Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை

இந்தியப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா – அமெரிக்கா கூட்டு அறிக்கை


அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார்.

சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.

இரு நாடுகளிடையே 21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்”  குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கா இந்த முயற்சியின் கீழ், பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டு  அமையும் என்று இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

பாதுகாப்பு

அமெரிக்க-இந்தியா உத்திசார் நலன்களின் ஆழமான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்து, பல துறைகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு கூட்டாண்மைக்கான தங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்காக, 21-ம் நூற்றாண்டில் அமெரிக்க-இந்தியா முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான புதிய பத்து ஆண்டு கட்டமைப்பில் இந்த ஆண்டு கையெழுத்திடும் திட்டங்களை தலைவர்கள் அறிவித்தனர்.

அமெரிக்காவின் பாரம்பரிய பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிற்கு வழங்கப்படுவதில் இன்றுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, ராணுவ பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் தரைப்படையினரின் போர் வாகனங்களுக்கான புதிய கொள்முதல் மற்றும் கூட்டு உற்பத்தி ஏற்பாடுகளையும் இந்த ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அவர்கள் அறிவித்தனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு வரம்பை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் ஆறு கூடுதல் P-8I கடல்சார் ரோந்து விமானங்களுக்கான கொள்முதலை இறுதி செய்வது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.

அமெரிக்காவின் உத்திசார் வர்த்தக அங்கீகாரத்துடனான முக்கிய கூட்டாளியாக இந்தியா இருப்பதுடன் குவாட் அமைப்பின் முக்கிய கூட்டாளியாகவும் இருப்பதை அங்கீகரித்து, அமெரிக்காவும் இந்தியாவும் சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட ஆயுதப் பரிமாற்ற விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யும். இது, பாதுகாப்பு வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், பராமரிப்பு, மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பை ஒழுங்குபடுத்தும். தங்கள் கொள்முதல் அமைப்புகளை சிறப்பாக சீரமைக்கவும், பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் பரஸ்பர விநியோகத்தை செயல்படுத்தவும் பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம் குறித்து இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் தலைவர்கள் முடிவு செய்தனர்.

விண்வெளி, வான் பாதுகாப்பு, ஏவுகணை, கடல்சார் தொழில்நுட்பங்கள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தலைவர்கள் உறுதியளித்தனர். இந்தியாவிற்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்த அதன் கொள்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது.

பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்கா அமெரிக்க-இந்தியா இடையே செயல் திட்டத்தை உருவாக்கி, தன்னாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இந்தோ-பசிபிக் பகுதியில் தொழில்முறை கூட்டாண்மை மற்றும் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக தன்னாட்சி அமைப்புகள் தொழில் கூட்டணியை தலைவர்கள் அறிவித்தனர்.

பிராந்திய அளவிலான பாதுகாப்பை வலுப்படுத்த அதிநவீன கடல்சார் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆளில்லா வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை இணைந்து உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட தன்னாட்சி தொழில்நுட்பங்கள் குறித்து அமெரிக்காவின் ஆண்ட்ரில் தொழில் நிறுவனம், இந்தியாவின் மஹிந்திரா குழுமம் இடையே புதிய ஒப்பந்தத்தையும், மேலும் தற்போது செயல்பாட்டில் உள்ள L3 ஹாரிஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இடையேயான இழுவை வரிசை அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கான ஒப்பந்தத்தையும் தலைவர்கள் வரவேற்றனர்.

மேம்பட்ட பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள், சமீபத்திய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதன் மூலம், வான், நிலம், கடல், விண்வெளி மற்றும் இணையவெளி ஆகிய அனைத்து களங்களிலும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தலைவர்கள் உறுதியளித்தனர்.  இரு நாடுகளிடையே இந்தியாவில் நடத்தப்படவுள்ள பெரிய அளவிலான முப்படைப் பயிற்சியையும் தலைவர்கள் வரவேற்றனர்.

இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க மற்றும் இந்திய ராணுவங்களின் வெளிநாட்டுப் பயன்பாடுகளை ஆதரிப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும் புதிய தளத்தை உருவாக்க தலைவர்கள் உறுதியளித்தனர்.

வர்த்தக மற்றும் முதலீடு

இருநாட்டு மக்களை மேலும் வளப்படுத்தவும், இருநாடுகளின் வலிமைக்காகவும், பொருளாதார மற்றும் விநியோக முறைகளை மேலும் புதுமையாக்கவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்தவும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதி செய்யும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதற்காக, “மிஷன் 500″ என்ற ஒரு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மொத்த இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி 2030-ம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தும்.

இதற்காக பல துறை இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடப்பாண்டில் நடத்தும் திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் அறிவித்தனர்.

இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும், வர்த்தக உறவின் விருப்பங்களை முழுமையாக பிரதிபலிப்பதை உறுதி செய்வதற்கும் இருதரப்பிலும் மூத்த பிரதிநிதிகளை நியமிக்க தலைவர்கள் உறுதியளித்தனர்.

அமெரிக்கா, இந்தியா இடையே சரக்கு மற்றும் சேவைகள் துறை முழுவதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ளவும் இந்த புதுமையான, விரிவான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் வகை செய்யும். மேலும் சந்தை அணுகலை அதிகரிப்பதற்கும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளை குறைப்பதற்கும், விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பையும் இந்த ஒப்பந்தம் வலுவாக்கும்.

அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் கனரக தொழில்களில் பசுமை முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தலைவர்கள் உறுதியளித்தனர். இது சம்பந்தமாக, சுமார் 7.35 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொடர்ச்சியான முதலீடுகளை தலைவர்கள் வரவேற்றனர். இந்த முதலீடுகள் மூலம் உள்ளூர் தரப்பில் 3,000-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும்.

எரிசக்தி பாதுகாப்பு

இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நல்வாழ்வு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு எரிசக்தி பாதுகாப்பு அடிப்படையானது என்பதை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். மலிவான மற்றும் நிலையான எரிசக்தி சந்தைகளை உறுதி செய்வதற்கு அமெரிக்க-இந்தியா ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர்.

உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பை இயக்குவதில் முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் என்ற வகையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்த தலைவர்கள், எண்ணெய், எரிவாயு மற்றும் சிவில் அணுசக்தி உள்ளிட்ட அமெரிக்க-இந்தியா எரிசக்தி பாதுகாப்பு கூட்டாண்மைக்கு மீண்டும் உறுதியளித்தனர்.

உலகளவில் அதிகரித்து வரும் எரிசக்தி பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்திய-அமெரிக்க மக்களுக்கு மலிவான மற்றும் நம்பகமான எரிசக்தி விநியோகத்தை வழங்க ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தியை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

நெருக்கடி காலங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க உத்திசார் பெட்ரோலிய பொருட்கள் இருப்புக்களின் மதிப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். மேலும் கச்சா எண்ணெய் இருப்பை விரிவுபடுத்த முக்கிய தோழமை நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் இரு தலைவர்களும் தீர்மானித்தனர். இந்தச் சூழலில், சர்வதேச எரிசக்தி நிறுவனத்தில் முழு உறுப்பினராக இந்தியா சேர அமெரிக்கத் தரப்பு அதன் ஆதரவை உறுதிப்படுத்தியது.

மேலும் இருதரப்பு எரிசக்தி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும், நமது வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இயற்கை எரிவாயுவின் முன்னணி விநியோகஸ்தராக அமெரிக்காவை நிலைநிறுத்துவதற்கும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இயற்கை எரிவாயு, ஈத்தேன் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் துறையில் வர்த்தகத்தை அதிகரிக்க மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர். கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்கவும், இரு நாடுகளின் எரிசக்தி நிறுவனங்களுக்கிடையில் ஒத்துழைப்பை எளிதாக்கவும் இருதலைவர்களும் உறுதியளித்தனர்.

சாத்தியமான தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் இந்தியாவில் அமெரிக்க அணு உலைகளை நிறுவும் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை தலைவர்கள் அறிவித்தனர். அணுசக்தி சட்டம் மற்றும் அணு உலைகளில் ஏற்படும் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பு வெளியானதற்கு இரு தரப்பினரும் வரவேற்றனர். இந்த சட்டம் அணு உலைகளின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்திய மற்றும் அமெரிக்க தொழில்துறையின் ஒத்துழைப்பை எளிதாக்கும்.

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

அமெரிக்க-இந்தியா உத்திசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சி தொடங்கப்படுவதாகவும் தலைவர்கள் அறிவித்தனர், இது பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் அரசு மற்றும் தனியார் துறை ஒத்துழைப்பை ஊக்குவிக்கும். மேலும் தொழில்நுட்ப விற்பனையாளர்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் தொழில்நுட்பங்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும்.

அமெரிக்க-இந்தியா உத்திசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பை விரைவாக மேற்கொள்ளும் வகையில் இரு நாடுகள் இடையே செயல் திட்டத்தை முன்வைக்கவும், இதற்கான தடைகளை அடையாளம் காண, அமெரிக்க மற்றும் இந்திய தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

TRUST முன்முயற்சியின் ஒரு பகுதியாக, குறைக்கடத்திகள், முக்கியமான கனிமங்கள், மேம்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட நம்பகமான மற்றும் உறுதியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்க தலைவர்கள் உறுதியளித்தனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, முக்கியமான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான இந்திய உற்பத்தித் திறனை விரிவுபடுத்த பொது மற்றும் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த முதலீடுகள்  சிறந்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். முக்கிய விநியோகச் சங்கிலிகளை பல்வகைப்படுத்துவதுடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் உயிர்காக்கும் மருந்து பற்றாக்குறையின் அபாயத்தைக் குறைக்கும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கு தேவையான கனிமங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்தியாவும், அமெரிக்காவும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பை துரிதப்படுத்தும். முக்கியமான கனிம மதிப்புச் சங்கிலியிலும் முதலீட்டை ஊக்குவிக்கும். அத்துடன் அமெரிக்காவும், இந்தியாவும் உறுப்பினர்களாக உள்ள கனிம பாதுகாப்பு கூட்டாண்மை மூலம், முக்கியமான கனிமங்களின் ஆய்வு, பயன்பாடு, செயலாக்கம், மறுசுழற்சி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன. இதற்காக, அலுமினியம், நிலக்கரி சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற கனரக தொழில்களிலிருந்து முக்கியமான கனிமங்களை (லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய தாதுமண் உட்பட) மீட்டெடுத்து செயலாக்குவதற்கான ஒரு புதிய அமெரிக்க-இந்திய திட்டமான கனிம மீட்பு முயற்சியைத் தொடங்குவதாக தலைவர்கள் அறிவித்தனர்.

2025-ம் ஆண்டை அமெரிக்க-இந்திய சிவில் விண்வெளி ஒத்துழைப்புக்கு முன்னோடி ஆண்டாக தலைவர்கள் குறிப்பிட்டனர். முதல் இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான AXIOM மூலம் NASA-ISRO முயற்சிக்கான திட்டங்களும், இரட்டை ரேடார்களைப் பயன்படுத்தி பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை முறையாக வரைபடமாக்கும் முதல் கூட்டு “NISAR” பணியை முன்கூட்டியே தொடங்குவதற்கான திட்டங்களும் இதில் அடங்கும். நீண்ட கால மனித விண்வெளிப் பயணங்கள், விண்வெளிப் பயணப் பாதுகாப்பு மற்றும் நிபுணத்துவத்தைப் பகிர்தல், கிரகப் பாதுகாப்பு உட்பட வளர்ந்து வரும் பகுதிகளில் தொழில்முறை பரிமாற்றங்கள் உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சியில் அதிக ஒத்துழைப்புக்கு தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். மேம்பட்ட விண்வெளிப் பயணம், செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி ஏவுதள அமைப்புகள், விண்வெளி நிலைத்தன்மை, விண்வெளி சுற்றுலா மற்றும் மேம்பட்ட விண்வெளி உற்பத்தி போன்ற வழக்கமான மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் தொழில்துறை ஈடுபாடுகள் மூலம் வணிக விண்வெளி ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க தலைவர்கள் உறுதிபூண்டனர்.

அமெரிக்கா மற்றும் இந்திய அறிவியல் ஆராய்ச்சி சமூகங்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை தலைவர்கள்  வலியுறுத்தினர். முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை மற்றும் இந்திய அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே ஒரு புதிய கூட்டாண்மையை அவர்கள் அறிவித்தனர். குறைக்கடத்திகள், இணைக்கப்பட்ட வாகனங்கள், இயந்திர கற்றல், அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு, அறிவார்ந்த போக்குவரத்து அமைப்புகள் மற்றும் எதிர்கால உயிரி உற்பத்தி ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சியை செயல்படுத்த அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளைக்கும், பல இந்திய அறிவியல் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை இந்தக் கூட்டாண்மை உருவாக்குகிறது.

தொழில்நுட்ப பாதுகாப்பை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், உயர் தொழில்நுட்ப வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், நமது இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான தடைகளைக் குறைப்பதற்கும் தங்கள் அரசுகள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று தலைவர்கள் தீர்மானித்தனர். முக்கியமான விநியோகச் சங்கிலிகளின் அதிகப்படியான செறிவை சுரண்ட முற்படும் மூன்றாம் தரப்பினரால் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் நியாயமற்ற நடைமுறைகளின் பொதுவான சவாலை எதிர்கொள்ள ஒன்றாகச் செயல்படவும் தலைவர்கள் தீர்மானித்தனர்.

பன்முக ஒத்துழைப்பு

இந்தியா, அமெரிக்கா இடையிலான நெருங்கிய கூட்டாண்மை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற, வெளிப்படையான  வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என்பதை தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். குவாட் கூட்டாளிகளாக, இந்தக் கூட்டாண்மை ஆசியான் மையத்தை அங்கீகரிப்பது, சர்வதேச சட்டம் மற்றும் நல்லாட்சியை கடைபிடிப்பது, பிற சட்டப்பூர்வ பயன்பாடுகளுக்கான ஆதரவை  வழங்குவது, தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம், சர்வதேச சட்டத்தின்படி கடல்சார் பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஆதரவு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது என்பதை தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக புதுதில்லியில் அதிபர்  டிரம்பை  வரவேற்க பிரதமர் மோடி ஆவலுடன் காத்திருக்கிறார், அதற்கு முன்னதாக இயற்கை பேரழிவுகள் மற்றும் கடல்சார்  பிரச்சனைகளால்  பாதிக்கப்படும் பொதுமக்களை பத்திரமாக மீட்க வகை செய்யும் பகிரப்பட்ட முயற்சிகளைக் கொண்ட விமானப் போக்குவரத்து திறன் குறித்த புதிய குவாட் முயற்சிகளை தலைவர்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் கூட்டாண்மைகளை அதிகரிக்கவும், தூதரக மட்டத்தில் ஆலோசனைகளை மேம்படுத்தவும், மத்திய கிழக்கில் கூட்டாளர்களுடன் உறுதியான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் தலைவர்கள் தீர்மானித்தனர். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை  உறுதி செய்வதற்கு, முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வழித்தடங்களில் முதலீடு செய்வதன் அவசியத்தை அவர்கள் எடுத்துரைத்தனர். 2025-ம் ஆண்டில் புதிய முயற்சிகளை அறிவிப்பதற்காக, அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் மற்றும் I2U2 குழுமத்தின் கூட்டாளர்களைக் ஒருங்கிணைக்க தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சி, மனிதாபிமான உதவி, பாதுகாப்பு வழங்கும் நாடாக உள்ள  இந்தியாவின் பங்கை அமெரிக்கா பாராட்டுகிறது. இந்தச் சூழலில், பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தலைவர்கள் உறுதியளித்தனர். ஐந்து கண்டங்களை  கடலுக்கடியிலான கேபிள்கள் மூலம் இணைக்கவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உலகளாவிய டிஜிட்டல் நெடுஞ்சாலைகளை வலுப்படுத்தவும் 50,000 கி.மீ.க்கு மேல் நீட்டிக்கப்படும் கடலுக்கடியில் கேபிள் பதிக்கும் திட்டத்தில் பல பில்லியன், பல ஆண்டு முதலீட்டை மெட்டா அறிவித்ததையும் தலைவர்கள் வரவேற்றனர். நம்பகமான விற்பனையாளர்களைப் பயன்படுத்தி, இந்தியப் பெருங்கடலில் கடலுக்கடியில் கேபிள்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்ய விரும்புகிறது.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் முக்கியமான கனிமங்கள்  விஷயத்தில் வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்க மேற்கு இந்தியப் பெருங்கடல், மத்திய கிழக்கு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் புதிய பன்முக நங்கூரக் கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்தனர். 2025-ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் இந்த துணைப் பிராந்தியங்களில் புதிய கூட்டாண்மை முயற்சிகளை அறிவிக்க தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பன்னாட்டு அமைப்புகளில் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தலைவர்கள் தீர்மானித்தனர். அரபிக் கடலில் கடல் பாதைகளைப் பாதுகாக்க உதவும் ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் கடற்படை பணிக்குழுவில் எதிர்காலத் தலைமைப் பங்கை ஏற்கும் இந்தியாவின் முடிவைத் தலைவர்கள் பாராட்டினர்.

பயங்கரவாதத்தின் உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும், பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அகற்ற வேண்டும் என்றும் தலைவர்கள் மீண்டும் உறுதி ஏற்றுக்கொண்டனர். 26/11 அன்று மும்பையில் நடந்த தாக்குதல்கள் மற்றும் 2021 ஆகஸ்ட் 26, அன்று ஆப்கானிஸ்தானில் அபே கேட் குண்டுவெடிப்பு போன்ற கொடூரமான செயல்களைத் தடுக்க, அல்-கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட குழுக்களின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒத்துழைப்பை வலுப்படுத்த அவர்கள் உறுதியளித்தனர். நமது மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான பகிரப்பட்ட விருப்பத்தை அங்கீகரித்து, தஹாவுர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. 26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்களின் குற்றவாளிகளை விரைவாக நீதியின் முன் நிறுத்தவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த அதன் பிரதேசம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைவர்கள் மேலும் வலியுறுத்தினர். பேரழிவு ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் அவற்றின் விநியோக அமைப்புகளைத் தடுக்கவும், பயங்கரவாதிகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் அத்தகைய ஆயுதங்களை அணுகுவதைத் தடுக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு

இரு நாடுகளையும் சேர்ந்த மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் ஒப்புக்கொண்டனர். இந்தச் சூழலில், 300,000-க்கும் மேற்பட்ட வலுவான இந்திய மாணவர் சமூகம் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்களுக்கு மேல் பங்களிப்பதாகவும், பல நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்க உதவுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊழியர்களின் திறமை, செயல்பாடு ஆகியவை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளித்துள்ளது என்பதை அவர்கள் அங்கீகரித்தனர். புதுமைகளை வளர்ப்பது, கற்றல் விளைவுகளை மேம்படுத்துவது, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பணியாளர்களை உருவாக்குவது ஆகியவற்றில் சர்வதேச கல்வி ஒத்துழைப்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரு தலைவர்களும், இந்தியாவில் அமெரிக்காவின் முதன்மையான கல்வி நிறுவனங்களின் கடல்சார் வளாகங்களை அமைத்தல் போன்ற முயற்சிகள் மூலம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தத் தீர்மானித்தனர்.

சட்டவிரோத குடியேற்ற மைப்புகள், போதைப்பொருள் பயங்கரவாதிகள், மனிதர்கள் மற்றும் ஆயுதங்களை கடத்துபவர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச் செயல்கள், இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் பிற அமைப்புகள் மீது தீர்க்கமான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

அரசுகள், தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையே உயர் மட்ட ஈடுபாட்டை நிலைநிறுத்தவும், பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான நமது மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும்,  அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் உறுதிபூண்டுள்ளனர். உலகளாவிய நன்மைக்கு சேவை செய்யும், சுதந்திரமான மற்றும் தடையற்ற இந்தோ-பசிபிக் பகுதிக்கு பங்களிக்கும் நீடித்த இந்தியா-அமெரிக்க கூட்டாண்மைக்கான தொலைநோக்கை  செயல்படுத்த இருதலைவர்களும் உறுதியளித்தனர்.

***

AD/PKV/GK/RR/AG/DL