Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தை கேரளாவில் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

இந்தியாவின் முதலாவது பிரத்யேக சர்வதேச கப்பல் துறைமுகத்தை கேரளாவில் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை


கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், முதல்வர் திரு பினராயி விஜயன், மத்திய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மாநில அமைச்சர் திரு. மன்சுக் மான்டவியா அவர்களே, இணை அமைச்சர் திரு. முரளிதரன் அவர்களே,

மேடையில் உள்ள மதிப்புக்குரியவர்களே,

நண்பர்களே,

கொச்சிக்கு நமஸ்காரம். கேரளாவுக்கு நமஸ்காரம். அரபிக் கடலின் ராணி எப்போதும் அழகானதாக உள்ளது. உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சியைக் கொண்டாடுவதற்காக நாம் இன்றைக்கு ஒன்று கூடியிருக்கிறோம். கேரளாவின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியைக் கொண்டாடுகிறோம். இன்று தொடங்கப்படும் பணிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்தவையாக உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கு உந்துதல் தருபவையாக இவை இருக்கும்.

நண்பர்களே,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குச் சென்றேன். இந்தியாவில் மிக நவீனமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக அது உள்ளது. இன்றைக்கு, கொச்சியில் மீண்டும் ஒரு சேவையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம்: கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெட்ரோகெமிக்கல் மூலம் கிடைக்கும் புரொப்பிலின் பொருட்கள் உற்பத்தி வளாகம் தொடங்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்தை பலப்படுத்த இது உதவும். இந்த வளாகம் செயல்படத் தொடங்குவதால் அன்னியச் செலாவணி மிச்சமாகும். இதன் மூலம் பல வகையான தொழிற்சாலைகள் உருவாகி, நிறைய வேலைவாய்ப்புகள் பெருகும்.

நண்பர்களே,

தொழில், வர்த்தகம் அதிகம் நடைபெறும் நகரமாக கொச்சி உள்ளது. நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நகர மக்கள் அறிவார்கள். சரியான வகையில் போக்குவரத்து இணைப்பு வசதி தேவை என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தான், ரோ-ரோ சேவையை நாட்டுக்கு அர்ப்பணிப்பது விசேஷமான விஷயமாக உள்ளது. சாலை வழியாக முப்பது கிலோ மீட்டர் பயணம் என்பது, நீர்வழித் தடத்தில் மூன்றரை கிலோ மீட்டர் என குறைகிறது. அதாவது சௌகரியம் அதிகம், வணிகம் அதிகம், திறன் உருவாக்கல் அதிகம், நெரிசல் குறைவு, மாசு ஏற்படுதல் குறைவு போன்றவை இதன் மூலம் சாத்தியமாகிறது. போக்குவரத்துச் செலவும் குறைகிறது.

நண்பர்களே,

சுற்றுலாவாசிகள் கேரளாவில் மற்ற இடங்களுக்குச் செல்லும் பயணத்தில் இடைவழி இடமாக கொச்சி நகருக்கு வருவதில்லை. கலாச்சாரம், உணவு, கடற்கரைகள், மார்க்கெட் பகுதிகள், வரலாற்று முக்கியத்துவமான இடங்கள், ஆன்மிகத் தலங்கள் நன்கு அறியப்பட்டவையாக உள்ளன. இங்கு சுற்றுலா தொடர்பான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொச்சியில் சகரிக்கா என்ற சர்வதேச கப்பல் முனையம் தொடங்கப்படுவது இதற்கு ஓர் உதாரணமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சௌகரியமாகவும், வசதியானதாகவும் இந்த முனையம் இருக்கும். கப்பலில் வரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இதன் மூலம் பயன் பெறுவர்.

நண்பர்களே,

கடந்த சில மாதங்களில் சில விஷயங்களை நான் கவனித்து வருகிறேன். நிறைய பேர் தாங்கள் உள்ளூர் பகுதிகளில் மேற்கொள்ளும் பயணங்கள் குறித்த படங்களை சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள், எனக்கும் கூட பலர் எழுதியிருக்கிறார்கள். உலக அளவிலான பெருந்தொற்று சர்வதேச பயணங்களைப் பாதித்த நிலையில், மக்கள் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்கின்றனர். இது நமக்கு நல்லதொரு வாய்ப்பு. ஒருபுறம், உள்ளூர் சுற்றுலா தலங்களை நம்பியுள்ள மக்கள், வியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் நிலையில், நமது இளைஞர்களுக்கு நம் கலாச்சாரம் மீதான ஈர்ப்பும் அதிகரிக்கிறது. பார்க்க, கற்க, புதியவற்றைக் கண்டறிய இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்டார்ட் அட் நிறுவனங்கள் தொடங்கும் இளைஞர்கள், சுற்றுலா தொடர்பான சேவைகளில் புதுமையான சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வர, முடிந்த வரையில் முயற்சிக்க வேண்டும் என உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை அறிவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உலக சுற்றுலா மதிப்பீட்டு பட்டியலில், 65வது இடத்தில் இருந்து இந்தியா 34வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. இதைவிட இன்னும் சிறப்பாக நம்மால் உயர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நண்பர்களே,

பொருளாதார வளர்ச்சியில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன: திறன் வளர்ப்பு மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப நவீன கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அடுத்த இரு வளர்ச்சிப் பணிகள் இந்த விஷயங்கள் தொடர்பானவை. `விக்யான் சாகர்என்பது கொச்சி கப்பல் கட்டும் தள வளாகத்தில் புதிய அறிவுசார் வளாகமாக இருக்கும். இதன் மூலம், நமது மனித வள மேம்பாட்டு திறன் விரிவாக்கம் செய்யப்படும். தொழில் திறன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இது இருக்கும். கடல்வளம் சார்ந்த பொறியியல் கல்வி பயில்வோருக்கு உதவுவதாகவும் இந்த வளாகம் அமையும். வரக்கூடிய காலங்களில், இந்தத் துறை முக்கியத்துவம் பெறும் என்று நான் நம்புகிறேன். இந்தத் துறையில் அறிவார்ந்துள்ள இளைஞர்களின் வீட்டு வாசலைத் தேடி வாய்ப்புகள் வரும். பொருளாதார வளர்ச்சிக்கு, இப்போதுள்ள திறன்களை மேம்படுத்த வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். இங்கே தென்பகுதி நிலக்கரி இறங்குதளம் மறுகட்டுமானத்துக்கு இப்போது அடிக்கல் நாட்டுகிறோம். இதன் மூலம் சரக்குப் போக்குவரத்து செலவுகள் குறையும், சரக்குகள் கையாளும் திறன் அதிகரிக்கும். வணிகம் வளமாக அமைவதற்கு இவை இரண்டுமே முக்கியமானவை.

நண்பர்களே,

இன்றைக்கு, கட்டமைப்பு என்பதற்கான வரையறையும், வாய்ப்புகளும் மாறியுள்ளன. நல்ல சாலைகள், வளர்ச்சிப் பணிகள், சில நகரங்களுக்கு இடையில் போக்குவரத்து இணைப்பு வசதி என்பவற்றைத் தாண்டியதாக அவை உள்ளன. வரக் கூடிய தலைமுறையினருக்கு உயர் தரத்திலான, அதிக அளவிலான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம். தேசிய கட்டமைப்புத் திட்டத்தின் மூலம் ரூ.110 லட்சம் கோடி அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன. அதில் கடலோரப் பகுதிகளுக்கு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இன்றைக்கு, எல்லா கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்தும் உயர் லட்சியத் திட்டத்தை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதேபோல,  நீலப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிக துறைமுகங்கள் உருவாக்குதல், இப்போதுள்ள துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி, பணியாற்றி வருகிறோம். கடலோரப் பகுதியில் மின் உற்பத்தி, நீடித்த கடலோரப் பகுதி மேம்பாடு, கடலோரப் பகுதிகளுக்கு போக்குவரத்து இணைப்பு வசதி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா அமல் செய்யப்படுகிறது. மீனவர் சமுதாய மக்களின் பன்முகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத் திட்டம் அமைந்துள்ளது. அதிக கடன் வசதி கிடைக்க இதில் ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, கடல் உணவு ஏற்றுமதிக்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடல்பாசி வேளாண்மை பிரபலம் அடைந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மீன்வளத் துறையை இன்னும் துடிப்பானதாக ஆக்குவதற்கு, ஆராய்ச்சியாளர்களும், புதுமை சிந்தனையாளர்களும் புதிய சிந்தனைகளை முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடினமாக உழைக்கும் நமது மீனவர்களுக்கு பெரிய மரியாதை அளிப்பதாக இது இருக்கும்.

நண்பர்களே,

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், கேரளாவுக்குப் பயன்தரக் கூடிய பல திட்டங்களை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோவின் அடுத்த கட்ட விரிவாக்கம் இதில் அடங்கும். இந்த மெட்ரோ நெட்வொர்க் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. ஆக்கபூர்வ பணி செயல்பாடுகளுக்கு நல்ல உதாரணமாக இது அமைந்துள்ளது.

நண்பர்களே,

கடந்த ஆண்டு, மனிதகுலம் இதுவரை சந்தித்திராத சவாலை சந்தித்த ஆண்டாக அமைந்துவிட்டது. 130 கோடி இந்தியர்கள் மூலம் கிடைத்த சக்தியால், கோவிட்-19 பாதிப்புக்கு எதிரான நமது தேசத்தின் நடவடிக்கைகள் உணர்வுப்பூர்வமானதாக அமைந்திருந்தன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தேவைகள் குறித்து அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறது. வளைகுடா பகுதியில் உள்ள இந்தியர்கள் குறித்து நமது நாடு பெருமைப்படுகிறது. கடந்த முறை நான் சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம், பஹ்ரைன் சென்ற சமயங்களில் அங்கு வாழும் இந்தியர்களுடன் நேரத்தை செலவிட்டது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். அவர்களுடன் நான் உணவருந்தி, கலந்துரையாடினேன். வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலமாக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதுபோன்ற முக்கியமான தருணங்களில் அவர்களுக்கு உதவுவதை அரசு பெருமையாகக் கருதுகிறது. கடந்த சில ஆண்டுகளில், வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடிக் கொண்டிருந்த பல இந்தியர்களை அந்த அரசுகள் விடுதலை செய்துள்ளன. அதுபோன்ற மக்களுக்காக அரசு எப்போதும் குரல் கொடுக்கும். இந்த விஷயத்தில் கனிவுடன் நடந்து கொண்ட அந்த நாடுகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய தனிப்பட்ட கோரிக்கைகளை வளைகுடா நாடுகளின் அரசுகள் கனிவுடன் ஏற்றுக் கொண்டு, நம் மக்கள் மீது சிறப்பு அக்கறை காட்டியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள இந்தியர்கள் திரும்பி வருவதற்கு அவர்கள் உயர் முன்னுரிமை அளிக்கின்றனர். இந்த சேவைக்கு உதவ போக்குவரத்து வசதிகளை நாம் உருவாக்கினோம். வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள், இந்த அரசு எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

நண்பர்களே,

இன்றைக்கு நாம் வரலாற்றின் முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இன்றைய சூழலில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான், வரக் கூடிய காலங்களில் நமது வளர்ச்சிப் பாதைக்கு அடித்தளம் அமைப்பதாக இருக்கும். பிரச்சினைகள் வரும் போது மீண்டெழுந்து, உலக நன்மைக்கான பங்களிப்பு செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. சரியான வாய்ப்புகள் கிடைத்தால் தங்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என நமது மக்கள் காட்டியுள்ளனர். அந்த வாய்ப்புகளை நாம் உருவாக்கிக் கொண்டே இருப்போம். நாம் ஒன்றுபட்டு நின்று தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம். இன்றைக்கு தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக கேரள மக்களுக்கு மீண்டும் ஒரு முறை என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி. மிக்க நன்றி.

ஓராயிரம் நன்றி

——