மேதகு பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே, ஆயுபோவன், வணக்கம்!
நண்பர்களே
இந்த முக்கியமான தருணத்தில் உங்களுடன் இணைவது எனது பெரும்பேறாகும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜீய மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
நண்பர்களே,
இந்தியாவும் இலங்கையும் கலாச்சாரம், வணிகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்றவை. வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் துறைமுகம் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டினப்பாலை, மணிமேகலை போன்ற சங்க இலக்கியங்கள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள், கப்பல்கள் பற்றிப் பேசுகின்றன. மகாகவி சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை‘ என்ற பாடலில் இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியிருக்கிறார். இந்தப் படகு சேவை அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகள் அனைத்தையும் உயிர்ப்பித்துக் கொண்டுவருகிறது.
நண்பர்களே,
அதிபர் விக்கிரமசிங்கவின் அண்மைக்காலப் பயணத்தின் போது, நமது பொருளாதாரக் கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணம் ஒன்றை நாங்கள் கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையப்பொருளாகும். இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல. இது நமது நாடுகளை, நமது மக்களை, நமது இதயங்களை நெருக்கமாகக் கொண்டு வருகிறது. வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை இணைப்பு மேம்படுத்துகிறது. இரு நாட்டு இளைஞர்களுக்கும் இது வாய்ப்புகளை உருவாக்குகிறது.
நண்பர்களே,
2015 ஆம் ஆண்டு நான் இலங்கைக்குப் பயணம் செய்ததைத் தொடர்ந்து, தில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டன. பின்னர், இலங்கையிலிருந்து முதல் சர்வதேச விமானம் புனித நகரமான குஷிநகரில் தரையிறங்கியதை நாம் கொண்டாடினோம். சென்னை – யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே படகுப் போக்குவரத்து இந்த திசையில் மற்றொரு முக்கிய செயலாகும்.
நண்பர்களே,
இணைப்புக்கான நமது பார்வை போக்குவரத்துத் துறைக்கு அப்பாற்பட்டது. இந்தியாவும் இலங்கையும் ஃபின்-டெக், எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. யுபிஐ காரணமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இந்தியாவில் வெகுஜன இயக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது. யுபிஐ, லங்கா பே ஆகியவற்றை இணைப்பதன் மூலம் ஃபின்-டெக் துறை இணைப்புக்கு நாம் பணியாற்றி வருகிறோம். நமது வளர்ச்சிப் பயணத்திற்கு நமது நாடுகளுக்கு எரிசக்திப் பாதுகாப்பு மிக முக்கியமானது. எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த நமது எரிசக்திக் கட்டமைப்புகளை நாம் இணைத்து வருகிறோம்.
நண்பர்களே,
முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டாண்மை நமது இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும். யாரையும் விட்டு வைக்காமல், வளர்ச்சியை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே நமது நோக்கம். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாகத் தொட்டுள்ளன. வடக்கு மாகாணத்தில் குடியிருப்புகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உதவி தொடர்பான பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தைத் தரமுயர்த்துவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அது எதுவாக இருந்தாலும், வடக்கிலிருந்து தெற்கை இணைக்கும் ரயில் பாதைகளை மறுசீரமைத்தல்; புகழ்பெற்ற யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தின் கட்டுமானம்; இலங்கை முழுவதும் அவசரகால அம்புலன்ஸ் சேவை தொடக்கம்; டிக் ஓயாவில் உள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை உள்பட, அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாம் செயல்பட்டு வருகிறோம்.
நண்பர்களே,
இந்தியா அண்மையில் ஜி 20 உச்சிமாநாட்டை நடத்தியது உங்களுக்குத் தெரியும். வசுதைவ குடும்பகம் என்ற நமது தொலைநோக்குப் பார்வையை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது. இந்தத் தொலைநோக்கின் ஒரு பகுதி, முன்னேற்றம் மற்றும் வளத்தைப் பகிர்வதன் மூலம் நமது அண்டை நாடுகளுக்கு முதலிடம் அளிப்பதாகும். ஜி 20 உச்சிமாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும். இது முழு பிராந்தியத்திலும் பெரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகத் தொடர்பை வலுப்படுத்துவதால் இலங்கை மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள். இந்தப்படகு சேவையை இன்று வெற்றிகரமாகத் தொடங்கியமைக்காக அதிபர், அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றையத் தொடக்கத்துடன் ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே படகு சேவையை மீண்டும் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நண்பர்களே,
நமது மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது. நன்றி!
***
ANU/AD/SMB/DL
Ferry services between India and Sri Lanka will enhance connectivity, promote trade and reinforce the longstanding bonds between our nations. https://t.co/VH6O0Bc4sa
— Narendra Modi (@narendramodi) October 14, 2023