்கப்பட்டன.

• சில அமைப்புகளின் மதிப்பீட்டின் படி இந்தியாவின் வேலைச் சந்தை இப்போது மிக வலுவான அடிப்படையில் உள்ளது. உதாரணமாக இந்தியாவிற்கான மான்ஸ்டர் வேலை வாய்ப்பு குறியீடு 2016 ஜனவரியில் 229 என்ற நிலையில் இருந்தது. இது சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தைவிட 52 சதவீதம் கூடுதலாகும்.

இதே போல வர்த்தகத்தைப் பொறுத்தவரை:

• 2015-ல் இந்தியாவின் மிக அதிகமான மென்பொருள் ஏற்றுமதி பதிவானது.

• அதே 2015-ல் நமது பெரிய துறை முகங்கள் மிக அதிக அளவிலான சரக்குகளை கையாண்டு உள்ளன.

இதை மிக நல்ல அறிகுறிகளாகும். நமது தொழில் துறையினருக்கு நட்பு ரீதில் சில ஆலோசனைகளை வழங்க விரும்புகிறேன். காத்திருக்காதீர்கள். ஓய்ந்திருக்காதீர்கள். இந்தியாவில் மிகப் பெரிய அளவு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் பணி புரிய உலக நிறுவனங்களிடையே ஏற்பட்டுள்ள புதிய ஆர்வத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிறுவனங்கள் பல இந்தியக் கூட்டாளிகளுடன் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பை எதிர்பார்த்து உள்ளன. இதில் உயர் தொழில்நுட்ப துறையும் பாதுகாப்பு உற்பத்தி போன்ற உயர் மதிப்பு துறைகளும் அடங்கி உள்ளன. நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் உங்களுக்காக நாங்கள் இரண்டடி எடுத்து வைப்போம் என உறுதி அளிக்கிறேன்.

போட்டியிடும் உலகில் நிர்வாக, தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவது நிலைத்திருப்பதற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமானவை. விண்வெளி ஓடங்கள் முதல் மாசுக் கட்டுப்பாடு வரை : சுகாதாரம் முதல் கல்வி வரை : வேளாண்மை முதல் சேவைகள் வரை : நமது இளம் தொழில் முனைவோரும் தொடக்க நிறுவனங்களும் புதிய விரைந்த தொழில் முனைவிற்கும் வழங்குதலுக்கும் வழிகாட்டி வருகின்றனர். எனது அரசு இவர்களை ஆதரிக்கவும் அவர்களது ஆற்றலை முற்றிலும் பயன்படுத்திக் கொள்ளவும் உறுதி பூண்டுள்ளது. நமது இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருப்பதை விட்டு வேலை வழங்குவோராக மாற வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் நாம் தொடங்குங்கள் இந்தியா இயக்கத்தை தொடங்கி உள்ளோம்.

கீழ்கண்ட பண்புகள் கொண்ட வழிவகைகளை காண்பதில் ஆர்வமாக உள்ளோம்:

• நமது மனங்கள் நமது கைகளுக்கு அதிகாரம் வழங்கக் கூடியவை.
• நமது கைகள் எந்திரங்களை கையாளும் திறன் உள்ளவை.

• நமது எந்திரங்கள் மிகச் சிறந்தவற்றை உற்பத்தி செய்யும் திறன் உள்ளவை.

• நமது உற்பத்தி பொருட்கள் இதர பொருட்களை தோற்கடிக்க வல்லவை.

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கம் சாதாரண மனிதனின் நிறைவேற்றப்படாத தேவைகளை நிறைவேற்ற உருவாக்கப்பட்டது. அது வேலையற்றோரை பயன்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியும்கூட. நானும் மனித மற்றும் துறை சார்ந்த தேவைகள் நிறைவேற்றப்படக் கூடும் என்பதால் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தை வலியுறுத்துகிறேன். பல உலக நிறுவனங்கள் தங்கள் அமைவிட திட்டம் குறித்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறாக இந்த இயக்கம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி உலக நிலவரத்தை பிரகாசமாக்கும் திறனை பெற்றுள்ளது.

நண்பர்களே!

இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என நான் சொல்லி வருகிறேன். உங்களுக்கு இந்த நூற்றாண்டை உங்கள் நூற்றாண்டாக மாற்ற விரும்பினால் இந்தியாவை உங்கள் மையம் ஆக்கிக்கொள்ளுங்கள் என்பதே எனது ஆலோசனை. இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரையும் மற்றும் இங்கே இல்லாதவர்களையும் இந்தியாவின் வளர்ச்சிக் கதையுடன் இணைத்துக் கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

• இந்தியாவில் இருப்பதற்கு இதுவே மிகச் சிறந்த தருணம்.

• அதைவிடச் சிறந்தது இந்தியாவில் உற்பத்தி செய்வதுதான்.

அனைவருக்கும் நன்றி!

******